அண்மைய செய்திகள்

recent
-

ஜெயலலிதா மரணத்தில் 19 சந்தேகங்கள்!- திகில் கிளப்பும் தீபா கணவர் மாதவன் -


ஜெயலலிதா மரணத்தில் 19 சந்தேகங்கள் இருப்பதாக, தீபாவின் கணவர் மாதவன், விசாரணை கமிஷனிடம் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க, தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்துள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள், விசாரணை கமிஷனிடம் எழுத்து வடிவான வாக்குமூலங்களை தாக்கல் செய்யலாம் என்று நீதிபதி ஆறுமுகசாமி அறிவித்தார். அதன்படி வாக்குமூலங்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன், இன்று ஜெயலலிதா சமாதிக்குச் சென்றார். பிறகு அவர், விசாரணை கமிஷனிடம் வாக்குமூலங்களைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், ஜெயலலிதா மரணத்தில் 19 சந்தேங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பேசிய மாதவன்,
கடந்த 22.09.2016ல் ஜெயலலிதா வீட்டில் இருந்த சி.சி.டி.வி கமராக்கள் வேலை செய்ததா என்று விசாரிக்க வேண்டும்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக, மருத்துவர்கள், செவிலியர்கள், வீட்டு வேலைக்காரர்கள், டிரைவர்கள், சமையல்காரர்கள், இஸட் பிளஸ் பாதுகாப்புப் படையினர்கள், மாநில காவல்துறை தலைவர் மற்றும் பாதுகாவலர்கள் ஆகியோரை விசாரிக்க வேண்டும்.
எந்த நேரமும் ஜெயலலிதாவுடன் இருந்த சசிகலா, ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர்கள், போயஸ் கார்டனுக்கு வந்து செல்லும் ஜெயலலிதாவின் நலன்விரும்பிகள், அதிகாரிகள், சசிகலாவின் உறவினர்கள் ஆகியோரை விசாரிக்க வேண்டும்.

மனு கொடுத்த மாதவன் 24 மணி நேரமும் தயார் நிலையில் ஆம்புலன்ஸ் இருக்கும் போது, ஜெயலலிதா மயங்கி விட்டார் என்று அப்போலோவில் உள்ள ஆம்புலன்ஸுக்குத் தகவல் கொடுத்து, மருத்துவமனைக்கு தாமதமாக ஜெயலலிதாவை அழைத்துச் சென்றது குறித்து விசாரிக்க வேண்டும்.
ஜெயலலிதா உயிரோடு இருந்த போது இரத்த சொந்தங்கள், உறவினர்கள், அவரது உண்மையான நலன் விரும்பிகள் ஆகியோரைச் சந்திக்க விடாமல் செய்து, தங்களது ஆதிக்கத்தை வளர்த்துக் கொண்ட சசிகலா, இளவரசி மற்றும் அவர்களது மொத்த குடும்பத்தினர்களும் ஏன் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து அக்கறை செலுத்தவில்லை. அவர்கள் தங்களின் சுயலாபத்திற்காக, வேண்டுமென்றே ஜெயலலிதா உடல்நலத்தில் சதிவலை பின்னினார்களா என்று விசாரிக்க வேண்டும்.

சசிகலாவின் கணவர் நடராசனின் உடல்நலத்தில் செலுத்திய அக்கறை, ஏன் ஜெயலலிதா உடல் நலத்தில் செலுத்தவில்லை என்பது குறித்து விசாரிக்க வேண்டும்.
அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட சசிகலா, மன்னிப்புக் கடிதம் கொடுத்து போயஸ் கார்டன் வீட்டுக்குள் நுழைந்தார். அந்தக் கடிதத்தில், 'தன்னை மீண்டும் வீட்டில் பணிப்பெண்ணாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் எந்தக் காலத்திலும் எனக்கோ, என் குடும்ப சம்பந்தப்பட்டவர்களுக்கோ கட்சியில் பதவிகள் வேண்டாம் என்றும், என் குடும்பத்தினரிடம் எந்தக் காலத்திலும் தொடர்பு வைத்துக் கொள்ள மாட்டேன்' என்றும் உறுதியளித்திருந்தார். ஆனால், ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கு முன்பு சசிகலா உறவினர்கள் எப்படி போயஸ் கார்டன் வந்தார்கள்.

