அண்மைய செய்திகள்

recent
-

உயிர் ஆபத்தையும் எதிர்நோக்கியுள்ள ஈழ அகதிகள் -


ஐக்கிய நாடுகள் சபையினால் அகதி அந்தஸ்து ஏற்றுக்கொள்ளப்பட்டு தம்மை மற்றுமொரு நாட்டில் குடியேற்றுவதாக உறுதியளிக்கப்பட்டுள்ள போதிலும் வேறு நாடுகளில் குடியேற்றப்படாது தாம் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவதாக இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகள் கவலை வெளியிட்டுள்ளனர். இதனால் இறுதி கட்ட யுத்தத்தில் காயமடைந்தவர்கள் உரிய மருத்துவ சிகிச்சைகள் இன்றி உயிர் ஆபத்தையும் எதிர்நோக்கியுள்ளதாக இந்தோனேசிய அகதிகள் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போதும், அதன் பின்னரும் உயிர் அச்சுறுத்தல் காரணமாக ஸ்ரீலங்காவை விட்டு வெளியேறிய முன்னாள் போராளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பலர் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு அவுஸ்ரேலியா சென்ற நிலையில் இந்தோனேசிய கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு அங்குள்ள அகதிகள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய இந்தோனேஷியாவின் வட சுமத்திரா மாகாணத்தின் தலைநகரமான மெடானில் உள்ள அகதிகள் தடுப்பு முகாமில் 300ற்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


இவர்களால் மீண்டும் ஸ்ரீலங்கா திரும்ப முடியாது என்பதையும், அவர்கள் அனைவரும் அகதி அந்தஸ்து பெறுவதற்கு தகுதியானவர்கள் என்பதையும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் உறுதிப்படுத்தியும் உள்ளது.எனினும் தாம் தமிழர் என்ற காரணத்திற்காக அகதி அந்தஸ்து வழங்கப்பட்ட தம்மை வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்க இந்தோனேசிய அரசாங்கம் மறுப்பதாக ஈழத் தமிழ் அகதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். ஆனால் தம்மைப் போன்று தஞ்சம்கோரி படகுப் பயணத்தை மேற்கொண்ட நிலையில் இந்தோனேசிய கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட ஏனைய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் அகதிகளை விரைவாக இந்தோனேசிய அரசாங்கம் வெளி நாடுகளில் குடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்வதாகவும் ஈழத் தமிழ் அகதிகள் சுட்டிக்காட்டுகின்றார்.

அதேவேளை. 5 ஆறு வருடங்களாக அனாதரவான நிலையில் தாம் நிர்கதியாகியுள்ளமையினால் தமது குடும்பங்கள் சிதைவடைந்துள்ளதாகவும் ஈழத் தமிழ் அகதிகள் கவலைத் தெரிவிக்கின்றனர். இறுதிக்கட்ட யுத்தத்தில் படுகாயமடைந்த பலரும் இந்தோனேசிய அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகள் மத்தியில் இருக்கின்றனர்.அரசியல் தஞ்சம் கோரி பல வருடங்களுக்கு முன்னதாக நாட்டை விட்டு வெளியேறிய தமக்கு அகதி அந்தஸ்த்து ஏற்றுக்கொள்ளப்பட்டும் தம்மை வேறு நாடுகளில் குடியேற்றாததன் காரணமாக உரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியாததால் தமது எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் இறுதிக்கட்ட போரின் போது காயமடைந்த ஈழத் தமிழ் அகதியான அசோகராசா ரஞ்சித் தெரிவிக்கின்றார்.

இதேவேளை இறுதிக்கட்ட போரின் போது படுகாயமடைந்த நிலையில் நாட்டை விட்டு வெளியேறி அரசியல் தஞசம் கோரும் நோக்கில் ஆபத்தானப் படகுப் பயணத்தை மேற்கொண்ட நிலையில் இந்தோனேஸிய கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த ஈழத் தமிழ் அகதியொருவர் உரிய சிகிச்சைகள் இன்றி கடந்த இரண்டாம் திகதி உயிரிழந்திருந்தார்.இந்தோனேசியத் தலைநகர் ஜகர்தாவிலுள்ள அகதிகள் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மாலதி படையணியின் முன்னாள் போராளியான சந்தியா என்றழைக்கப்படும் ரமணன் சியாமலா என்பவரே உரிய சிகிச்சைகள் இன்றி பரிதாபகரமாக உயிரிழந்திருந்தார்.

இந்த நிலை இறுதிக்கட்ட போரின் போது படுகாயமடைந்து உரிய சிகிச்சைகள் இன்றி இந்தோனேசிய அகதிகள் தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஏனைய ஈழத் தமிழ் அகதிகளுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என தெரிவித்துள்ள ஈழத் தமிழ் அகதிகள், ஐ.நா வினால் அகதி அந்தஸ்த்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள தம்மை வேறு நாடுகளுக்கு உடனடியாக மாற்றி உரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள அனுமதிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உயிர் ஆபத்தையும் எதிர்நோக்கியுள்ள ஈழ அகதிகள் - Reviewed by Author on October 05, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.