அண்மைய செய்திகள்

recent
-

தமிழகம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடின: போக்குவரத்து சேவையும் அடியோடு முடங்கியது.


முதல்வர் காலமானதை தொடர்ந்து நேற்று தமிழகம் முழுவதும் கடைகள், பெட்ரோல் பங்க் மூடப்பட்டது. சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடியது. பஸ் சேவையும் அடியோடு முடங்கியது. சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் 11.30 மணியளவில் காலமானார். அவர் காலமான தகவலை அறிந்ததும் தமிழகமே சோகத்தில் மூழ்கியது. 

ஜெயலலிதாவின் உடல் மருத்துவமனையில் இருந்து போயஸ்கார்டன் இல்லம் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று அதிகாலை கொண்டு செல்லப்பட்டது. அதிகாலை கடும் பனி பெய்து கொண்டிருந்தது. இதை பொருட்படுத்தாமல் சாலையின் இருபுறமும் அதிமுகவினர், பொதுமக்கள் திரண்டு நின்று முதல்வருக்கு அஞ்சலி செலுத்தினர். முதல்வரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் நேற்று காலை முதலே கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. கடைகள் அனைத்தும் மூடியே இருந்தன. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ஒரு கடை கூட திறக்கப்படவில்லை. வணிகர்கள் தானாகவே முன் வந்து கடைகளை அடைத்திருந்தனர்.

சென்னையில் முக்கிய வர்த்தக பகுதிகளான தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, பிராட்வே உள்ளிட்ட பகுதிகள் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை விடப்பட்டிருந்தது. பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால் மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் அனைத்தும் இயங்கவில்லை. தமிழகம் முழுவதும் முக்கிய சாலைகளில் முதல்வரின் படம் வைக்கப்பட்டு மக்கள் கண்ணீர் செலுத்தினர். முதல்வரின் உடல் அடக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து மாலை 6 மணியளவில் கடைகள் திறக்கப்பட்டன.

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த ராமாபுரம், சிறுவானூர் ஆகிய இரண்டு இடங்களில் கல்வீச்சு சம்பவம் நடந்தது. இதில், இரண்டு வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்துவிட்டு மர்ம நபர்கள் தப்பினர். இதில் யாருக்கும் காயமில்லை. பஸ் நிலையம், கோயில்கள் மற்றும் பஜார் பகுதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சைரன் ஒலியுடன் போலீஸ் ரோந்து வாகனங்கள் சாலைகளில் ரோந்து வந்தன. சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் உள்ள திருவள்ளூர் ரயில் நிலையத்தை தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், ஜெயலலிதா மறைவையொட்டி, நேற்று ரயில் நிலையம் பயணிகள் யாருமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

அனைத்து தனியார் நிறுவனங்களும் விடுமுறை அறிவித்ததால் அம்பத்தூர், ஆவடி, திருவள்ளூர், கடம்பத்தூர் உட்பட அனைத்து புறநகர் ரயில் நிலையங்களும் பயணிகளின்றி வெறிச்சோடி காணப்பட்டது. அங்கும் போலீசார் அசம்பாவித சம்பவங்களை தடுக்க குவிக்கப்பட்டனர்.
திருவள்ளூர் நகரில் பஸ் நிலையம், பஜார் வீதி, கிழக்கு குளக்கரை சாலை, எம்ஜிஆர் சிலை, பெரியகுப்பம், ராஜாஜிபுரம் உட்பட பல பகுதிகளில் அதிமுகவினர் முதல்வர் ஜெயலலிதா உருவ படத்தை வைத்து, மாலை அணிவித்து மலர்தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மகளிர் அணியினர் திரண்டு கண்ணீர் விட்டு கதறினர். கட்சிக்கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டது.

பஸ் நிலையத்தில் இருந்து முக்கிய சாலைகள் வழியாக, நகர ஜெ. பேரவை தலைவர் கே.பி.எம். எழிலரசன் தலைமையில் அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்தும், கருப்பு ‘பேட்ஜ்’ அணிந்தும் அமைதி பேரணியில் ஈடுபட்டனர். பஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவ படத்துக்கு பாஜக., நிர்வாகிகள் பாலாஜி, ஆர்யா சீனிவாசன், ரகுராமன் உட்பட பலர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இலவச ரயில் பயணம்

ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்துவற்காக சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி நோக்கி செல்லும் பறக்கும் ரயிலில் பலர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தனர். பஸ் இயக்கப்படாத நிலையில், பெரும்பாலான மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ரயிலில் வந்தனர். அவர்கள் சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து முதல்வர் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு வந்தனர்.
தமிழகம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடின: போக்குவரத்து சேவையும் அடியோடு முடங்கியது. Reviewed by NEWMANNAR on December 07, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.