அண்மைய செய்திகள்

recent
-

வங்கிக்கிளையில் தமிழ் ஊழியர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்தது தேசவிரோதமாம்!


முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றிய ஹற்றன் நஷனல் வங்கிக் கிளை ஒன்றின் உதவி முகாமையாளரும் ஓர் ஊழியரும் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் உள்ள ஏச்.என்.பி கிளையில் கடந்த 18 ஆம் திகதி முகாமையாளர்களும் ஊழியர்களும் ஒன்றுசேர்ந்து நினைவுச் சுடர் ஏற்றி வணக்க நிகழ்வில் ஈடுபட்டனர். இந்த நினைவேந்தல் தொடர்பான நிழற்படம் உள்வட்டார சமூகவலை இணைப்புகளில் பகிரப்பட்டதும் அதைக் கண்ட பேரினவாதிகள் வங்கிக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக கொழும்பில் உள்ள வங்கியின் தலைமையலுவலக உயரதிகாரிகள் கிளிநொச்சி வங்கியின் உதவி முகாமையாளரை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூர்மை செய்தித்தளத்திற்குத் தெரிவித்தன.

யுத்தத்தில் தம் உயிர்களை அர்ப்பணித்த உறவினர்களை நினைவுகூர்வது மக்களுக்கு இருக்கவேண்டிய உரிமை என உதவி முகாமையாளர் தலைமை அலுவலக உயர் அதிகாரிகளுக்கு எடுத்துரைத்துள்ளார்.
வடமாகாண மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட வடமாகாண சபை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்த பொது வேண்டுகோளை விடுத்திருந்தமையும் இங்கு குறிப்பிடப்படவேண்டியது.

போராளிகளாயிருந்து உயிர்நீத்தவர்களை முள்ளிவாய்க்கால் நாளில் நினைவு கூருவதை நிலைமாறு கால நீதிக்குள் உள்ளடக்காது எதிர்க்கும் மனப்பாங்கைச் சிங்கள மக்கள் மத்தியில் வளர்த்துவிட பேரினவாதிகள் முயல்கிறார்கள்
ஆனாலும் குறித்த வங்கியின் தலைமையோ விடுதலைப் புலிகளின் போராளிகளை நினைவு கூர்ந்து வங்கியில் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டிருப்பதாகவும், அது தேசத்திற்கு விரோதமானது என்ற தொனியிலுமே முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவேந்தல் என்பதை அணுகியிருப்பதாக தகவல் அறிந்த வட்டரங்கள் தெரிவித்தன.
அதுமட்டுமின்றி, அந்த நிகழ்வை ஏற்பாடு செய்த உதவி முகாமையாளர், மற்றும் ஊழியர் ஒருவரையும் பணியில் இருந்து உடனடியாக இடை நிறுத்துவதாக அறிவித்தமை ஓர் இனவாதச் செயலாகவும் தமிழ் மக்களால் பார்க்கப்படும் அபாயம் இருக்கிறது என்பதை ஏச். என். பியின் தலைமை ஏன் உணரத்தவறியது என்ற கேள்வியை வேறு வங்கிகளில் கடமையாற்றும் தமிழ் ஊழியர்கள் எழுப்புகிறார்கள்.

கிளிநொச்சி வங்கியில் பணியாற்றும் ஏனைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களையும் பணியில் இருந்து இடை நிறுத்துவதற்கான விசாரணைகளை, கொழும்பில் இருந்து கிளிநொச்சிக்கு வந்த உயர் அதிகாரிகள் ஆரம்பித்துள்ளதாகவும் கிளிநொச்சி ஊடவியலாளர் ஒருவர் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஏனைய தனியார் வங்கி ஊழியர்களும் கவலையும் அச்சமும் கொள்கிறார்கள்.

