அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் உப்பளத்தையும் விட்டு வைக்காதா வன்னி அமைச்சர் - பாராளுமன்றத்தில் அம்பலப்படுத்திய பா .உ சாள்ஸ் நிர்மலநாதன்

- வன்னி பாராளுமன்ற உறுப்பினர்  சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களின் பாராளுமன்ற உரை -23-3-2016

கெளரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே, கெளரவ உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் இலங்கையின் பொருளாதாரம் தொடர்பான பிரதம அமைச்சரது கூற்றின்மீது விவாதத்தை கோரி  ஒரு பிரேரணையை இன்று இங்கே கொண்டுவந்தமைக்காக நான் அவருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

எமது இலங்கை நாடு 1948ஆம் ஆண்டு சுதந்திரமடைந்தபோது, அது அபிவிருத்தியில் ஆசியாக் கண்டத்திலே மூன்றாமிடத்தில் இருந்தது. அதாவது முதலாமிடத்தில் ஜப்பானும் இரண்டாமிடத்தில் மலேசியாவும் மூன்றாமிடத்தில் இலங்கையும் இருந்தன. சிங்கப்பூரின் தந்தை என்று அழைக்கப்படுகின்ற லீ குவான் யூ அவர்கள்,அன்று இலங்கையின் அபிவிருத்திப் பாதையில் தான் தனது நாட்டை முன்னெடுத்துச் செல்ல விரும்புவதாகச் சொன்னார். ஆனால், இன்று 2016ஆம் ஆண்டில் எமது நாடு எங்கிருக்கின்றது என்பதைப் பற்றிச் சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இங்கு பேசிய பிரதம அமைச்சர் அவர்கள் ஒரு விடயத்தைக் குறிப்பிட்டிருந்தார். அதாவது, எமது இலங்கையைப் பொருளாதார ரீதியில் எவ்வாறு முன்னேற்றமடையச் செய்வது என்று சீனா,இந்தியா, சிங்கப்பூர், ஈரான், ஜப்பான் போன்ற நாடுகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும்;

அவர்களிடம் கடன் பெற்று எமது நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற விதத்திலான கருத்தை அவர் தெரிவித்திருந்தார். உண்மையில் மனவேதனையான விடயம் ஒன்று உண்டு. அதாவது,

இன்று எமது இலங்கைத் தீவிலிருக்கின்ற வளங்களைச் சரியாகப் பயன்படுத்துவதற்கு ஏற்றஎந்தவித பொருளாதாரத் திட்டங்களும் எமது அரசாங்கத்திடமில்லை என்பதை இந்த நேரத்தில்நான் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். இன்று அபிவிருத்தியடைந்த நாடுகளில் இருக்கின்ற

ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் தங்களுடைய நாட்டுக்காகத்தான் உழைத்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால், எமது நாட்டின் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் தங்களுடைய

சுயநலத்துக்காக, கட்சியை வளர்க்க வேண்டும், தங்களுடைய தொகுதியை வளர்க்க வேண்டும்

என்றுதான் சிந்தித்துக்கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு மாறிமாறி வருகின்ற ஒவ்வோர்ஆட்சியாளரும் தமது கட்சியை எவ்வாறு வளர்ப்பது என்று மாத்திரம் சிந்தித்தால் எமது நாடு எந்தக்காலத்திலும் முன்னேறாது என்பதை நான் இந்தச் சபையிலே சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

அதேநேரம், அபிவிருத்தியடைந்த நாடுகள் பொருளாதாரத்தில் முன்னேற்றமடைவதற்கு மிகமுக்கியமான காரணம் அந்த நாட்டில் இலஞ்சம் கொடுத்து எதையும் செய்யவேண்டியதேவையில்லாமல் இருப்பதுதான். கடந்த காலங்களில் வெளிநாடுகளிலுள்ள தனியார்நிறுவனங்கள் என்றாலும் சரி, வெளிநாட்டு அரசாங்கங்கள்  என்றாலும் சரி, அவர்கள் எமது நாட்டில் எந்தவொரு பெரிய முதலீட்டைச் செய்வதற்கும் பல மில்லியன் டொலர்களைக் கைமாற்ற வேண்டிஇருந்த நிலை தற்பொழுதும் தொடர்ந்துகொண்டிருக்கின்றது என்பதைத்தான் நான் இந்த நேரத்தில்
சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

