அண்மைய செய்திகள்

recent
-

பிரித்தானியாவின் தேவை ஜெரமிக் கோர்பினா? தெரேசா மேயா ?


பிரித்தனியாவின் உடனடித் தேவை ஜெரமிக் கோர்பினா? அல்லது தெரேசா மேயா? சந்தேகமே வேண்டாம் ஜெரமிக் கோர்பின் தான்.

அதற்குரிய காரணம் கோர்பின் மீதான தனிப்பட்ட காதலும் அல்ல தெரேசா மீதான கண்மூடித்தனமான வெறுப்புமல்ல. அவர்களின் மக்கள் சார்பான கொள்கைகளே காரணமாகும்.

தெரேசா மேயின் கொள்கை எனபது சிறுபான்மையினருக்கானது. அதற்காக பிரித்தானிய அரசால் அடக்கி ஒடுக்கப்படும் சிறுபான்மை என எண்ணி விடவேண்டாம், காப்ரேட் கம்பனிகளின் முதலாளிகளான, கன்சர்வேட்டிவ் கட்சியின் நண்பர்களே அவர்களாகும்.

தெரேசா மே யின் கொள்கைககள், திட்டங்கள் என்பன காப்ரேட் கம்பனியின் நலன்களையே முன்னிலைப்படுத்துகின்றது. மக்கள் நலன் என்பது இரண்டாம் பட்சமாகவே காணப்படுகின்றது .

தெரேசா மேயின் கொள்கைகள் அனைத்தும் மக்களை மேலும் சுரண்டி அவற்றிலிருந்து திண்டு கொழுக்கும் காப்ரேட் கம்பனிகளுக்கு சேவகம் செய்வதற்காகவே உருவாக்கபட்டது.

அவையாவான,


  • மருத்துவ ரயில் சேவைகளை தனியார் மயப்படுத்துவது
  • பாடசாலைகள் சுகாதார சேவைகளுக்கு முதலீட்டைக் குறைப்பது
  • ஐரோப்பிய குடியேற்ற வாசிகள், அகதிகளின் உரிமைகளைக் குறைப்பது மற்றும் அவர்களுக்கெதிராக இறுக்கமான சட்டங்களை கொண்டுவருதல்
  • வீடுகளைக் கட்டி தனியார் கம்பனிகளுக்கு விற்பனை செய்தல் மனித உரிமை சட்டங்கள்
  • தொழிற் சங்கச் சட்டங்களை கடுமையாக எதிர்த்தல்
  • மக்களுக்கான வரியை அதிகரிக்கும் அதேவேளை காப்ரேட் கம்பனிகளுக்கு வரிக்குறைப்பு செய்தல்
  • 5% சிறுபான்மை முதலாளிகளின் நன்மைக்காக 95% பெரும்பான்மை உழைக்கும் மக்களின் நலன்களுக்கு எதிரான சட்ட திட்டங்களையே அமுல்படுத்த விரும்புகிறது மக்கள் நலன் சார கன்சர்வேடிவ் கட்சி.

ஏனெனில் கன்சர்வேடிவ் கட்சிக்கு நிதி உதவி வழங்குவதும், கன்சர்வேடிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் நெருங்கிய நண்பர்களாக இருப்பதும் இவ் 5% சிறுபான்மை முதலாளிகளே.

இதற்கு எதிர்மாறாக கோர்பினின் கொள்கையானது மக்கள் நலன் சார்ந்ததாகவே இருக்கின்றது. கோர்ப்பின் ஒரு இடதுசாரி பின்னணியைக் கொண்டவர் என்பதனால் அவரின் கொள்கைகள் திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலத்திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றது.

