அண்மைய செய்திகள்

recent
-

தகவல் பெறும் உரிமைச் சட்டம் மக்களுக்கானதே...!


ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஏற்படுத்தப்பட்ட சட்டங்களில் தகவல் அறியும் சட்டம் இலங்கை மக்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு சட்டமாகும்.

மக்கள் நலன் சார்ந்த பல சட்டங்கள் பாராளுமன்றத்தின் ஊடாக உருவாக்கப்படுகின்ற போதும் அது தொடர்பான விழிப்புணர்வு அற்ற அல்லது தெளிவில்லாத தன்மை பெரும்பாலான மக்களிடம் காணப்படுகின்றது.

அதேபோல் புதிதாக கொண்டுவரப்படுகின்ற தகவல் அறியும் சட்டம் தொடர்பிலும் மக்களிடம் தெளிவில்லாத நிலைப்பாடு காணப்படுகின்றது.

தகவலுக்கான உரிமை அரசியலமைப்பின் 19வது திருத்தத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதும் பாராளுமன்றத்தில் தகவலுக்கான உரிமை தொடர்பான சட்டமொன்றை நிறைவேற்றிய பின்னரே அதனை நடைமுறைக்கு கொண்டுவர முடியும்.

இலங்கையைப் பொறுத்தவரை 1996 ஆம் ஆண்டு முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட தகவல் அறியும் கோரிக்கையானது 2001 ஆம் ஆண்டு சட்டமாக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் அது வெற்றியளிக்கவில்லை. அதன் பின் இது தொடர்பில் கவனம் செலுத்தப்படாத நிலையே இருந்து வந்தது.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் மீண்டும் அது தொடர்பான கவனம் ஏற்பட்டிருந்தது.

2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ம் திகதி அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டு 2015 டிசம்பர் 18 ஆம் திகதி வர்த்தகமானி ஊடாக வெளியிடப்பட்டது.

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த தகவல் பெறும் உரிமைச் சட்டம் இம்மாதம் 3 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகின்றது.

தகவல் உரிமைச் சட்டமானது ஊடகவியலாளருக்கு நன்மை பயக்கும் ஒரு சட்டம் என பலரும் கருதினாலும் உண்மையில் அது பொது மக்களுக்கு நன்மை பயக்கக் கூடிய ஒரு சட்டமாகும்.

சிவில் உரிமையின் கீழ் ஒவ்வொருவரும் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமை இருக்கின்றது. அதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே இது உள்ளது.

மேலைத்தேச நாடுகள் பலவற்றில் இது நடைமுறையில் உள்ளது. இலங்கைக்கு அருகில் உள்ள இந்தியாவிலும் நடைமுறையில் உள்ளது.

இந்தியாவில் இந்தச் சட்டத்தின் மூலமே இந்திய சுதந்திரப்போராட்ட தலைவர்களில் ஒருவரான நேதாஜி மரணமடைந்தமை, கச்ச தீவு ஒப்பந்தம் பற்றிய தகவல்களுக்கு விளக்கம் கோரப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் தகவல் பெறும் சட்டமென்பது ஒவ்வொருவரும் அரச திணைனக்களங்கள் மற்றும் அதிகார சபைகள் தொடர்பாக அறிந்து கொள்வதற்கு வாய்ப்பைக் கொடுக்கின்றது.

எனினும் இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்ற போது தான் அதில் உள்ள கட்டுப்பாடுகள் தொடர்பாக தெளிவாக அறிய முடியும்.

advertisement
ஆனால் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் ஒரு சமூகம் சார்ந்த அல்லது மக்கள் கூட்டம் சார்ந்த பிரச்சனைகளை அறியுமிடத்து அதற்கு எதிராக பொதுநல வழக்குகள் போடக் கூடிய சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

அதன் மூலம் இச் சட்டத்தை பயனுள்ளதாக்க முடியும். இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குரிய விதி முறைகள், ஒழுங்குச் செயற்பாடுகள் என்பன இன்னும் முறையாக ஏற்படுத்தப்படவில்லை.

