அண்மைய செய்திகள்

recent
-

கூத்து நாடகங்கள் நூலுருப்பெறுவது காலத்தின் கட்டாயமாகும்...


ஏட்டுப் பிரதிகளாக-கையெழுத்துப் பிரதிகளாக இருக்கும் கூத்து நாடகங்கள் நூல் வடிவம் பெறுவது காலத்தின் கட்டாயமாகும். இந்நாடகங்களை அழிவிலிருந்து பாதுகாக்கவும் அனைவரின் கைகளுக்கும் இந்நாடகங்கள் சென்று சேரவும் இந்த நூலாக்க முயற்சி அவசியமானதாகும் என அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் தெரிவித்தார்.

   வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மன்னார் பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்திய – பண்பாட்டலுவல்கள் திணைக்கள நிதி அனுசரணையில் நூல் வடிவம் பெற்ற ‘சந்திரகாசன் நாடகம்’ என்ற மூன்று இரவுக் கூத்து மற்றும் ‘மரிகருதாள் நாடகம்’ என்ற ஓர் இரவுக் கூத்து ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

  மன்னார் தமிழ்ச்சங்கத்தின் நிறுவுனரும் மன்னார் மறைமாவட்டத்தின் மடுமாதா சிறிய குருமட அதிபரும்  பல்சமய உரையாடல் ஆணைக்குழு மற்றும் இறையழைத்தல் ஊக்குவிப்பு ஆணைக்குழு ஆகியவற்றின் இயக்குனருமாகிய தமிழ் நேசன் அடிகளார் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும்போது தொடர்ந்து கூறியதாவது

  இன்று ஒவ்வொரு வருடமும் மன்னார் மாவட்டத்தின் ஏதாவது மூன்று அல்லது நான்கு கிராமங்களில் ஓர் இரவுக் கூத்தான வாசாப்புக்கள் மற்றும் இரண்டு அல்லது மூன்று இரவுக் கூத்தான நாடகங்கள் மேடையேற்றப்பட்டு வருகின்றனை. இந்தக் கூத்துக்கள் இந்த மக்களின் சமூக மற்றும் சமய வாழ்வியலோடு இரண்டறக்கலந்துவிட்ட ஒரு கலை வடிவமாக உள்ளது.
  ஏட்டுப்பிரதிகளாக-கையெழுத்துப் பிரதிகளாக இருந்த பல நாட்டுக்கூத்து நாடகங்கள்  காலவோட்டத்தில் காணாமல்போய்விட்டன. குறிப்பாக யுத்த சூழ்நிலையில் அவை தொலைந்துவிட்டன. இன்று இருப்பவற்றில் பல அழிந்துபோகும் ஆபத்தையும் எதிர்நோக்கியுள்ளன.

இப்படியான இழப்புக்களைத்தான் நாம் ஈடுசெய்யமுடியாத இழப்புக்கள் என்று சொல்கின்றோம். ஒரு வீடு அழிந்தால் அல்லது ஒரு வாகனம் தொலைந்தால் நாம் மீண்டும் அதனைப் பெறமுடியும். ஆனால் ஒரு கலை இலக்கியப் படைப்பு அழிந்துபோனால் அதை மீண்டும் உருவாக்க முடியாது.
   இதைவிட பொதுவாக ஏட்டுப்பிரதிகளாக-கையெழுத்துப் பிரதிகளாக இருக்கும் வாசாப்பு மற்றும் நாடகங்களை ஆய்வுநோக்கத்திற்காகக்கூட மற்றவர்களின் கையில் கொடுக்க விரும்பாத இறுக்கமான பாரம்பரியமும் இங்கு உண்டு.
  இப்படியானதொரு நிலையில் கூத்து நாடகங்களை நூலுருவாக்குவதன் மூலம் இவை காலாகாலத்திற்கும் பாதுகாக்கப்படவும்- எல்லோருடைய கைகளுக்குப் போய்ச்சேரவும் வாய்ப்பு ஏற்படுகின்றது.

  இந்த நூலுருவாக்க முயற்சியில் ஈடுபட்டிருக்கும் வடமாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் - குறிப்பாக இந்த நூலாக்க முயற்சிகளுக்கு ஊக்கம் அளித்துவரும் வடமாகாண ஆளுனரின் தலைமைச் செயலாளர் திரு. அ. பத்திநாதன் அவர்கள் நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவர். பண்பாட்டலுவல்கள் திணைக்களம் சென்ற வருடம் மூன்று  நாடகங்களையும் இந்த வரும் இரண்டு நாடகங்களையும் அச்சிட்டமை குறிப்பிடத்தக்கது.
  பல ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த புலவர்கள் எழுதிய இந்நாடகங்கள் இன்று நூல் வடிவம் பெறுகின்றன. தமது படைப்புக்களை நூலுருவில் காண்பதற்கு இப்புலவர்களுக்குக் கொடுத்துவைக்கவில்லை.


-    அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார்-






கூத்து நாடகங்கள் நூலுருப்பெறுவது காலத்தின் கட்டாயமாகும்... Reviewed by Author on September 05, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.