அவையாவன

  • மருத்துவம், ரயில்வே தனியார் மயப்படுத்துவதை தடுத்தல்
  • அடிப்படைச் சம்பளம் பத்து பவுணாக உயர்த்துதல்
  • ஒரு மில்லியன் வீடுகள் கட்டுதல் அதில் அரை மில்லியன் வீடுகள் கவுன்சில் வீடுகளாகும்
  • பிரித்தானியாவிலுள்ள ஐரோப்பியர்களுக்கு வதிவிட உரிமைகள் வழங்கல் மற்றும் அகதிகளுக்கான உரிமைகளை வழங்கல்
  • அவர்களின் கோரிக்கைகளை நியாயமான முறையில் பரிசீலனை செய்தல்
  • மக்களின் வரி உயர்வைத் தடுத்தல்
  • கார்ப்ரேட் கம்பனிகளுக்கு வரியை அதிகரித்தல்
  • மனித உரிமை மற்றும் தொழிலாளர் உரிமை சட்டங்களை அமுல்படுத்தல்
  • சிறுவர்களுக்கு பாடசாலையில் மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வருதல்
  • பாடசாலைகளுக்கு முதலீடு
  • பல்கலைக்கழக கட்டணங்களை இல்லாமல் செய்தல்
  • அணு ஆயுதம் மற்றும் யுத்தங்களுக்கு எதிரான நிலைப்பாடு
கோர்பினின் கொள்கைகள் காப்ரேட் கம்பனிகளுக்கு எதிராக இருப்பதனால், அவற்றால் அதிகம் பாதிக்கப்படும் காப்ரேட் நிறுவனங்கள், முதாளித்துவ ஊடகங்களான சன், மெயில், பிபிசி போன்ற ஊடகங்களுடன் சேர்ந்து பொய் விஷமப் பிரசாரங்களை கோர்பினுக்கு எதிராக பரப்பி வருகின்றன. அதையும் தாண்டி கோர்பினின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

பிரித்தானியாவை பொருத்தமட்டில் மருத்துவத் துறை என்பது மிகுந்த நெருக்கடி நிலையிலேயே உள்ளது. குறைந்தளவு வைத்தியர்கள், தாதிமார்கள் காணப்படுவதனால் அவர்களுக்கான பணிச்சுமை அதிமாகவும், தாதிமார்கள் தமது உணவுக்காக உணவு வங்கியினை (Food Bank) நம்பவேண்டிய நிலையிலுமேயே உள்ளனர்.


 மேலும் அவரசர சிகிச்சை பிரிவில் காத்து நிற்போரின் எண்ணிக்கை அதிகமாகவும், வைத்தியசாலையினுள் நோயாளர் தள்ளுவண்டியில் காணப்படும் காயபட்ட அல்லது உடனடி வைத்தியம் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகவும், முதியவர்கள் தமது அறுவை சிகிச்சைக்காக நீண்ட நாட்கள் வலியுடனும் வேதனையுடனும் காத்திருக்க வேண்டிய நிலையிலுமேயே உள்ளனர்.

இந்நிலையில் கோர்பின் மருத்துவத் துறைக்கு முப்பது மில்லியன் முதலீடு செய்ய தயாராக இருக்கும் அதேவேளை தெரேசா மே மருத்துவத் துறையை தனியார் மயப்டுத்துவதில் முனைப்புடன் செயல்படுகின்றார்.

உலகின் ஆறாவது செல்வந்த நாடாகிய பிரித்தானியாவில் மில்லியன் கணக்கான மக்கள் வீடற்றவர்களாக அல்லது வீட்டின் வாடகை செலுத்த முடியாதவர்களாக அல்லது ஒரு வீட்டில் அதிகமான மக்கள் (Over Crowded) நிலையிலேயே காணப்படுகிறது.

மேலும் பல்லாயிரக் கணக்கான மக்கள் கவுன்சில் வீடுகளுக்காக விண்ணப்பித்துவிட்டு பல வருடம் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஒருபுறம் பல்லாயிரக்கணக்கான வீடுகள் பூட்டப்பட்டும் மறுபுறம் மக்கள் வீடுகளுக்காக ஏங்கும் நிலைமையே காணப்படுகிறது. மேலும் வீட்டு வாடகை அதிகரித்து இருப்பதனால் பிரித்தானியாவின் மையப்பகுதியான லண்டன் நகரிலிருந்து புறநகரை நோக்கி செல்லும் மக்களின் எண்ணிகையும் அதிகரித்துள்ளது.

1979 இல் 42% வீதமாக இருந்த கவுன்சில் வீடுகளின் வீதம் தற்பொழுது 8% வீதமாகவே உள்ளது. மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் தனது முதலீட்டை குறைத்து தனியார் நிறுவனங்களிடம் நாட்டை அடகு வைத்து விட்டது என்பதனையே மேற்படி புள்ளிவிபரம் காட்டி நிற்கின்றது.