அதன்பிறகு, தொடர்ச்சியாக அவர்கள் அப்போலோ மருத்துவமனையில் இருந்தார்கள் என்பது குறித்து விசாரிக்க வேண்டும்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவை எந்த கட்சித் தலைவர்களையும் நலன் விரும்பிகளையும் ஏன் அமைச்சர்களையும்கூட சந்திக்க விடவில்லை.
இதை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தடுத்ததா அல்லது சசிகலா குடும்பத்தினர் தடுத்தார்களா என விசாரிக்க வேண்டும்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது யாரெல்லாம் சந்திக்க வந்தார்களோ, குறிப்பாக இன்றைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின், அப்போதைய தமிழக ஆளுநர், ஜெயலலிதாவைச் சந்திக்க வந்த கட்சித் தலைவர்கள், தற்போதைய முதல்வர், துணை முதல்வர் மற்றும் அனைத்து அமைச்சர்களையும் விசாரிக்க வேண்டும்.

குறிப்பாக ஜெயலலிதாவைச் சந்திக்க விடாமல் தடுத்தவர்கள் குறித்து விசாரிக்க வேண்டும்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமயத்தில், இட்லி சாப்பிட்டார், டீ குடித்தார், உப்புமா சாப்பிட்டார், டி.வி பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்ன டாக்டர்களிடம் விசாரிக்க வேண்டும்.
ஜெயலலிதா உடல் நலம் தேறி விட்டார். அவர் விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் இல்லம் திரும்பலாம் என்று அறிக்கை வெளியிட்ட அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டியையும் லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலேவையும் எம்ய்ஸ் மருத்துவர்களையும் விசாரிக்க வேண்டும்.
அப்போது, மருத்துவப் புலனாய்வில் சிறந்து விளங்கும் மருத்துவர்களைக் கொண்டு விசாரிக்க வேண்டும்.

மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த சமயத்தில் நடந்த இடைத்தேர்தலின் போது, ஏன் ஜெயலலிதா கையெழுத்திடவில்லை என்பதை விசாரிக்க வேண்டும்.
அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று ஜெயலலிதாவைப் பார்க்க, நானும் என் மனைவி தீபாவும் எத்தனையோ முறை முயன்ற போதும் எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. எங்களை உள்ளே விடாமல் தடுத்த நபர்கள் யார்? அந்த சக்தி எது என்பதையும் விசாரிக்க வேண்டும்.
அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட இடத்தில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி.கமராக்கள் குறித்து விசாரிக்க வேண்டும்.
டிசம்பர் 5-ம் தேதி, ஜெயலலிதா இறந்திருந்தால், எதற்காக எம்பார்மிங் செய்ய வேண்டும் என்பது குறித்து விசாரிக்க வேண்டும்.

ஜெயலலிதா உடலை வைத்த சவப்பெட்டியைச் செய்தது யார்?
ஒரே இரவுக்குள் சிறப்பு சவப்பெட்டியைத் தயார் செய்ய முடியுமா என்று விசாரிக்க வேண்டும். 

சசிகலாவின் சகோதரர் திவாகரன், அவருடைய மகன் ஜெயானந்த் ஆகியோர், ஜெயலலிதாவின் வீடியோ இருப்பதாகக் கூறியுள்ளனர். அதை ஏன் வெளியிடவில்லை. அதை கமிஷனர் அவர்களிடமிருந்து கைப்பற்ற வேண்டும். சிகிச்சையின் போது ஜெயலலிதாவின் கால்கள் அகற்றப்பட்டனவா என்று விசாரிக்க வேண்டும்

என 19 சந்தேகங்களைக் கூறியுள்ளேன் என்றவர், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, வீட்டில் தாக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியிருப்பதால், அவரிடமும், சிறப்பாக சிகிச்சை அளித்திருந்தால் ஜெயலலிதா இன்னும் உயிரோடு இருந்திருப்பார் என்று கூறிய திருநாவுக்கரசரிடமும் விசாரணை கமிஷன் விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
ஜெயலலிதா மரணத்தில் 19 சந்தேகங்கள்!- திகில் கிளப்பும் தீபா கணவர் மாதவன் - Reviewed by Author on November 21, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.