அண்மைய செய்திகள்

recent
-

வடமாகாண சபையின் உறுப்பினர்கள் தெரிவு! மாவை சம்பந்தனுக்கு கடிதம்.


வட மாகாணசபை மேலதிக ஆசனத்திற்கான அங்கத்தவர் நியமனம் தொடர்பாக இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“மேற்படி விடயத் தலைப்பிலான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் திரு.த.சித்தார்த்தன் அவர்கள் எமக்கும் ஏனையோருக்கும் பிரதியிட்டு தங்களுக்கு மின்னஞ்சல் மூலம் எழுதிய 2017.07.28ஆம் திகதி அனுப்பிய கடிதம் சார்பானது. இக் கடிதம் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

முதலிலே நாமோ இலங்கைத் தமிழரசுக் கட்சியோ, திரு. சித்தார்த்தன் அவர்களும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியும் எமக்கு வழங்கி வரும் ஒத்துழைப்பையும் ஆதரவையும் மதிக்கின்றோம் என்பதைக் கூறிக் கொள்ள விரும்புகிறோம்.

வடக்கு மாகாணசபைத் தேர்தல் முடிந்த பின்பு நடைபெற்ற கூட்டமைப்புக் கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல்களின் இறுதியில் மேலதிகமாகக் கிடைக்கப் பெற்ற (போனஸ்) ஆசனப் பகிர்வு தொடர்பாகப் பரிசீலிக்கப்பட்டு அதில் ஒரு ஆசனம் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கப்(முஸ்லீம்) பிரதிநிதிக்கு வழங்குவதென முடிவு செய்யப்பட்டது. அதில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் ஒத்துழைப்பு உதவியாகவிருந்தது.

எஞ்சிய இரண்டாவது ஆசனம் தொடர்பாக திரு.வீ.ஆனந்தசங்கரி அவர்களின் பெயர் முன்வைக்கப்பட்ட போது அது பற்றிய உடன்பாடு எட்டப்படாத நிலையில் திரு.ந.சிறிகாந்தா அவர்களின் ஆலோசனையின் பெயரில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் திருமதி மேரி கமலா அவர்களை சுழற்சி முறையில் முதலாவதாக நியமிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.

அவரது சமூகப் பின்புலத்தில் மாகாணசபை நிதியைப் பயன்படுத்த அவகாசம் தர வேண்டும் என்பதற்காக ஆறு மாதம் வரை உறுப்புரிமை நீடிக்கப்பட்டது. அதற்கு எல்லோரும் இணங்கியிருந்தனர்.

இதனையடுத்து ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் போட்டியிட்ட, வடக்கில் மலையகத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திரு.எம்.பீ.நடராஜ் என்பவரை நியமிப்பது என்றும் தனக்கு ஒதுக்கப்பட்ட மாகாணசபை நிதியை பயன்படுத்தி முடிக்காத நிலையில் மேலும் மூன்று மாதமேனும் உறுப்பினராயிருக்கும் அவகாசம் தரக் கோரியதாலும் மூன்று மாத அவகாசம் வழங்கப்பட்டது. அடுத்து 'ரெலோ'வுக்கு ஒரு வருடம் வழங்குவதென ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவாறு வழங்கப்பட்டது.

அந்தக்கால அவகாசத்தில் வன்னி மாநிலத்தில் திரு.கமலேஸ்வரனை நியமிக்கத் தீர்மானம் இருந்த பொழுது பொதுத் தேர்தலில் மருத்துவ கலாநிதி. சிவமோகன் வெற்றி பெற்றதால் திரு.கமலேஸ்வரன் மாகாணசபைக்குத் தெரிவு பெற்றதால் நாம் அவரை சுழற்சி முறையில் நியமிக்கத் தேவையிருக்கவில்லை.

அவ்வேளை திரு.சிவகரன் நியமிக்கப்பட எமது கட்சி நிர்வாகத்தினால் நடவடிக்கை எடுத்த பொழுதும் ஏற்கனவே தீர்மானித்தது போல திரு. மயூரனுக்கே நியமனம் வழங்கப்பட்டது. இறுதி நியமனத்தில் முன்பே தீர்மானித்தவாறு திரு. சிவகரன் நியமிக்கப்படவிருந்த போது அந்த நியமனம் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை காரணமாக வழங்கப்பட்டிருக்கவில்லை. அப்பொழுதும் புளொட் எந்தக் கோரிக்கையையும் முன் வைக்கவில்லை.

இறுதியாக நியமிக்கப்படும் உறுப்பினருக்கு ஒன்றரை ஆண்டு காலம் கொடுப்பது என்று ஏற்கனவே எடுத்த தீர்மானத்தின் படி தான் தமிழரசுக் கட்சிக்கு உரித்தான திரு.சிவகரன் இடத்திற்கு இறுதி நியமனத்திற்கு திரு.ஜெயசேகரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் நீண்ட காலம் தமிழரசுக் கட்சிக்காரராகவும் வர்த்தக சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி மாகாணசபைத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தபடியாலும் திரு.ஜெயசேகரம் தற்போது நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

ஆக எஞ்சிய ஒன்றரை வருட காலத்திற்கு மன்னார் மாவட்டத்தின் தமிழரசுக் கட்சி வேட்பாளரை நியமிப்பது என்றுமே தீர்மானிக்கப்பட்டதேயன்றி நாமறிந்த வரையில் இறுதியான ஐந்தாவது வருடம் புளொட் அமைப்பிற்கு வழங்கப்படுவதாக முடிவெடுத்ததாகத் தெரியவில்லை. இதுவே உண்மை நிலையாகும்.

