அண்மைய செய்திகள்

recent
-

எட்டாக் கனியாகும் நல்லிணக்கம் : ஏமாற்றப்படும் தமிழர்கள்


இலங்கை அரசு பல்வேறு விதமான அபிவிருத்தித் திட்டங்களை செய்து வருவதோடு, இலங்கையை நல்லிணக்க நாடாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுக் கொண்டு வருகின்றது.

அதேபோன்று சர்வதேச நாடுகளோடு வழமைக்கு மாறான நப்புறவை தேடிக் கொண்டு, இலங்கைக்கு சர்வதேச ரீதியில் இருக்கக் கூடிய அவப்பெயரையும் நீக்குவதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்துக் கொண்டு வருகின்றது.

சர்வதேச தலைவர்கள் இலங்கை வருவதும், பேச்சுவார்த்தைகளை நடத்திச் செல்வதும், அதேபோல் இலங்கை அரசியல் தலைவர்கள் சர்வதேச உதவிகளை நாடிச் செல்வதும் அண்மைக்காலமாக அதிகரித்து விட்டது.

இந்த நிலையில் நாட்டில் பொருளாதாரத்தினை அடிப்படையாகக் கொண்டு அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தப் போவதாக இப்போதைய அரசு அறிவித்துக் கொண்டு வருகின்றது.

வெளிப்படையாக காட்டப்படும் இந்த விடயங்கள் மூலம் ஓர் நற்பெயரை இலங்கை அரசு சந்தித்துக் கொண்டு வருகின்றது. ஆனால் உண்மை நிலை என்ன?

அபவிருத்தி நல்லிணக்கம் எனப் பாடுபடுவதாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் அரசு, உண்மையாகவே நல்லிணக்கத்திற்காக பாடுபடுகின்றதா? அல்லது பேச்சளவில் மட்டும் தான் இருக்கின்றதா என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.

இன்றைய நிலையில் தமிழர்களுக்கு பெரும் பிரச்சினைக்குரிய விடயங்களாக காணப்படுவது, காணிகள் விடுவிப்பு, மற்றும் காணாமல் போனோர் - காணாமல் ஆக்கப்பட்டோர் போன்றனவே.

அடிப்படையில் வாழ்வாதாரத்திற்கும் திண்டாடும் வடக்கு கிழக்கு மக்கள் இருந்தாலும், உள் நாட்டு யுத்தம் நிறைவு பெற்ற நாள் தொட்டு இன்று வரை இந்த இரு பிரச்சினைகளும் கவனிப்பாரற்கு சென்று கொண்டிருக்கின்றது என்பதே உண்மை.

ஆட்சி அமைக்கப்படும் போது தமிழர்களின் காணி விடுவிப்பு பிரச்சினை முற்று பெறும், தமிழர்களின் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படும் என வாக்குறுதி அளித்த ஜனாதிபதியின் உறுதி மொழி இன்று ஏட்டிலும் கூட இல்லை.

கண் துடைப்புக்காக ஆங்காங்கே காணிகள் விடுவிக்கப்பட்டாலும் ஒட்டு மொத்தமாக அது நிறைவேற்றப்பட வில்லை. காரணம் தேசிய பாதுகாப்பு என்ற ஓர் போலிப் பதம்.

அதேபோல காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம். இந்த விடயம் தொடர்பில் ஆரம்பத்தில் இலங்கை அரசு காட்டிய அக்கறை அளப்பறியது.

ஒரு சில மாதங்களில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுத்து விடுவதனைப்போல, அதிவேகமாக செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. நல்லிணக்கப் பொறிமுறைச் செயற்பாடுகள் வடக்கு கிழக்கில் நடைபெற்றன.

அதேபோல் காணாமல் போனோர் அலுவலகம் என பலவகையாக செயற்திட்டங்களைக் கொண்டு வந்தது. மன்னிக்கவும் கொண்டு வரப்போவதாக ஓர் நாடகத்தை அரங்கேற்றியது.

இவற்றிக்கு என்ன நடந்து, இவற்றின் அடுத்த கட்ட நகர்வு எப்படி உள்ளது போன்ற விடயங்கள் எதுவும் இப்போது தெரிய வில்லை. ஆனால் வடக்கு கிழக்கு மக்களின் போராட்டங்கள் மட்டும் அப்படியே தொடர்கின்றது.

இதன் காரணமாக சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பிக் கொள்வதற்கான இவை ஓர் அவசர நாடகமாக அரற்கேற்றப்பட்டன என்ற வகை கண்ணோட்டமே அனைவருக்கும் ஏற்படுகின்றது.

அதேபோன்று காணி விடுவிப்பு என்பதற்கும் இதே நிலைதான். ஆனாலும் இன்று வரை தமிழர்களுக்கு நிரந்தத் தீர்வினை பெற்றுக் கொடுக்க அரசு முனைப்பு காட்டுகின்றதா என்பது பாரிய சந்தேகம்.

இந்த நிலையில் தமிழ் அரசியல் தலைவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள்? வடக்கில் நடைபெறும் மக்களின் போராட்டங்களை எத்தனை பேர் கண்டு கொண்டார்கள்?

பல பேருக்கு ஏன் தமிழ்மக்கள் போராட்டங்களைச் செய்து கொண்டு இருக்கின்றார்கள் என்பது கூட அறியாத நிலையில் தான் இருக்கின்றார்கள் என்பது தெள்ளத் தெளிவு.

இந்த இடத்தில் தென்னிலங்கையை எடுத்துக் கொண்டால், அங்கு ஓர் போராட்டம் என்றால் ஒட்டு மொத்த அரசியல் வாதிகளும் பதறிப்போவார்கள் தீர்வுகள் தேடி வராவிட்டாலும்.,

ஏதாவது ஓர் திட்டம் மூலம் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரும். ஆனால் தமிழர்களின் போராட்டம் கண்டுகொள்ளப் படுவது கூட இல்லை. ஏன் இந்த ஏற்றத் தாழ்வு?

நல்லிணக்கம் என்பதை நிலை நாட்டுவதாக கூறிக்கொள்ளும் அரசு இதனைத் தான் நல்லிணக்கப்படிகள் என்று கூறிக்கொள்கின்றதா?

ஆரம்பகால அரசுகள் வெளிப்படையாக தமிழர்களை அடக்கியது, இப்போதைய அரசு மறைமுகமாக ஏமாற்றிக் கொண்டு வருகின்றது என்பது இப்போதைய அரசியல் நகர்வுகள் மூலம் தெளிவாகின்றது.

அதாவது அன்று முதல் இன்று வரை தமிழர்கள் நாட்டுக்கு எதிரிகளாகவே பார்க்கப்பட்டு வருகின்றனர். என்பது பல விடயங்களில் தெளிவாக தெரிந்து விடுகின்றது.

ஆனாலும் கூட இவற்றிக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்போவது யார்? என்ற கேள்வி, எதிர்பார்ப்பு அனைவர் மனதிலும் இருக்கத்தான் செய்கின்றது.

எது எவ்வாறாயினும் தமிழர்களை அடக்கும், அல்லது ஏமாற்றிக் கொண்டு வரும் அரசு உண்மையாக தமிழர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முயற்சி செய்து அதனை நடைமுறைப் படுத்தும் வரை நல்லிணக்கம் என்பது எப்போதுமே இலங்கைக்கு எட்டாக் கனிதான்.

எட்டாக் கனியாகும் நல்லிணக்கம் : ஏமாற்றப்படும் தமிழர்கள் Reviewed by NEWMANNAR on May 13, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.