 எமது நாட்டில் இலஞ்சம் இல்லாமல் ஒரு வேலையைச்செய்ய முடியும் என்று சர்வதேச முதலீட்டாளர்கள் மனங்களில் தோன்றும்வரை இங்கே

எந்தவிதமான பொருளாதார முன்னேற்றமும் இருக்க முடியாது. ஆகவே, முதலாவதாக இந்தநாட்டில் இலஞ்சத்தை ஒழிக்கவேண்டும். இலஞ்சத்தை ஒழித்தால் மட்டுமே, எமது நாட்டின்

பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும் என்று நான் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

இன்று சீனாவுடன் கதைத்து என்ன செய்யலாம், இந்தியாவுடன் கதைத்து என்ன செய்யலாம் என்று

சிந்திக்கின்ற இந்த அரசாங்கம், எங்களுடைய விவசாயத்தை எப்படி நவீனமுறைப்படுத்தி,அதனூடாக எமது மக்களின் வாழ்வாதாரத்தை  உயர்த்த முடியுமென்று சற்றேனும்சிந்திக்கவில்லை. அதாவது, ground level - அடிமட்டத்தில் இருக்கின்ற கிராமப்புற மக்களுடைய

வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக, அவர்கள் செய்கின்ற தொழில்களை நவீனமுறைப்படுத்தி,

அதன்மூலம் உற்பத்தியைப் பெருக்குவதற்கு அரசாங்கம் பக்கபலமாகச் செயற்படாவிட்டால்,

நாங்கள் எந்த நாட்டுடன் கதைத்தும் எங்களுடைய நாட்டை முன்னேற்ற முடியாது. ஏனென்றால்,

எங்களுடைய நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற விவசாயமானது, எமது மக்கள் 50 வருடங்களுக்கு

முன்பு எந்த வகையில் அதனைச் செய்தார்களோ, அதே முறையிலானதாகத்தான் இன்றும்

மேற்கொள்ளப்படுகின்றது. இன்று குறிப்பாக இந்தியாவை எடுத்துக்கொண்டால், அங்கு

விவசாயத்தை நவீனமுறைப்படுத்தி முற்றுமுழுதாக சொட்டுநீர் பயிர்ச்செய்கையாக

மாற்றியுள்ளதன்மூலம் நீரையும் மிச்சப்படுத்துகிறார்கள். இந்த சொட்டுநீர் விவசாயத்தை

எந்தளவுக்கு இந்நாட்டு அரசாங்கம் மக்களிடத்தில் கொண்டுசெல்ல முயற்சிக்கின்றது என்பது

சந்தேகத்துக்குரிய ஒரு விடயமாகத்தான் இருக்கின்றது. எங்களுடைய விவசாயிகளின்

வாழ்வாதாரத்தை முன்னேற்றுகின்றபோதுதான், எமது பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும்

என்று நான் இந்த நேரத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

அதேநேரத்தில், இன்று விவசாயிகளினால் உற்பத்தி செய்யப்படுகின்ற நெல்லைக் கொள்வனவு

செய்வதற்குக்கூட, இந்த அரசாங்கத்திடம் சரியான திட்டங்கள் இல்லை. எமது விவசாயிகள் பல

துன்பங்களுக்கு மத்தியில் நெல்லை உற்பத்தி  செய்து, அந்த நெல்லை எங்கு சென்று கொடுப்பது -

விற்பனை செய்வது என்று தெரியாமல், அலைகின்ற காட்சியை நான் எனது கண்களினால்

நேரடியாகவே கண்டிருக்கின்றேன். இப்படிக் கஷ்டப்பட்டு உற்பத்தி செய்கின்ற விவசாயப்

பொருட்களைச் சந்தைப்படுத்துகின்றபோதுகூட, எங்களுடைய அதிகாரிகள் அவ்விவசாயிகளிடம்

இலஞ்சம் கேட்கிறார்கள். அவ்வாறிருந்தால், எங்களுடைய நாடானது மென்மேலும் சீனாவிடமும்

இந்தியாவிடமும் கடனாளியாகவே இருக்கும் என்பதை நான் இந்த நேரத்தில் சொல்லிக்கொள்ளவிரும்புகின்றேன்.

