அண்மைய செய்திகள்

recent
-

சந்திரிகா மட்டுமல்ல; அந்த ஈசன் சொன்னாலும்...வடக்கின் ஆளுநர் ரெஜினோல்ட் கூரே


காணாமல்போனவர்கள் தொடர்பில் எந்த விசாரணையும் செய்ய முடியாது என வடக்கின் ஆளுநர் ரெஜினோல்ட் கூரே கூறியிருக்கையில்,

காணாமல்போனவர்கள் கொலை செய்யப் பட்டிருக்கலாம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளார்.

காணாமல்போனவர்கள் உயிருடன் இருப்பார்கள் எனத் தான் நம்பவில்லை என்பது சந்திரிகா குமாரதுங்கவின் கருத்தாக உள்ளது.

இக்கருத்தையே இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் சொல்ல நினைத்தாலும் அதனை அவர்கள் வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் இருக்கின்றனர்.

இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. அதில்  ஒன்று காணாமல்போனவர்களின் உறவுகள் இன்றுவரை தமது பிள்ளைகள் உயிரோடு இருப்பதாகவே நம்புகின்றனர். அதற்கு அவர்கள்  வலுவான ஆதாரங்களை முன்வைக்கின்றனர்.

அதாவது எங்கள் பிள்ளைகளை இராணுவத்தினரிடம் ஒப்படைத்துள்ளோம். பிள்ளைகளைப் படையினரிடம் ஒப்படைத்தபோது மதத்தலைவர்கள் குறிப்பாக கத்தோலிக்க அருட் தந்தையர்கள் உடனிருந்துள்ளனர்.

இராணுவ அதிகாரிகள், பொறுப்பதிகாரிகள் எனப் பலரின் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்ட எங்கள் பிள்ளைகள், மருமக்கள், பேரப் பிள்ளைகள் இவர்கள் எங்கே? என்பதுதான் காணாமல்போனவர்களின் பெற்றோர் - உறவினர்கள் கேட்கும் கேள்வி.

படையினரிடம் சரணடைந்தவர்கள் அல்லது படையினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை போரில் காணாமல்போனவர்கள் என்று ஒரு போதும் குறிப்பிட முடியாது.

அவர்களைப் படையினர் சிறையில் அடைத்தோ அல்லது முகாம்களில் தடுத்தோ வைத்திருக்க வேண்டும்.

அவ்வாறு அவர்கள் இல்லை என்றால், அவர்களைப் படையினர் கொன்று விட்டனர் என்பது பொருளாகும்.

பாதுகாப்பார்கள் என்று நம்பி படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட அல்லது சரணடைந்த  பிள்ளைகளுக்கு நடந்தது என்ன? என்பதை தெரியப்படுத்துவது அரசாங்கத்தின் தார்மீகக் கடமை.

எனினும் காணாமல்போனவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சொல்பவர்கள் யார் கொன்றார்கள் என்ற கேள்விக்குப் பதிலளிக்க முடியாமல் தத்தளிக்கின்றனர்.

இதனால் அவர்களின் பதில்கள் முன்னுக்குப்பின் முரணானதாக உள்ளது.

தவிர இரண்டாவது காரணம் காணாமல் போனவர்கள் கொல்லப்பட்டு விட்டனர் என்றால் அந்த உத்தரவை வழங்கியது யார்? எங்கு வைத்து கொல்லப்பட்டார்கள்? அவர்களின் உடல் எங்கே புதைக்கப்பட்டது? இப்படியான பல கேள்விகள் முன்னெழும்.

இதனால்தான் காணாமல்போனவர்கள் தொடர்பில் விசாரணை எதுவும் நடத்த முடியாது என வடக்கின் ஆளுநர் கூறியுள்ளார்.

இது ஆளுநரால் கூறப்பட்டதா? அல்லது ஆளுநரைக் கொண்டு கூறப்பட்டதா? என்ற வாதப் பிரதிவாதங்கள் புறம்பாக நடத்தப்பட வேண்டும்.

நிலைமை இதுவாக இருக்கையில், முன்னாள்  ஜனாதிபதி சந்திரிகா அம்மையார், காணாமல்போனவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறுகிறார். அவர் கூறுவதை காணாமல்போனவர்களின் உறவுகள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

ஏனெனில் அவர்களின் கேள்வி எல்லாம் எப்படிக் கொல்லப்பட முடியும்? எங்கள் பிள்ளை களை படையினரிடம் ஒப்படைத்ததற்கு கண் கண்ட சாட்சி உள்ளதல்லவா? என்பதுதான்.

ஆக, காணாமல்போனவர்கள் கொல்லப்பட்டுவிட்டனர்  என்பதை நிரூபிக்க பல உண்மைகளை அரசாங்கம் சொல்லித்தான் ஆக வேண்டும்.

இல்லையேல் சந்திரிகா அல்ல; சாட்சாத் ஈஸ்வரன் வந்து சொன்னாலும் காணாமல் போனவர்களின் உறவுகள் அதை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். இது சர்வ நிச்சயம்.

சந்திரிகா மட்டுமல்ல; அந்த ஈசன் சொன்னாலும்...வடக்கின் ஆளுநர் ரெஜினோல்ட் கூரே Reviewed by Author on June 02, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.