அண்மைய செய்திகள்

recent
-

மகாநாயக்கர்களின் முடிவு நல்லிணக்கத்துக்கு குந்தகமானது

நாட்டுக்குப் புதிய அரசமைப்புத் தேவையில்லை என்று மகாநாயக்க தேரர்கள் கூறுவது நாட்டில் நல்லிணக்கம் தேவையில்லை என்று சொல்வதற்குச் சமனானது. மகாநாயக்க தேரர்கள் தமது முடிவை உடனடியாக மீள்பரிசீலனை செய்ய வேண்டும். இதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளாக இருக்கின்றது. இவ்வாறு அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

புதியஅரசமைப்புத் தேவையில்லை என்று, மகாநாயக்க தேரர்கள் நேற்று முன்தினம் மீண்டும் ஒன்றுகூடி முடிவெடுத்துள்ளனர். இதனை அரசுக்குத் தெரியப்படுத்தப் போவதாகவும் கூறியிருந்தனர். மகாநாயக்க தேரர்களின் இந்த நிலைப்பாடு தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்று கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான முயற்சி இப்போது ஆரம்பிக்கப்படவில்லை. ஒன்றரை வருடங்களுக்கு முன்னரே அது ஆரம்பிக்கப்பட்டது. நாட்டில் உள்ள அனைவருக்கும் இது தெரியும். இவ்வாறான நிலையில், மகாநாயக்க தேரர்கள் திடீரென, புதிய அரசமைப்புக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர்கள் தங்களுடைய எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளனர். இவர்கள் ஏன் திடீரென்று இவ்வாறு செயற்படுகின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது.

நாட்டில் மக்களிடையே நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாக இருந்தால் புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும். நாட்டில் நடைமுறையிலுள்ள அரசமைப்பு தமிழ் மக்களின் பங்களிப்பு இல்லாமல் – அவர்கள் ஏற்றுக் கொள்ளாமல் கொண்டு வரப்பட்டது. தமிழர்கள் மீது திணிக்கப்பட்டது. இதனால்தான் நீண்ட கால ஆயுதப் போர் நடந்தது.

இந்த நிலமைகளிலிருந்து நாடு மீள வேண்டுமாக இருந்தால் புதிய அரசமைப்பு அனைவரினதும் இணக்கப்பாட்டுடன் ஏற்படுத்தப்பட வேண்டும். அப்படியான இணக்கப்பாடுகள் தற்போது ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

புதிய அரசமைப்பு உருவாக்கத்திற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை, சில நாள்களில் இறுதி செய்யப்படக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.

இவ்வாறான சந்தர்பத்தில் புதிய அரசமைப்புத் தேவையில்லை என்று மகாநாயக்கத் தேரர்கள் கூறுவது நாட்டில் நல்லிணக்கம் தேவையில்லை என்று கூறுவதற்கு ஒப்பானது. எனவே மகாநாயக்க தேரர்கள் தங்களது நிலைப்பாடுகளை மீள் பரிசீலனை செய்ய வேண்டும். இது எமது வேண்டுகோளாகவும் இருக்கின்றது – என்றார்.
மகாநாயக்கர்களின் முடிவு நல்லிணக்கத்துக்கு குந்தகமானது Reviewed by NEWMANNAR on July 06, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.