எமது நாட்டில் வேண்டியளவு பால் உற்பத்தி இருக்கின்றது என்று கெளரவ அநுர திஸாநாயக்கஅவர்கள் இங்கு குறிப்பிட்டார். இன்று எமது நாட்டில் வேண்டியளவு பால் இருக்கின்றபோது,

நாங்கள் நியூசிலாந்திலிருந்து சீஸ், பட்டர் போன்றவற்றை இறக்குமதி செய்கின்றோம். ஏன், எமது

நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற பாலின் மூலம் இவற்றை உற்பத்தி செய்யமுடியாது? என நான்

இந்த அரசாங்கத்திடம் கேட்க விரும்புகின்றேன்.

மேலும், எமது நாடானது தென்னைப் பயிர்ச்செய்கையின் மூலம் கூடுதலான வருமானத்தைப்

பெறக்கூடிய ஒரு நாடு. ஏன் இந்த அரசாங்கம் தென்னைப் பயிர்ச்செய்கையை பாரியளவில்

ஊக்கப்படுத்திச் செய்வதில்லை? என்பதையும் நான் இந்த நேரத்தில் கேட்டுக்கொள்ள

விரும்புகின்றேன்.

அடுத்ததாக, இன்று எங்களுடைய நாட்டில் எல்லா வளங்களையும்விட, மனித வளம் அதிகமாக

இருக்கின்றது. தற்காலத்தில் வேலைவாய்ப்புக்கள் இல்லாமல் இளைஞர், யுவதிகள் எங்கு சென்று

வேலைசெய்வது என்று தெரியாமல் திண்டாடுகின்றார்கள். இந்த மனித வளத்தை எவ்வாறு

பயன்படுத்துவது? அந்தப் பயன்பாட்டின்மூலம் எங்களுடைய மக்களின் வாழ்வாதாரத்தை எப்படி

உயர்த்த முடியும்? அதற்கு எப்படியான திட்டங்களைக் கொண்டுவர முடியும்? என்று

சிந்திப்பதில்லை. தமது கட்சியை எப்படி வளர்க்கமுடியுமென்றுதான் இன்றைய ஆட்சியாளர்கள்

சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது என்னுடைய கருத்தாகும்.

அபிவிருத்தியடைந்த நாடுகளில் மிகப்பெரிய வருமானத்தை ஈட்டித்தருவது

சுற்றுலாத்துறையாகும். ஆனால், எமது நாட்டில் யுத்தம் முடிவடைந்து ஏழு

ஆண்டுகளாகின்றபோதிலும் இன்றும் எமது பகுதிகள் யுத்தப் பிரதேசங்கள் போலத்தான்

காட்சியளிக்கின்றன. குறிப்பாக, எமது பிரதேசங்களில் எங்கு பார்த்தாலும் இராணுவ முகாம்கள்!

இராணுவ சீருடைகள்! இராணுவப் பிரசன்னம்! இப்படியான செயற்பாடுகள் இருக்கின்றபோது எப்படி

புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற எமது முதலீட்டாளர்கள் இங்கு வந்து முதலீடு செய்வார்கள்?

அவர்களுக்கு  எவ்வாறு நம்பிக்கை பிறக்கும்? என்று கேட்க விரும்புகின்றேன்.

இன்றைய பொருளாதாரத்தின் வளர்ச்சி சம்பந்தமாகக் கலந்தாலோசிக்கின்ற இவ்வேளையிலே,

மன்னார் மாவட்டத்தில் அரசாங்கத்துக்குச் சொந்தமான உப்பளம் எப்படி இயங்குகின்றது என்பது பற்றி ஒரு சில தரவுகளை இந்தச் சபையிலே சமர்ப்பிக்க விரும்புகின்றேன்.

அந்த உப்பளம் மன்னாரில் 1938ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அப்போது அதற்கெனக் கட்டப்பட்ட காரியாலயம் இன்றுவரை paint கூட அடிக்கப்படாமல் பழைய கட்டிடமாகத்தான் காட்சியளிக்கின்றது. ஆனால்,

உப்பளத்துக்குரிய Chairman வந்தால் அவர் தங்குவதற்கு எழுபது இலட்சம் ரூபாய் செலவில் விடுதி - bungalow அமைப்பதற்கு ஆயத்தங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. நான் இதை ஏன் இந்த நேரத்தில்
 சொல்கிறேன் என்றால், மன்னாரில் கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் அவர்களின் அலுவல்களைப் பார்ப்பவர்தான் அந்தச் Chairman. அமைச்சர் அவர்களின் கட்சியின் அதிகார பலத்தால்தான்  உப்பளத்தின்   Chairman   ஆக அவர் நியமிக்கப்பட்டார்.

