அண்மைய செய்திகள்

recent
-

அபாரமாக முதல் வெற்றியை பதிவு செய்த வங்கதேசம் -


ஆசியகோப்பை தொடரின் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில், இலங்கை அணி 137 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் போன்ற ஆறு அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நேற்று துவங்கியது.

இதில் முதல் போட்டியில் இலங்கை-வங்கதேசம் அணிகள் மோதின. அதில் நாணய சுழற்சியில் வென்ற வங்கதேச அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம் இக்பால், லிடன் தாஸ் ஆகியோர் களமிறங்கினர்.
இலங்கை அணி சார்பில் முதல் ஓவரை வீசிய மலிங்கா அந்தணியின் துவக்க ஆட்டக்காரர்களை வெளியேற்றி வங்கதேச அணிக்கு அதிர்ச்சி அளித்தார்.
முதல் ஓவரின் 5-ம் பந்தில் லிடன் தாஸ், கடைசி பந்தில் சகிப் அல் அசன் ஆகியோரை அவுட்டாக்கினார்.

லக்மல் வீசிய இரண்டாவது ஓவரின் கடைசி பந்து தமிம் இக்பாலின் இடது கையை பதம் பார்த்ததால், வலியில் துடித்த அவர் (2) ரிட்டையர்டு ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார். இதனால் வங்கதேச அணி துவக்கத்தில் தத்தளித்து கொண்டிருந்தது.
இந்த இக்கட்டான சூழலில் முஷ்பிகூர் ரஹீம் மற்றும் மிதுன் ஆகிய இருவரும் பொறுப்பாக ஆடி, அந்த அணியை நெருக்கடியிலிருந்து மீட்டனர்.

இருவருமே அபாரமாக ஆடி அரைசதம் அடித்தனர். மூன்றாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 133 ஓட்டங்களை சேர்த்தது.
நீண்ட நேரம் களத்தில் நின்ற இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இலங்கை பவுலர்கள் திணறியபோது, மீண்டும் பந்துவீச வந்தார் மலிங்கா.

மலிங்காவை அந்த அணியின் தலைவர் மேத்யூஸ் அழைத்ததற்கு மீண்டும் பலன் கிடைத்தது.
26-வது ஓவரின் 3வது பந்தில் மிதுனை வீழ்த்தினார் மலிங்கா. 68 பந்துகளில் 63 ஓட்டங்கள் எடுத்து மிதுன் வெளியேறினார். அதற்கு அடுத்த ஓவரை வீசிய அபான்சோ, மஹ்மதுல்லாவின் விக்கெட்டை வீழ்த்தினார்.
28-வது ஓவரின் கடைசி பந்தில் அடுத்த விக்கெட்டையும் வீழ்த்தினார் மலிங்கா. ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் நிதானமாக ஆடிய ரஹீம், சதம் விளாசினார்.

ரஹீமிற்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய முஸ்தாபிசுர் ரஹ்மான், ரன் அவுட்டானதை அடுத்து, தொடக்கத்தில் ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி களத்தை விட்டு வெளியேறிய தமீம் இக்பால் மீண்டும் களத்திற்கு வந்தார்.
சதமடிக்கும் வரை நிதானமாக ஆடிய ரஹிம், கடைசி ஓவர்களில் ருத்ர தாண்டவம் ஆடினார். 48-வது ஓவரில் ரஹீம் இரண்டு பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் விளாசினார். 49-வது ஓவரில் 5 ஓட்டங்கள் மட்டுமே எடுக்கப்பட்டது.
திசாரா பெரேரா வீசிய கடைசி ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் விளாசிய ரஹீம், மூன்றாவது பந்தில் அவுட்டானார். இதையடுத்து வங்கதேச அணி 261 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ரஹிம் 150 பந்துகளில் 144 ஓட்டங்களை குவித்தார். இதுதான் ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது அதிகபட்ச ஓட்டம் ஆகும்.
இலங்கை அணி சார்பில் மலிங்கா 4 விக்கெட்டும், தனஞ்செயா டி சில்வா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து, 262 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக உபுல் தரங்காவும், குசால் மெண்டிசும் இறங்கினர்.
வங்காளதேச அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி இலங்கை அணி வீரர்களை விரைவில் பெவிலியனுக்கு அனுப்பி வைத்தனர்.

உபுல் தரங்கா 27 ஓட்டங்களிலும், குசால் பெராரா 11 ஓட்டங்களிலும், மேத்யூஸ் 16 ஓட்டங்களிலும் அவுட்டாகினர்.
மற்றவர்கள் ஒற்றை இலக்க எண்ணில் அவுட்டாகினர். 19-வது ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 69 ஓட்டங்கள் எடுத்து இலங்கை அணி தத்தளித்தது.
இறுதியில், கடைநிலை வீரர்கள் ஓரளவு போராடினர். தில்ருவான் பெராரா 29 ஓட்டங்களிலும், சுரங்கா லக்மல் 20 ஓட்டங்களிலும் அவுட்டாகினர்.

இறுதியில், இலங்கை அணி 35.2 ஓவரில் 124 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட்டானது. இதனால் வங்கதேசம் 137 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வங்காளதேசம் அணி சார்பில் மோர்டசா, முஸ்தபிசுர் ரகுமான், மெஹிதி ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இலங்கை அணி அடுத்த போட்டியில் வரும் 17-ஆம் திகதி ஹாங்காங் அணியுடன் மோதுகிறது. அதே சமயம் வங்கதேசம் அணி தன்னுடைய அடுத்த போட்டியில் 20-ஆம் திகதி ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதுகிறது.





அபாரமாக முதல் வெற்றியை பதிவு செய்த வங்கதேசம் - Reviewed by Author on September 16, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.