அண்மைய செய்திகள்

recent
-

நடப்பதை வெளிப்படுத்துவது கூட்டமைப்பின் பொறுப்பு....


உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்பார் வள்ளலார்.
உள்ளொன்றும் புறமொன்றுமாக பேசுவது பேசுபவர்க்கும் கேட்பவர்க்கும் அழிவைத் தருமேயன்றி ஆக்கத்தைத் தரமாட்டாது.

அதனால்தான் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்று வள்ளலார் வேண்டி நின்றார்.

இன்றைய அரசியலில் இந்த நிலைமை தாராளமாக இருப்பதைக் காணமுடிகிறது.
அதிலும் குறிப்பாக தமிழ் அரசியல் தலைமையிடம் உள்ளும் புறமும் வேறுபட்ட நிலைமை இருப்பது மிகப்பெரும் பயங்கரமான விளைவுகளைத் தரக்கூடியதாகும்.

தமிழ் மக்கள் தங்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் அரசியல் தலைமை தமக்கு விசுவாசமாக நடந்து கொள்ளும் என்று அதீதமாக நம்புகின்றனர்.

ஆனால், எங்கள் தமிழ் அரசியல் தலைமையோ தென்பகுதியில் ஒரு கதை தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் இன்னொரு கதை; வெளிநாடு சென்றால், அங்கு புலிகளுக்கு எதிரானவர்களுடன் ஒரு கதை; தமிழர்களுக்கு உரிமை வேண்டுமென விசுவாசமாக விரும்புவர்களுடன் வேறொரு கதையாக அவர்களின் அரசியல் பிழைப்பு நடந்து கொண்டிருக்கிறது.

இத்தகைய நேர்மைத்தன்மையில்லாத போக்கு அரசியல் தலைமை மீது தமிழ் மக்களிடம் மிகப் பெரியதொரு பொறுப்பு நிலையை ஏற்படுத்தும் என்பது மறுக்க முடியாத உண்மை.

தாங்கள் செய்வது நியாயமானது என்று காட்டிக் கொள்வதற்கு நியாயபூர்வமான ஆதாரங்களை முன்வைப்பதே பொருத்துடையது.

உள்ளொன்றும் புறமொன்றுமாகப் பேசுவது தமிழ் மக்களுக்கு புதிய அரசியல் தலைமை தேவை என்ற நினைப்பை ஏற்படுத்தி விடும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான தமிழ் மக்களின் ஆதரவு என்பது விடுதலைப் புலிகள் ஞானஸ்தானம் வழங்கிய ஒரு கட்சி என்பதால் கிடைத்ததாகும்.

அதே ஆதரவு தொடர்ந்து கிடைக்கும் என்று கூட்டமைப்பின் தலைமை கருதுமாக இருந்தால் அது மிகப்பெரும் மடமைத்தனமாகும்.

ஆக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன் மீது நம்பிக்கை கொண்டுள்ள தமிழ் மக்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டும்.

இதைவிடுத்து தமிழ் மக்களுக்கு எதிராகவும் இலங்கை அரசுக்கு விசுவாசமாகவும் நடந்து கொள்வதில் கூட்டமைப்பின் கொழும்புத் தலைமை தொடர்ந்தும் அக்கறை செலுத்துமாக இருந்தால், நிலைமை மிகமோசமாகும்  என்பது மறுக்க முடியாத உண்மை. முதலில் தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெறுவது கூட்டமைப்பின் கடமை.

இப்போதிருக்கின்ற சூழ்நிலையில் கூட்டமைப்பு மீதான தமிழ் மக்களின் நம்பிக்கை வேகமாகக் குறைந்து செல்கிறது. நல்லாட்சி மட்டுமல்ல; நாம் தெரிவு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்த கூட்டமைப்பும் எங்களை ஏமாற்றுகிறது என்ற சிந்தனை தமிழ் மக்களிடம் ஏற்படத் தலைப்பட்டுள்ளது.

எனவே இதிலிருந்து கூட்டமைப்பு தன்னை பாதுகாக்க வேண்டுமாயின், என்ன நடக்கிறது? நாங்கள் என்ன செய்கிறோம்? ஜெனிவாக் கூட்டத்தொடரில் எங்களின் நிலைப்பாடு என்ன? என்பது பற்றியெல்லாம் உடனுக்குடன் தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

இதைச் செய்யாதவிடத்து கூட்டமைப்பு எங்களுக்கு அநீதி இழைக்கிறது என்று தமிழ் மக்கள் கருதுவர்.
இக்கருத்து நிலை, இந்த ஜென்மத்தில் பாராளுமன்றப் பதவி இல்லை என்றொரு கள நிலையைத் தந்துவிடும். கவனம்.

நடப்பதை வெளிப்படுத்துவது கூட்டமைப்பின் பொறுப்பு.... Reviewed by Author on March 02, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.