தன்னுடையநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதற்காக இவ்வளவு காசு செலவழித்து Chairmanக்குதங்குமிடவசதி அமைத்துக் கொடுக்க எண்ணிய அந்த அமைச்சரால் 1938ஆம் ஆண்டு கட்டிய அந்தக் கட்டிடத்தை ஏன் புதுப்பிக்கமுடியாது? இது இவ்வாறு இயங்கினால் எப்படி எமது நாடு
பொருளாதாரத்தில் முன்னேறும்?
எனவே, இதனை பிரதம அமைச்சர் அவர்களும் இந்தஅரசாங்கமும் கவனத்திற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று
கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

தற்பொழுது ஆனையிறவு உப்பளத்திலும் வேலைகள் ஆரம்பிக்கப்படுகின்றன.  அங்கு முன்பு வேலைசெய்த அந்தப் பகுதியைச் சேர்ந்த அனுபவம் மிகுந்தவர்கள் இருக்கின்றபோது, மன்னார் உப்பளத்திலிருந்து குறிப்பிட்ட அமைச்சரினால் தனக்குப் பிடிக்காத ஒருசிலரை ஆனையிறவுக்கு மாற்றுகின்ற, அதாவது 10 வருடங்களாகத் தற்காலிகமாக வேலை செய்பவர்களை நிரந்தரமாக்காமல் புறக்கணித்துவிட்டு, தன்னுடைய ஆதரவாளர்களை வேலைக்கு அமர்த்துகின்ற நிகழ்வுதான் இந்த உப்புக் கூட்டுத்தாபனத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கினறது. அதேநேரத்தில், கடந்த பாராளுமன்றத் தேர்தலிலே தன்னுடன் போட்டியிட்ட ஒரு வேட்பாளரைத் தன்னுடைய இணைப்பாளர் என்றும் அவருக்கு ஒரு வாகனமும் அவருக்குரிய சம்பளக் கொடுப்பனவும் வழங்குவதாக அறிவித்தார். மக்கள் கேட்கும்போது, தன்னுடைய இணைப்பாளராக அவரைத் தெரிவு செய்திருப்பதாகக் கூறுவார். "அவருக்கு வாகனமொன்று கொடுத்திருக்கின்றேன்.

அவருக்கு சம்பளமும் வழங்கப்படுகின்றது" என்று கூறுவார். ஆனால், அந்த வாகனம் அவருடைய சொந்தத் தேவைக்காகத்தான் ஓடிக்கொண்டிருக்கின்றது. அது எந்த நேரத்திலும் மன்னார் உப்பளத்திற்கு வருவதில்லை. அந்த வாகனம் தொடர்பாக ஆராய்ந்து பார்த்தபோது அது உப்பளவேலைத்திட்டத்தின் கீழ் ஓடிக்கொண்டிருப்பதாகத்தான் பதிவிருக்கின்றது. அதற்குரிய எரிபொருள்
மன்னார் உப்பளத்துக்கு வருகின்ற bowser மூலம்தான் நிரப்பப்படுகின்றது. இப்படி தமது கட்சியை,தமது வேட்பாளர்களைப் பெரிய நிலைக்குக் கொண்டுவருவதற்காக அரசாங்கச் சொத்துக்களைப்பயன்படுத்தினால் எப்படி நாட்டின் பொருளாதாரம் முன்னேறும்? என்று நான் இந்த நேரத்தில்கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

அதேநேரத்தில், குறித்த அமைச்சருக்கு மன்னார் தாராபுரத்தில் ஒரு பங்களா இருக்கின்றது. அந்தபங்களாவில் இருக்கின்ற பணியாளருக்குச் சம்பளம் மன்னார் உப்பளத்திலிருந்து போகின்றது. கெளரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே, இது எந்த வகையில் நியாயம்?  என்ற கேட்டு,

இதனை ஒரு பதிவாக முன்வைக்க விரும்புகின்றேன். ஏனென்றால், ஓர் அமைச்சர் இந்த அரசாங்கச் சொத்துக்களைப் பயன்படுத்தி தன்னுடைய சொந்த வேலைகளை நிறைவேற்றி அரசியலை

வளர்த்துக்கொண்டிருக்கும்போது, எங்களுடைய நாடு எப்படிப் பொருளாதாரத்தில் முன்னேறும்?