அண்ணளவாக தமது வருமானத்தில் 62% வீட்டு வாடகை செலுத்தவே பயன்படுத்துகின்றனர் பிரித்தானிய மக்கள். ஒருபுறம் வீடுக்கான தேவை அதிகரிக்கும் அதே வேலை மறுபுறம் வீட்டு வாடகை ஐந்து வீதத்தால் வருடாவருடம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில் தெரேசா மே பல லட்சம் வீடுகளைக் கட்டி தனியார் நிறுவனங்களின் ஊடாக விற்பனை செய்வதையே தனது திட்டமாகக் கொண்டுள்ளார். இதன் மூலம் பணக்காரர்கள் தொடர்ந்தும் வீட்டை வாங்குவார்கள் தவிர வீடற்றவர்கள் தொடர்ந்தும் வீடற்றவர்களாகவே இருக்கப்போகின்றனர்.

தெரேசா மையின் திட்டம் என்பது வீடற்றவர்களின் பிரச்சனையை ஒரு வியாபாரத்திற்கான புள்ளியாகவே பார்க்கின்றதே தவிர மக்களின் வீடில்லாப் பிரச்சனை தீர்க்கப்படவேண்டும் என்ற நோக்கில் செயற்படவில்லை.

கோர்பினின் திட்டம் என்பது ஒரு மில்லியன் புதிய வீடுகள் கட்டுதல் அதில் அரை மில்லியன் கவுன்சில் வீடுகள் ஆகும். இதன் மூலம் வீடு வாங்கமுடியாத அல்லது வீட்டு வாடகை செலுத்த முடியாதவர்களுக்கு வீடு கிடைக்கபெறும் சாத்தியம் அதிகரிக்கும்.

16 மில்லியன் மக்கள் தமது வங்கிக்கணக்கில் நூறு பவுணுக்கும் குறைவான பணத்தையே கொண்டுள்ளனர். 17 மில்லியனுக்கும் அதிகான மக்கள் தமது கடனுக்கான மாதாந்த தவணை கட்டணத்தை செலுத்த முடியாதவர்களாகவே இருக்கின்றனர். இதனால் அடுத்தடுத்த அறவிடப்படும் அபராதம் மீண்டும் வங்கியாளர்களின் பாக்கற்றை நிரப்பவே பயன்படுகிறது.

கன்சர்வேடிவ் ஆட்சி தொடரும் பட்சத்தில் இந்நிலைமை இன்னும் இன்னும் அதிகரிக்கும் சாத்தியக்கூறுகளே உண்டு. ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு அடுத்த வாரச் சம்பளம் என்னவென்று தெரியாது?

மேலும் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு அடுத்தவாரம் வேலை இருக்குமா என்பது தெரியாது. இவ்வாறான நிலைமைகளில் அத்தைய ஒருவர் எவ்வாறு தமது குடும்பத்தை நடாத்தி செல்வது என்பதை சிந்தித்து பாருங்கள்.

பிரித்தானியாவில் இன்னும் நாலு மில்லியன் (4M) மக்கள் வறுமையினாலும், 40 % மான சிறுவர்கள் வறுமையினாலும், ஆறு மில்லியன் மக்கள் அடிப்படை சம்பளத்தை விட குறைவான சம்பளத்தை பெற்று சாதாரண வாழ்வை விட கீழ்த்தரமான வாழ்கையே வாழுகின்றனர்.

இந்த நிலைமை மாற்றபட வேண்டாமா? இன்றைய சமுகம் என்பது தமக்குள்ள பிளவுபட்டும் சமத்தும் இன்றியும் காணப்படுகின்றது. இந்தப் பிளவுகளின் மூலம், சமத்துவமின்மையின் மூலம் பயனடைபவர்கள் மிகச் சிறிய குழுவினரே.

அதிகார சக்திகளும் அக்குழுக்களுடன் சேர்ந்து பிளவுகளை அதிகரித்து தமது சுய லாபங்களை நிறைவேற்றிக் கொள்கின்றன. கல்வி, வேலை, மருத்துவம், சுகாதாரம், வியாபாரம் என அனைத்து இடங்களிலும் இதனால் பாதிக்கபடுவது பெரும்பாலான அடித்தட்டு, நடுத்தர வர்க்க உழைக்கும் மக்களாகும்.