திணைக்களங்களுக்கு தகவல் வழங்கும் உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அது இன்னும் முழுமை பெறவில்லை. இதனால் இந்தச் சட்டம் எவ்வாறு செயற்பட போகின்றது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஒரு தனிநபருக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய அந்தரங்க தன்மையைப் பாதிக்கக் கூடிய தகவல்கள், அரசின் பாதுகாப்பு மற்றும் ஆட்பல இறைமையை பாதிக்கக் கூடிய தகவல்கள்,

சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் கடப்பாடுகள் தொடர்பில் வெளிப்படுத்த இயலாத தகவல்கள், தனிப்பட்ட வைத்திய அறிக்கை, சட்டமா அதிபரின் செயற்பாடுகள் தொடர்பான தகவல்கள்,

நீதிமன்றம்- பாராளுமன்றத்தை அவமதிப்பதாக உள்ள தகவல், வெளிப்படுத்துவதால் குற்றத்தை தடுப்பதற்கு தடையாக உள்ள தகவல் என சில தகவல்களை இதன் மூலம் பெற முடியாது.

பொதுமக்களுக்கு நன்மை தரக் கூடிய தகவல்களை வழங்குவதே இதன் நோக்கம் என கூறப்பட்டுள்ள போதும் மேற் சொன்ன விடயங்களின் கீழ் சில தகவல்களை மறைத்து பொதுமக்கள் நலன்சார்ந்த சில தகவல்களைப் பெற முடியாத நிலையையும் இது உருவாக்க கூடும் என அவதானிகள் கூறியுள்ளனர்.

பொதுமக்கள் தகவல்களைப் பெறுவதற்கு விண்ணப்ப படிவம் ஒன்றினைப் பெற்று அதனை பூர்த்தி செய்து வழங்கினால் குறைந்த பட்சம் 15 நாட்களுக்குள் அதற்கான தகவல்கள் வழங்கப்படுதல் வேண்டும்.

இவ்வாறான நடைமுறையே இந்தியாவில் உள்ள போதும் இலங்கையில் அது நடைமுறைக்கு வந்த பின்னரே இது தொடர்பில் கூறமுடியும்.

அரச திணைக்களம் மற்றும் மற்றும் அதிகார சபையிடம் தகவல்களைக் கோருமிடத்து அதற்குரிய உத்தியோகத்தரிடம் இருந்து பதில் கிடைக்காவிடின் மேன்முறையீட்டு உத்தியோகத்தர் அல்லது தகவல் ஆணைக்குழுவுக்கு மேன்முறையீடு செய்வதற்கான ஏற்பாடுகளும் இந்த சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.

தகவல்களை வழங்க மறுக்கும் அதிகாரி அல்லது உத்தியோகத்தர் ஆணைக்குழு முன் அழைக்கப்பட்டு விளக்கம் கோருவதற்கான வாய்ப்புக்களும் உள்ளது.

தகவல் பெறும் உரிமைச்சட்டம் அதிகாரிகள் அல்லது உத்தியோகத்தர்களுக்கு சுமையை கொடுத்திருப்பினும் பொறுப்புக்கூறும் பண்பாட்டை பேணி வளர்த்து அதன் மூலம் இலங்கை மக்கள் ஊழலை எதிர்த்து நிற்றல் மற்றும் நல்லாட்சியை மேம்படுத்த இது உதவுகின்றது.

தகவல் பெறும் உரிமை என்பது பொதுமக்களுக்கு கிடைக்க கூடிய ஒரு உரிமையாகும்.

இதனை பொதுமக்கள், பொது மக்கள் நலன்சார்ந்து செயற்படுபவர்கள் நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்துவதன் ஊடாக மேலும் பல தகவல்களைப் பெறக் கூடியதும் அதனை பயனுள்ள ஒரு சட்டமாக தொடர்ந்தும் அரசாங்கத்தால் மாற்றியமைக்கக் கூடியதுமான சந்தர்ப்பத்தைப் உருவாக்க முடியும்.

மாறாக இந்த சட்டத்தை தவறான நோக்கத்திற்காகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவும் பயன்படுத்தபடுமிடத்து அதில் சில கடிவாளங்கள் பூட்டப்படவே வாய்ப்புள்ளது.

எனவே தகவல் அறியும் உரிமை தொடர்பில் மக்கள் தெளிவுபட வேண்டியது அவசியமே.


தகவல் பெறும் உரிமைச் சட்டம் மக்களுக்கானதே...! Reviewed by Author on February 03, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.