அதாவது நான்கு வருடங்களாகத் தாராபுரம் பங்களாவில் வேலை செய்கின்ற பணியாளர் மன்னார்

உப்பளத்திலிருந்து சம்பளத்தைப் பெற்றுக்கொள்கின்றார். நான்கு வருடங்களில் முதல் வருடம்

சைபுல்லா என்ற அவரது உறவினர் ஒருவர் பணியாற்றினார். தற்போது அவருடைய ஊரைச்

சேர்ந்த உறவினரான முஸீன் என்பவர் பணியாற்றுகின்றார். அவர் கடந்த 3 வருடங்களாக மன்னார்

உப்பளத்தில் சம்பளம் பெற்றுக்கொண்டிருக்கின்றார். அவர் மன்னார் உப்பளத்திற்குச்

செவ்வாய்க்கிழமைகளில் மட்டும்தான் வருவார். அதற்குரிய பதிவுகள் என்னிடம் இருக்கின்றன.

அவர் செவ்வாய்க்கிழமைகளில் வந்து அந்த வாரத்தில் முழுநாளும் வேலை செய்ததாகக்

கையொப்பமிட்டுவிட்டுச் சென்றுவிடுவார்.

ஏனைய அமைச்சர்கள் எப்படியென்று எனக்குத் தெரியாது. ஆனால், இவ்வாறு அமைச்சர்கள்

தங்களுடைய சொந்தத் தேவைக்காக அரச சொத்துக்களைப் பயன்படுத்துகின்றபோது

எங்களுடைய இலங்கைத் தீவு எவ்வாறு முன்னேறும்?  என்பதை நான் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.அடுத்ததாக, நான் ஒரு முக்கியமான கோரிக்கையையும் இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.

அதாவது, எங்களுடைய வட மாகாண முதலமைச்சருக்குரிய முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பிப்பதற்கு இன்னும் எங்களுடைய மாகாண சபைக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அந்த நிதியம் ஆரம்பிக்கப்பட்டால் வெளிநாட்டிலிருக்கின்ற எமது புலம்பெயர் உறவுகள் அந்த நிதியத்தினூடாக எங்களுடைய மக்களுக்கு உதவிகளைச் செய்வார்களென்று நான் நம்புகின்றேன். ஆகவே, அந்த முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பிப்பதற்குரிய அனுமதியை மத்திய அரசாங்கம் மிக விரைவில் கொடுக்கவேண்டும். ஏனென்றால், எங்களுடைய மக்கள் மிகவும் துன்பப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். அரசாங்கத்தினால் செய்யப்படுகின்ற உதவிகள் எங்களுடைய மக்களுக்குப் போதாமலிருக்கின்றன.  நான் இந்த நேரத்தில் புலம்பெயர் உறவுகளிடமும் ஒரு கோரிக்கையை  முன்வைக்க விரும்புகின்றேன்.  அதாவது, முதலமைச்சர்நிதியம் ஆரம்பிக்கப்பட்ட பின்பு எங்களுடைய மக்களுக்கு உங்களுடைய உதவிகளை நாம்எதிர்பார்த்து நிற்கின்றோம் என்பதைத் தெரிவித்து, இந்த அரசாங்கமும் மிக விரைவில்

முதலமைச்சர் நிதியம் ஆரம்பிப்பதற்குரிய அனுமதியைக் கொடுக்கவேண்டுமென்று மீண்டும் வலியுறுத்தி, விடைபெறுகின்றேன்.
 நன்றி.
மன்னார் உப்பளத்தையும் விட்டு வைக்காதா வன்னி அமைச்சர் - பாராளுமன்றத்தில் அம்பலப்படுத்திய பா .உ சாள்ஸ் நிர்மலநாதன் Reviewed by NEWMANNAR on March 29, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.