அண்மைய செய்திகள்

recent
-

தமிழ்பேசும் மக்களின் நீண்டகால அபிலாஷை இதுவே! நாடாளுமன்றில் சம்பந்தன்


எமது நாட்டிற்கான அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் செயல்முறையிலேயே நாம் அனைவரும் ஈடுபட்டுள்ளோம். பிளவுபடாத, பிரிக்கப்பட முடியாத ஐக்கிய இலங்கை என்ற உறுதியான கட்டமைப்புக்கமைவாக இது மேற்கொள்ளப்படுவதாக எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்நாங்கள் யாவரும் சுயமாக விரும்பி ஒப்புக்கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் கூடிய வகையில் அரசியலமைப்பு உருவாக்கப்படும். நியாயமான, ஏற்புடையதான, போதியளவான தேசிய ஒருங்கிசைவின் அடிப்படையில் உருவாக்கப்படும் அரசியலமைப்புச் செயற்பாடுகள் வெற்றிகரமாக முடிவுறும்போது அது இந்தப் பிரச்சினைக்கான உறுதியான முடிவைக் கொண்டுவரும்

தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் பறங்கியர் போன்றோர் வாழுகின்ற நாடாக இலங்கை உள்ளது. அத்துடன் இலங்கை பல்வேறு அரசியற் கட்சிகள் செயற்படுகின்ற ஜனநாயகம் தொழிற்படுகின்ற நாடாகும். இரண்டு பிரதான அரசியற் கட்சிகளும் மாறிமாறி இந்த நாட்டின் அரசாங்கத்தை அமைத்து ஆட்சி செய்திருக்கும் அதேவேளை, ஏனைய கட்சிகளும் தங்களுடைய வகிபாகத்தைக் கொண்டிருந்தன. அரசியலமைப்பை அரசியல் சூழ்நிலைகளின் பிடிக்குள் இருந்து வெளியே கொண்டு வந்து, இலங்கையை ஒரு தேசமாகவும் இலங்கையர் என்ற அடையாளத்தையும் காட்டும் பண்புகளை உருவாக்கக்கூடிய அரசியலமைப்பு ஒன்றை பெற்றுத் தரும்.

இலங்கை சுதந்திரம் அடைந்த எழுபது ஆண்டுகளாக இந்த நிலைமையை அடைய எம்மால் முடியவில்லை. 1987 – 1988 ஆண்டு தொடக்கம் அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாடுகள் தொடர்கின்றன. செயல்வலு குறைந்ததாக இருந்தபோதும், அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தமே மத்திக்கும் மாகாணங்களுக்குமிடையிலான அதிகாரப் பங்கீட்டை முதற் தடவையாக அரசியலமைப்புக்குள் உள்ளடக்கியது.

அப்பொழுது தொடக்கம் பின்வந்த ஜனாதிபதிகளும் அரசாங்கங்களும் தேசியப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வைக் காண்பதற்குப் பங்களிப்புச் செய்யக்கூடிய முன்னேற்றகரமான பிரேரணைகளை முன்வைத்தனர். ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸ அவர்களின் ஆட்சிக் காலத்தில் மங்கள முனசிங்க தெரிவுக்குழுவின் பிரேரணைகள் வந்தன. ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களின் ஆட்சிக் காலத்தில் அமைச்சரவையின் அனுமதியுடன் 2000 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரசியலமைப்புப் பிரேரணைகள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக் காலத்தில் அவரால் நியமிக்கப்பட்ட பல்லின நிபுணர்களின் பிரேரணைகள் உருவாக்கப்பட்டதோடு, பேராசிரியர் திஸ்ஸ விதாரண அவர்களைத் தலைவராகக் கொண்ட சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் குழு அதன் அறிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் சமர்ப்பித்திருந்தது.

இப்போதைக்கு அவை பற்றிய விபரங்களுக்குள் நான் போகவில்லை. அத்தகைய பிரேரணைகள் பல்வேறு புறம்பான காரணங்களுக்காக அரசியலமைப்புடன் சேர்க்கப்படாவிட்டாலும் அப்பிரேரணைகள் தொடர்பாகக் கணிசமான ஒருங்கிசைவு காணப்பட்டதென்பதைத் தெரிவிப்பது போதுமானதென எண்ணுகிறேன்.

உண்மையில் இதுமுன்னைய செயற்பாடுகளின் தொடர்ச்சியென குறிப்பிட்டுக் கூறுவதோடு, இந்தச் செயற்பாடு முழுமையாக வித்தியாசமான ஒரு சூழ்நிலையில் இடம்பெறுவதனால், இந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிடக் கூடாதென எல்லோரும் நியாயமாகவும் உறுதியுடனும் இருந்தால் இது வெற்றியடையக் கூடிய எல்லாச் சாதகமான நிலைமைகளும் உள்ளன. தமது அடையாளமும், கௌரவமும் அங்கீகரிக்கப்படும் நியாயமானதும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதுமான அரசியலமைப்பு ஏற்பாடுகளே தமிழ்பேசும் மக்களின் நீண்டகால அபிலாஷையாக இருந்து வருகின்றது.


தீர்வு காணப்படாத நிலைமைகளின் விளைவாக முழு நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளன. தமிழர்களும் சிங்களவர்களும் நாட்டைவிட்டு வெளியேறி பிற நாடுகளில் புகலிடம் பெற்றுள்ளதனால் இந்த நாடு திறமையானவர்களைப் பாரிய அளவில் இழந்துள்ளது; பல்வேறு வழிகளிலும் இந்த நாட்டின் எதிர்காலத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சர்வதேச ரீதியில் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.நாங்கள் எமது நாட்டின் நற்பெயரை மீட்டெடுத்து சர்வதேசத்தின் மதிப்பை பெறவேண்டிய தேவை உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்பேசும் மக்களின் நீண்டகால அபிலாஷை இதுவே! நாடாளுமன்றில் சம்பந்தன் Reviewed by Author on September 22, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.