பல நாட்டு எண்ணை வள நிறுவனங்கள் இணைந்து தெரேசா மேயிற்கு 390,000 பவுண்சுகள் நன்கொடையாக வழங்கியுள்ளன. தெரேசா மேயின் தேர்தல் பிரசாரங்களுக்கு இந்நிதியே பயன்படுத்தபடுகிறது.

மறுபுறத்தில் ஜெரமிக் கோர்பினுக்கான தேர்தல் நிதியானது பெரும்பாலும் ஒரு பவுண், இரண்டு பவுண் என சாதாரண உழைக்கும் மக்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள், தொழில்கட்சி உறுப்பினர்கள் போன்றோரிடமிருந்தே பெறப்படுகின்றது.

vitol நிறுவனம் 47,000 பவுண்சுகளையும், Rainworths Capital நிறுவனம் 28,500 பவுண்சுகளையும், பெற்றோலிய தொழில்நுட்பத் துறையில் முன்னணி வகிக்கும் OGN குரூப் கம்பனி 63,800 பவுண்சுகளையும், Petrotac நிறுவனம் 90,000 பவுண்சுகளையும் Crescent Petroleum நிறுவனம் 28,000 பவுண்சுகளையும் நன்கொடையாக வழங்கியுள்ளது.

இந் நிறுவனங்கள் ஏன் தெரேசா மேயி ற்கு நிதியுதவி வழங்குகின்றன. ஜெரமிக்கு கோர்பினுக்கு ஏன் வழங்கவில்லை என்பதன் பின்னணி அரசியலை அறிந்து கொண்டாலே போதும் ஜெரமிக் கோர்ப்பின் யார் பக்கம், தெரேசா மே யார் பக்கம் என்பது புரிந்துவிடும்.

கன்சர்வேடிவ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மேலும் நிதி உதவி வழங்குவதாக அந்நிறுவன முதலாளிகள் வாக்குறுதியும் அளித்துள்ளனர். அதற்கு ஏற்றாற் போல் கன்சர்வேடிவ் கட்சியின் கொள்கை விளக்க அறிவிப்பில் (Conservative Manifesto) எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டும் வகையில் கொள்கைகள், திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது, மக்கள் நலன் என்பது இரண்டாம் பட்சமாகவே காணப்படுகின்றது. கன்சர்வேடிவ் கட்சியின் கொள்கை என்பது மக்களுக்கானது அல்ல பல்தேசிய நிறு வனங்களுக்கானது என்பது இதிலிருந்து வெளிப்படையாக புலாகின்றது.

அண்மையில் கார்டியன் பத்திரிகையில் (08/05/17) வந்த தரவுகளின் படி தற்பொழுது இருபது பேரின் சொத்து மதிப்பு என்பது 192 மில்லியன் பவுண்சுகளாகும்.

இத்தொகையானது வருடாந்தாம் மருத்துவ சுகாதார சேவைக்கு ஒதுக்கப்படும் நிதியை விட அதிகமாகும். அரசுகள் கார்ப்ரேட் நிறுவனங்களின் அடியாளாக சேவகம் செய்வதனால் தனியார் சொத்து மதிப்பு அதிகமாகவும் அரச துறைகள் நிதி அற்றும் நலிந்தும் காணப்படுகின்றது.

கோர்பினின் கொள்கைகள் என்பது சமூகத்தில் நிலவும் பிளவுகளைக் குறைத்து, சமத்துவமின்மையைக் குறைத்து, தனியார் மீது கட்டுப்பாடுகளை விதித்து மக்கள் நலன் சார்ந்த விடயங்கில் அதிக முதலீடு செய்வதாகும்.

ஒட்டு மொத்த சமூக மேம்ப்பாட்டிற்கும் தற்போதைய உடனடி அவசர தேவையாக உள்ளார் ஜெரமி கோர்பின். இதனை உணர்ந்து கோர்பினை அடுத்த பிரதமர் ஆக்குவது சமூக மேம்பாட்டை விரும்பும், தனியார் நிறுவனங்களால், ஆதிக்க அரசுகளால் ஒடுக்கப்படும் மக்களை நேசிக்கும் அனைவரினதும் கடமையாகும்.

பிரித்தானியாவின் தேவை ஜெரமிக் கோர்பினா? தெரேசா மேயா ? Reviewed by Author on May 30, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.