பேரினவாதிகளின் முனைப்புக்குத் தீனி போடும் வகையிலேயே சர்வதேச சமூகம் என்று அணிவகுத்துள்ள அரசுகள் தத்தம் நாடுகளில் விதித்துள்ள தடைகளும் அமைந்திருக்கின்றன
முள்ளிவாய்க்கால் நினைவுச் சுடர் ஏற்றும் நிகழ்வு ஹற்றன் நஷனல் வங்கிக் கிளை உட்பட வடபகுதியில் உள்ள ஏனைய வங்கிகளிலும் ஒவ்வொரு வருடமும் இடம்பெறுவது வழமை.
ஆனால் இந்த வருடம் மாத்திரம், குறித்த வங்கியில் விசாரணைகளை நடத்தி ஆரம்ப கட்டமாக உதவி முகாமையாளர் மற்றும் ஊழியர் ஒருவரை பணியில் இருந்து இடைநிறுத்தப்படும் நிலை உருவாகியிருப்பது நல்லிணக்கம் தொடர்பான எந்த எண்ணக்கரு கொழும்பின் வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் வளர்ந்து செல்கிறது என்பதைக் காட்டுகிறது என்று சமூக அவதானிகள் கூர்மை செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.

விசாரணகள் தொடரும் என்ற போர்வையில் இடை நிறுத்தம் செய்யப்பட்டவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தையும் மற்றையவர் அக்கரைப்பற்றையும் (அம்பாறை) சேர்ந்தவர் என்றும் அறியமுடிகிறது.

அதேவேளை மேற்படி இருவர் தற்காலிகமாகப் பணி நீக்கப்பட்டமை குறித்து வங்கியின் இணையத்தளத்தில் செய்திக்குறிப்பு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறைந்தபட்சம், வடமாகாண சபை நிறைவேற்றியுள்ள தமிழ் இன அழிப்பு நினைவு நாள் என்பதையாவது தமது நாடுகளில் அங்கீகரிக்க சர்வதேச சமூகம் முன்வருமா?
ஒருபுறம் நிலைமாறுகால நீதி என்பதற்குள் கூட்டு நினைவுக்கான உரிமைகளும் உள்ளடக்கம் என்று இலங்கை அரசுக்கு அறிவுரை சொல்லும் சர்வதேச சமூகம் மறுபுறம் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்று சட்டரீதியாக வெளிநாடுகளில் தடைசெய்துவைத்திருக்கின்றது.
இதனால் போராளிகளாயிருந்து உயிர்நீத்தவர்களை முள்ளிவாய்க்கால் நாளில் நினைவு கூருவதை நிலைமாறு கால நீதிக்குள் உள்ளடக்காது எதிர்க்கும் மனப்பாங்கைச் சிங்கள மக்கள் மத்தியில் வளர்த்துவிட முயலும் பேரினவாதிகளின் கருத்தியலுக்கு சர்வதேச சமூகமே காரணியாகிவிடுகிறது.

ஆகவே, இலங்கைத்தீவில் சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் நல்லிணக்கம் ஏற்பட சர்வதேச சமூகம் அர்த்தமுள்ள வகையில் செயற்படவேண்டுமானால் தமிழ் கூறு நல்லுலகோடு அது ஒரு நல்லிணக்கத்தை முதலில் ஏற்படுத்தவேண்டும்.

வடமாகாண சபை நிறைவேற்றியுள்ள இன அழிப்பு நினைவு நாள் என்பதைத் தமது நாடுகளில் அங்கீகரிக்க சர்வதேச சமூகம் முன்வருமானால் இது சாத்தியமாகலாம்.

குறிப்பாக ஈழத்தமிழ் புலம்பெயர் சமூகத்தை தன்னகத்தே கணிசமாகக் கொண்டுள்ள கனடா போன்ற நாடுகளை இதைச் செய்ய வைக்கும் வகையில் அங்குள்ள தமிழ்க் கல்விமான்களும் செயற்பாட்டாளர்களும் அரசியல்வாதிகளும் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.

ஆக, இலங்கைத் தீவில் நல்லிணக்கத்திற்காக சர்வதேசம் வகுக்கவேண்டிய அணுகுமுறை தான் என்ன என்பதைப் பற்றி வடக்கு-கிழக்கு வாழ் தமிழ் மக்களும், புலம் பெயர்ந்த தமிழர்களும் அவர்தம் தலைமைகள் என்று தங்களைச் சொல்லிக்கொள்பவர்களும் எப்படிச் சிந்திக்கவேண்டும் என்பதைக் கோடிகாட்டுவதே கிளிநொச்சி வங்கிச் சம்பவம் சுட்டிநிற்கும் அரசியற் செய்தியாகிறது.

வங்கிக்கிளையில் தமிழ் ஊழியர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்தது தேசவிரோதமாம்! Reviewed by Author on May 25, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.