அண்மைய செய்திகள்

recent
-

பயங்கரவாதச் சட்டம் தொடர்பாக சுமந்திரன் அக்கறையுடன் செயற்படுகிறார். -ரெலோ

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நீடிக்­கும். அது ஒரு­போ­தும் வலு­வி­ழக்­காது. அப்­படி வலு­வி­ழக்­கத் தமிழ் மக்­கள் விட­மாட்­டார்­கள். அதை நீங்­கள் உறு­தி­யாக நம்­ப­லாம். கூட்­ட­மைப்­பில் நான்கு அணிக் கட்சிகள் உள்ளன. ஆனால் தலைமை ஒன்றுதான். சம்பந்தனே எமது தலைவர். இவ்வாறு தமிழீழ விடுதலைக் கழகத்தின் (ரெலோ) முக்கிய உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ந. ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.

வவுனியாவிலுள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

தமிழ் தேசியகூட்டமைப்பில் பிளவு இருப்பதாகப் பலரும் கருதுகின்றனர். இது குறித்து உங்கள் கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்குப் பதிலளிக்கையில் சிறிகாந்தா மேலும் தெரிவித்ததாவது,

கருத்து வேறுபாடுகள் எமக்குள் வரும். ஒரு கட்சிக்குள்ளேயே சில விடயங்களைத் தீர்மானிப்பதற்குப் பல மணிநேரம் எடுக்கிறது. அவ்வாறாயின் நான்கு கட்சிகளும் சேர்ந்தால் பிரச்சினைகள் இருக்கும். ஆனால் வேற்றுமையிலும் ஒற்றுமை எமது தேசிய கூட்டமைப்புக்குள்ளது. 2001 ஓக்ரோபர் மாதத்திலிருந்து கடந்த 16 ஆண்டுகளாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு கட்டுக்கோப்பான கூட்டு அணியாக இயங்கி வருகின்றது. அந்த வரலாற்று உண்மையை எல்லோரும் உணர்ந்து கொள்ளவேண்டும்.

பயங்கரவாதச் சட்டம் தொடர்பாக சுமந்திரன் அக்கறையுடன் செயற்படுகிறார். பத்திரிகை அறிக்கையிலும் அவர் குறிப்பிட்டுள்ளார். நான்கு விடயங்கள் வலியுறுத்தப்பட்டன. தடுப்புக் காவல் சட்டத்தில் இப்போது 18 மாதங்கள் என்றிருப்பது குறைக்கப்படவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் தலைதூக்கிவிடும் என்ற அச்சத்தால் பயங்கரவாதச் சட்டத்தை நடைமுறையில் வைத்திருக்கிறார்கள்.

ஆனால் எங்களை பொறுத்தவரை ஆயுதப் போராட்டத்தின் அத்தியாயம் முடிவடைந்துவிட்டது என்று கருதுகின்றோம். எங்கள் மக்கள் பலவற்றையும் இழந்து நடு வீதியில் அநாதைகளாக உள்ளனர். அவர்களின் உரிமைக்காக ஜனநாயக வழியில்-அகிம்சை வழியில் எங்கள் போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும் என்பதுதான் ரெலோவின் நிலைப்பாடு. நாங்கள் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடும் அதுவேதான்.

அந்தவகையில் வடக்கு-கிழக்குப் பகுதியில் இராணுவமுகாம் இருக்கவேண்டிய தேவை கிடையாது. அரசு அதை வைத்திருக்க விரும்புகிறது. ஏனென்றால் அவர்கள் பார்வை வேறு. எங்கள் பார்வை வேறு. நாங்கள் அரச தலைவராக மைத்திரியைக் கொண்டு வந்தோம் என்பதற்காக எல்லாம் நாங்கள் நினைத்தபடி அவர்கள் மனதை மாற்றி கருத்தை மாற்றி நிலைகளை மாற்றுவார்கள் என்பதை நாங்கள் எதிர்பார்க்க முடியாது.

இது அரசியல். எங்களுக்கு எங்களுடைய நிர்ப்பந்தங்கள், அவர்களுக்கு அவர்களுடைய நிர்ப்பந்தங்கள். பதவியை நீடிக்கின்ற-பதவியைப் பிடித்து வைத்திருக்கவேண்டிய நிர்ப்பந்தம். இதனைப் புரிந்து கொள்ளவேண்டும். அதாவது பல்வேறு நலன்கள் சம்பந்தப்பட்ட விளையாட்டு. நாங்கள் நாங்களாக இருக்கும் வரை-நாங்கள் கண்களை மூடிக்கொண்டு ஏமாறத் தயாராகாத வரை- நாங்கள் தெளிவாக இருக்கும் வரை நாங்கள் முன்னோக்கிச் செல்ல முடியும்.
நாங்கள் நான்கு கட்சிகளும் இப்போதும் ஒரு அணிக்குள்ளேயே இருக்கின்றோம். எங்களுக்குள் குறைபாடுகள் உள்ளன.

அதனை நீங்கள் சுட்டிக்காட்டலாம். நாங்கள் ஒற்றுமையிலிருந்து விலகமாட்டோம். தமிழ் மக்கள் வேறு தெரிவு என்ன ? எங்கள் மக்கள் எல்லாவற்றையும் இழந்து இருக்கிறார்கள். இவ்வாறு இருக்கின்றபோது ஆளுக்கொருவராக ஒருவர் குடும்பியை ஒருவர் பிடித்து சண்டையிடுவோமாக இருந்தால் அது மலிவான அரசியலாக இருக்கலாம். அதை நாங்கள் செய்ய முடியாது. அதைச் செய்யவேண்டும் என்று சிங்களப் பேரினவாத சக்திகள் எதிர்பார்க்கின்றன. நாங்கள் ஒன்றாக இருப்பது பலருக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்துகிறது.

இவர்கள் உடையமாட்டார்களா, பிரியமாட்டார்களா, எதற்காக சுரேஸ் பிரேமச்சந்திரன் நீடித்து கொண்டிருக்கிறார் என்பதைச் சிந்திக்கிறார்கள். அது நடக்காது. அதை நான் உறுதியாகச் சொல்கின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீடிக்கும். அது ஒருபோதும் வலுவிழக்காது. அதை நீங்கள் உறுதியாக நம்பலாம். அப்படி வலுவிழக்கத் தமிழ் மக்கள் விடமாட்டார்கள். நாங்கள் தமிழ்மக்களுக்கு சில வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறோம். ஆகவே நாங்கள் உடைந்து போய்விட்டு மக்களை சந்திக்க முடியாது- என்றார்.

இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உட்பட ரெரோவின் முக்கிய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
பயங்கரவாதச் சட்டம் தொடர்பாக சுமந்திரன் அக்கறையுடன் செயற்படுகிறார். -ரெலோ Reviewed by NEWMANNAR on May 15, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.