அண்மைய செய்திகள்

recent
-

வங்காலையில் இளைஞர்களைத் தாக்கி பொலிஸார் கைது செய்ததால் பெரும் பதற்றம்


மன்னார் வங்காலைக் கிராமத்தில் வியாழக்கிழமை இரவு மூன்று இளைஞர்களை பொலிஸார் மோசமாகத் தாக்கியதுடன் அவர்களை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்ததால் அங்கு இரவு முழுவதும் பெரும் பதற்ற நிலைகாணப்பட்டது. 
இக்கிராம மக்கள் பொலிஸ் நிலையத்தைச் சூழ்ந்து கைதான மூவரையும் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்ததுடன் வங்காலை புனித அன்னம்மாள் ஆலயத்தின் மணியையும் ஒலிக்கச் செய்தனர்.
ஆலய மணி இரவில் அடித்தால் ஏதோ விபரீதம் என்பதால் மக்கள் வீதிகளிலும் வீடுகளின் முன்பாகவும் குழுமியிருந்தனர். பின்னர் மன்னார் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அங்கிருந்து பொலிஸ் அதிகாரிகள் வந்து பொதுமக்களுடன் உரையாடி நடந்த சம்பவத்தைக் கேட்டு கைதான மூன்று இளைஞர்களையும் நள்ளிரவு விடுவித்தனர்.
இச் சம்பவம் குறித்து வங்காலை மக்கள் தெரிவித்துள்ளதாவது;
வியாழக்கிழமை இரவு வழமைக்கு மாறாக வங்காலை பொலிஸார் வீதிகளில் மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்தவர்களை சோதனையிட்டனர். தலைக்கவசம் அணியாமல் வாகன அனுமதிப்பத்திரம் இல்லாமல், மது அருந்திவிட்டு வருபவர்கள் மீது சோதனை மேற்கொண்டனர்.
இச்சமயத்தில் மூன்று இளைஞர்கள் தலைக் கவசம் அணியாமல் அவ்வழியாக வந்தபோது பொலிஸார் அவர்களிடம் எதுவித கேள்வியும் கேட்காமல் அவர்களை தாக்கியதாக மக்கள் தெரிவித்தனர்.
அதன் பின்னர் அவர்களையும் மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் வங்காலை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இந்தச் சம்பவத்தையடுத்தே வங்காலையில் வியாழக்கிழமை இரவு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
சில தினங்களுக்கு முன்னர் வங்காலையில் மர்ம மனிதர் என்று இரு தென்பகுதி இளைஞர்கள் தலைக்கவசம் அணிந்து மோட்டார் கைக்கிளில் நடமாடியதையடுத்து பொதுமக்களால் பிடிக்கப்பட்டு வங்காலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
இச்சம்பவத்தையடுத்து பழிவாங்கும் நோக்கில் வங்காலை பொலிஸார் இவ்வாறு செயற்பட்டதாகவும் தாம் யார் என்பதைக் காட்டுகின்றோம் என்று சவால் விடுத்ததாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
வங்காலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மக்களுடன் முரண்பட்டு இனவாதப்போக்குடன் நடந்து கொள்வதாகவும் அம் மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் வங்காலை மீனவர்களிடம் பணம் கேட்டு வாங்குவதாகவும் அந்த மக்கள் வன்னி மாவட்ட எம்.பி.க்களிடம் முறையிட்டுள்ளனர்.
வங்காலையில் இளைஞர்களைத் தாக்கி பொலிஸார் கைது செய்ததால் பெரும் பதற்றம் Reviewed by NEWMANNAR on August 21, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.