அண்மைய செய்திகள்

recent
-

தமிழினத்தின் பெருமிதங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வோம்: வைரமுத்து


நம் முன்னோர்கள் சேர்த்து வைத்த தமிழ் இனத்தின் பெருமிதங்களை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து பேசினார்.

‘தினமணி’ நாளிதழ் சார்பில் தமிழுக்கு தொண்டாற்றிய இலக்கிய முன்னோடிகள் குறித்து கவிஞர் வைரமுத்து தொடர்ந்து உரையாற்றி வருகிறார். அந்த வரிசையில், சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில், நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘மொழிகாத்தான் சாமி’ என்ற தலைப்பில் தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் குறித்து கவிஞர் வைரமுத்து உரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்கு தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:-

இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் இந்தியாவின் பழம்பெருமைகள் பாடமாக்கப்படும் என்று ஒரு செய்தி வந்திருக்கிறது; மகிழ்ச்சி. ஆனால், இந்தியாவின் பெருமைகள் யாவை என்பதை மதவாத குழுக்கள் முடிவு செய்துவிடக்கூடாது. அறிஞர் குழு முடிவு செய்ய வேண்டும்.

இந்தியா என்பது வடக்கு என்ற ஒரு திசை மட்டுமல்ல. எல்லா தேசிய இனங்களுக்குமான ஆதிப்பெருமைகள் வரலாற்றுத் தளத்தில் தொகுக்கப்பட வேண்டும். இந்தியாவின் அழகே அதன் வேற்றுமைதான். ஒவ்வொரு நிறமும் தனித் தனியே ஓரழகு; வானவில்லோடு கூடினால் தான் பேரழகு.

ஆனால், வானவில்லில் இடம் பெறும் எந்த நிறமும் தன் தனித்தன்மையை இழந்து விடுவதில்லை. அப்படித்தான் இந்திய கூட்டமைப்பில் கூடியிருக்கும் எந்த தேசிய இனமும் தன் மொழியை தன் கலாசாரத்தை இழக்க சம்மதிப்பதில்லை. எல்லோரும் ஒரே காற்றைத்தான் சுவாசிக்கிறோம். ஆனால் இந்தியா முழுமைக்கும் ஒரே மூக்கில் சுவாசித்துவிட முடியாது.


உ.வே.சாமிநாத அய்யர் குறித்த கட்டுரை உரையாற்றும் நிகழ்ச்சியின் போது, அவரது உருவப்படத்துக்கு கவிஞர் வைரமுத்து, தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தியபோது எடுத்த படம்.

தமிழ் சமுதாயத்தின் தொன்மரபுகள் அந்த பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும். வடக்கே சமஸ்கிருதம் என்றால் தெற்கே தமிழ்மொழிதான் எங்கள் பூகோளத்திற்கு மூலம். அந்த தமிழின் அழியாத பெருமைகளுக்கு அடையாளம் கொடுத்தவர் தான் தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர்.

பத்துப்பாட்டு பத்தும், எட்டுத்தொகையுள் ஐந்தும், ஐம்பெருங்காப்பியங்களுள் மூன்றும் அவரால் பனை ஓலையில் இருந்து அச்சு எந்திரத்திற்கு மடைமாற்றம் செய்யப்பட்டன. அவர் பதிப்பித்த அந்த பழைய இலக்கியங்கள் இல்லை என்றால் தமிழர்களின் ஆதிப்பண்பாட்டுக்கு ஆதாரங்கள் இல்லாமல் போயிருக்கும்.

ஒரு குழந்தை இறந்தாலும் அல்லது அது பிண்டமாகவே பிறந்தாலும் அதை வாளால் கீறிப் புதைக்கும் வீரத்திற்குச் சொந்தக்காரர்கள் தமிழர்கள்.

ஒரு தலைவன் தேரேறி வந்து கொண்டிருக்கிறான். தேர் ஒரு சோலையைக் கடக்கிறது. உடனே தன் தேரோட்டிக்குச் சொல்கிறான், “தேர்ப் பாகனே! ஓசையிடும் இந்தத் தேரின் மணிகளை அடக்கிவிடு. ஏனென்றால் இந்தச் சோலைகளில் தேனெடுக்கும் வண்டுகளின் அமைதியை அது அழித்துவிடக்கூடும்” இப்படிப்பட்ட ஈரத்திற்கும் சொந்தக்காரர்கள் தமிழர்கள்.

வடமொழியின் ஊன்றுகோல் இன்றி தனித்து இயங்க வல்லது தமிழ் என்பதை இலக்கணத்தால் நிறுவியவர் கால்டுவெல் என்றால், இலக்கியத்தால் நிறுவியவர் உ.வே.சாமிநாத அய்யர். ஊர் ஊராய் ஏடு தேடி அந்த அந்தணக் கிழவன் சந்தனமாய்த் தேய்ந்திராவிடில் ஒரு செம்மொழியின் முதல் தகுதியான தொன்மை என்பதற்கு நாம் ஆதாரமற்றுப் போயிருப்போம்.

இலக்கியப் பேரறிவும், இலக்கணச் சீரறிவும் கரையான் தின்ற மிச்சத்தை வாசித்துக் கொண்டு கூட்டிப் பொருள் காணும் கூரறிவும் படைத்தவர் உ.வே.சாமிநாத அய்யர். எத்தனையோ இடர்ப்பட்டு நம் முன்னோடிகள் சேர்த்து வைத்த தமிழ் செல்வத்தைப் போற்றியும், புகழ்ந்தும், காத்தும், கற்பித்தும், வாசித்தும், வாழ்ந்தும் வருவது தான் அந்த முன்னோர்களுக்கு நாம் செலுத்தும் முதல் மரியாதையாகும்.

வேறு எந்த இனத்துக்கும் கிட்டாத பெருமிதங்கள் நமக்கு உண்டு. அந்த பெருமிதங்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்தி முடிக்கும் பெருத்த கடமை நமக்கு உண்டு. அந்த அழுத்தமான கடமையைத்தான் இந்தக் கட்டுரைகளின் வாயிலாக ஆற்றி வருகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழினத்தின் பெருமிதங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வோம்: வைரமுத்து Reviewed by Author on September 09, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.