அண்மைய செய்திகள்

recent
-

முதலமைச்சருக்கு எதிராக செயற்பட்ட டெனீஸ்வரன்! ரெலோ தலைமைக்குழுவின் முடிவு


முதலமைச்சருக்கு எதிராக செயற்பட்ட டெனீஸ்வரன் கட்சியின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்து ஆறுமாத காலம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரெலோ அமைப்பின் செயலாளர் சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அமைந்துள்ள ரெலோ அமைப்பின் காரியாலயத்தில் வடக்கு மாகாண அமைச்சரவை விவகாரம் மற்றும் டெனீஸ்வரன் தொர்பில் மதியம் 2.30 தொடக்கம் இரவு 10 மணிவரை கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

ரெலோ தலைமைக்குழுக் கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே ரெலோ அமைப்பின் செயலாளர் சிறிகாந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

ரெலோ இயக்கத்தின் தலைமைக்குழு இன்றைய தினம் கூடி விவாதித்து எங்கள் கட்சி சார்பில் வடமாகாண சபை அமைச்சரவையில் டெனீஸ்வரன் தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுத்திருக்கின்றது.

ஏற்கனவே, அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஏன் அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கு காரணம் இருந்தால் தெரிவிக்குமாறு அவரிடம் கோரப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த வாரம் தலைமைக்குழு கூட்டத்திற்கு அவர் அழைக்கப்பட்ட நிலையில் வருகை தந்திருந்தார்.

கட்சி கட்டுப்பாட்டை மீறி அதாவது கட்சியின் அனுமதி பெறாமலும், அங்கீகாரம் பெறாமலும், கட்சியுடன் ஆலோசிக்காமலும், தன்னிச்சையாக வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பம் இட்டதன் மூலம் அவர் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறியிருந்தார்.

இது தொடர்பில் அவருக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்திருந்தார்.

நாங்கள் கருத்து பரிமாற்றங்களுக்கு பின்னர் அவருக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கினோம். ஏற்கனவே கூட்டமைப்பின் நான்கு கட்சித் தலைவர்களும், முதலமைச்சர் விக்னேஸ்வரனும், கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனும் யாழில் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்பின்னர் எடுத்துக் கொண்ட முடிவின் பிரகாரம் வடமாகாண முதலமைச்சர் தனது தலைமையிலான மந்திரி சபையை மீள அமைப்பதற்கு ஏதுவாக டெனீஸ்வரன் இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு கட்சியின் தீர்மானத்திற்கு அமைவாக இராஜினாமா செய்தால் அவருக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கையை இலகுவாக கொண்டு வரப்படும் என்றும் முடிவு எடுக்கப்பட்டு அவருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

இதற்கான கால அவகாசமும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. அடுத்து வரும் ஒரு நாளில் அந்த முடிவை அறிவிக்குமாறும் கோரப்பட்டிருந்தார்.

அதற்கு அமைவாக மறுநாள் இரவு கட்சியினுடைய தலைவர் செல்வம் அடைக்கலநாதனுடன் தொடர்பு கொண்டு தான் இராஜினாமா செய்யும் நிலைப்பாட்டில் இல்லை என்பதை தெரிவித்திருந்தார்.

பின்னர் பத்திரிகை மாநாட்டை நடத்தியும் அதனை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று மீண்டும் கட்சியின் தலைமைக் குழு கூடியது.

அவர் தொடர்பான ஒழுங்கு விவகார நடவடிக்கையை விரிவாக ஆராய்ந்து ஈற்றிலே ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு டெனீஸ்வரன் கட்சியின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இந்த ஆறு மாத காலம் அவருக்கு இடைக்கால தடை நடைமுறையில் இருக்கும். ஆறு மாத கால முடிவில் கட்சி மீண்டும் அவருடைய விவகாரத்தை எடுத்து இறுதி தீர்மானம் ஒன்றினை எடுக்கும்.

ஆகவே அவருக்கு எதிராக கட்சியினால் தீர்மானிக்கப்பட்டிருக்கும் கட்சியின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தும் முடிவு ஆறு மாதகாலம் நடைமுறையில் இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சபை உறுப்பினர்களான விந்தன் கனகரட்ணம், குணசீலன், சிவாஜிலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோதரராதலிங்கம், கட்சி தலைமைக் குழு உறுப்பினர்களான ஹென்றி மகேந்திரன், சிறீகாந்தா, கிரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சருக்கு எதிராக செயற்பட்ட டெனீஸ்வரன்! ரெலோ தலைமைக்குழுவின் முடிவு Reviewed by Author on August 21, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.