திரு.செ.மயூரனின் பதவிக்காலம் 01.07.2017 ஆம் திகதி நிறைவு பெறுவதாக இருந்த போதும் அவர் முழு ஜுலை மாதமும் உறுப்பினராக செயற்பட பேரவைத் தலைவரால் ஏற்பாடு செய்யப்பட்டது. திரு.மயூரன் உறுப்பினருக்கு அந்தச் சந்தர்ப்பம் தெரிந்தேயிருந்தது. வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதங்களுக்கும் உரித்துடையவரானார்.

இந்த ஆசனப் பங்கீட்டில் முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு ஆசனம் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இதனடிப்படையிலேயே யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் திரு.இ.ஜெயசேகரனின் பெயர் முன்மொழியப்பட்டு 25.05.2017ஆம் திகதிய வர்த்தமான பிரசுரம் மூலம் நியமிக்கப்பட்டிருக்கிறது.

திரு. ஜெயசேகரன் அவர்களுடைய குடும்பம் ஒரு பாரம்பரியம் வாய்ந்த தமிழரசுக் கட்சிக் குடும்பமாகும். அவரைத் தேர்தலில் நிறுத்துகையில் அவர் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் உறுப்பினராக இருக்கவில்லலை என்பதை அக்கட்சியினரே ஒப்புக் கொள்வர் . எனவே அந்தக் கட்சிக்கு இரண்டாவது ஆசனம் வழங்கப்படுகின்றது என்ற கருத்துப் பொருத்தமற்றது.

தேர்தலில் இவ்வாறான நிலை எழுவது சாதாரணமாக காணப்படுகின்றது. உதாரணத்திற்கு தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் திரு பா. கஜதீபன், திரு சித்தார்த்தனுடன் உடன்பட்டவாறு பொதுவாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

முல்லைத்தீவில் திரு.கனகசுந்தரசாமி தமிழரசுக் கட்சியைச் சார்ந்தவராயினும் அவரை 'ரெலோ' தேர்ந்து தமக்குக் கிடைத்த வேட்பாளராக நியமித்தது. அவர் மறைந்த பொழுது 'ரெலோ'வின் தலைமை அடுத்து தங்கள் சார்பு வேட்பாளருக்கே இடம் தரவேண்டுமென வற்புறுத்தியது.

இதனால் பிரச்சினைக்குத் தீர்வு காண இணக்கமில்லாததால் தமிழரசுக் கட்சிப் பொதுச் செயலாளர் 'ரெலோ'வுக்குச் சாதகமாக நியமனத்தைச் செய்யாமல் திரு.க. சிவநேசனை நியமிப்பதற்கு வழிவிட்டிருந்தார்;. இதனையும் வலிந்து குற்றமாகச் சொல்லலாமா?

அடுத்து 'புளொட்' தலைமை தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவப் பண்புகள் தொடர்பிலும் விமர்சனத்துடன் கருத்துரைத்துள்ளது. நல்லவை நல்லதாக இருக்கட்டும். இவ் விமர்சனங்கள் பொருத்தமற்றவை ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. இச்சந்தர்ப்பத்தில் ஏனைய கூட்டமைப்புப் பங்காளிக் கட்சிகள் தலைமைப் பண்புகள் பற்றி நாம் தற்போது விமர்சிக்க விரும்பவில்லை.

முல்லைத்தீவில் வடமாகாண சபை அமைச்சராக வர வேண்டுமென மாகாணசபை உறுப்பினர்கள் திரு. ஜெகநாதனைப் பிரேரித்த போதும் அவர் காலமானதன் பின் அந்த இடம் தமிழரசுக் கட்சிக்குத்தான் வரவேண்டுமென தமிழரசுக் கட்சி வாதாடியிருக்கவில்லை என்பதையும் நினைவூட்டுகின்றோம்.

கூட்டமைப்புப் பதிவு செய்யும் விடயத்தில் பதிவுக்குப் பதிலாகப் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட இணங்கிய நான்கு கட்சிகளும் நடவடிக்கையெடுத்த பொழுது தமிழரசுக் கட்சி கைச்சாத்திட முன்வந்த பொழுதும் அதனை கூட்டுக் கட்சிகளே தாமதப்படுத்தி விட்டதால் அவ்வுடன்படிக்கை நடைமுறைக்கு வரவில்லை. இருப்பினும் இப்பபொழுதும் அந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை பொருத்தமானதாக இருக்கும் என நம்புகிறோம்.

எவ்வாறெனினும் 'புளாட்' தலைமையின் கோரிக்கைக்குத் தீர்வு காணும் வகையில் ஒரு புதிய அணுகல் முறையை கடைப்பிடிக்கலாம் என நம்புகிறோம். நாம் நேரில் சந்தித்துப் பேசுவதன் மூலம் முரண்பாடுகளிருப்பின் தீர்த்துக் கொள்ள முடியும் எனவும் நம்புகிறோம்.

வரலாற்றில் தமிழரசுக் கட்சி காத்து வந்திருக்கின்ற பொறுமை, தலைமையின் ஜனநாயகப் பண்புகள், பொறுப்புக்கள் பற்றியும் மக்கள் அறிவார்கள் என்பதையும் நினைவூட்ட விரும்புகிறோம்.” என இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் உறுப்பினர்கள் தெரிவு! மாவை சம்பந்தனுக்கு கடிதம். Reviewed by Author on August 05, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.