அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தோட்டவெளி மறைசாட்சிகள் புனதர்களாக்கப்பட நாம் ஒன்றித்து செபிக்க வேண்டும்---ஆயர் இம்மானுவேல் ஆண்டகை.


மன்னார் மறைமாவட்டத்தில் தோட்டவெளியில் விசுவாசத்துக்காக வீழ்த்தப்பட்ட வேதசாட்சிகளை புனிதர்களாக ஆக்குவதற்கு நாம் அனைவரும் ஒன்றித்து செபிக்க வேண்டும். அத்துடன் இவர்களின் மூலம் புதுமைகள் பெற்றிருப்பின் அவைகளை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் மன்னார் தோட்டவெளி அலயத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு  பிடலிஸ் லயனல் இம்மானுவேல் ஆண்டகை இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் மறைமாவட்டத்தின் வருடாந்த முதியோர் தின விழா புதன் கிழமை
(17.10.2018) முதியோர் சங்க சமாச போசகர் மற்றும் தலைவர் அருட்பணி அல்பன் இராஐசிங்கம், முன்னாள் அதிபர் எஸ்.ஏ.மிராண்டா ஆகியோர்களின் ஏற்பாட்டில் தோட்டவெளி புனித வேதசாட்சிகளின் இராக்கினி ஆலய வளாகத்தில் நடைபெற்றது.

இவ் விழாவில் மன்னார் மறைமாவட்டத்தின் 36 பங்குகளிலிருந்து அறுநூறுக்கு மேற்பட்ட முதியோர்கள் கலந்து கொண்டனர். காலை தொடக்கம் மாலை வரை வழிபாடு மற்றும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு  பிடலிஸ் லயனல் இம்மானுவேல் ஆண்டகை, வவுனியா கல்வியல் கல்லூரி முன்னாள் பீடாதிபதி பேணாட், மற்றும் அருட்பணியாளர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

இங்கு ஆயர் மேதகு  பிடலிஸ் லயனல் இம்மானுவேல் ஆண்டகை தொடர்ந்து உரையாற்றுகையில்

நான் மன்னார் மறைமாவட்ட ஆயராக தெரிவு செய்யப்பட்டபோது அந்நேரம்
முதியோர்களாகிய நீங்கள் எனக்கு வரவேற்பு அளித்தீர்கள். அப்பொழுது சொற்ப பேரைத்தான் நான் கண்டு கொண்டேன். ஆனால் இன்று இங்கு அறுநூறுக்கு மேற்பட்டோரை காண்கின்றேன்.

உங்களின் காலை நிகழ்வுக்கு நான் கலந்து கொள்ளாதபோதும் இப்பொழுது உங்களில் பலர்  பரிசுப் பொருட்களை வாங்கும் பொழுது நீங்கள் வயது
முதிர்ந்திருந்தாலும் பல மகிழ்ச்சிக்குரிய நிகழ்வுகளை
நடாத்தியிருக்கின்றீர்கள் என்பது புலனாகிறது.

மறைமாவட்டங்களை நோக்கும்போது எமது மன்னார் மறைமாவட்டத்தில் மாத்திரமே ஒரு தலை சிறந்த முதியோர் சங்க சமாசம் இருப்பதை நான் காண்கின்றேன்.

இதற்கெல்லாம் முக்கிய காரணகத்தா உங்கள் முதியோர் சங்க சமாச இயக்குனர் அருட்பணி அல்பன் இராஐசிங்கம் அடிகளார். அவர் எப்பொழுதும் இதை நல்லமுறையில் கட்டி எழுப்ப வேண்டும் என்ற சிந்தனையிலே இருப்பதையும் நான் அறிவேன்.

இவர் பல இடங்களுக்கும் சென்று உங்களை நல்வழிப்படுத்தி வருவதையிட்டு நான் அவருக்கு எனது நன்றியை தெரிவித்து நிற்கின்றேன்.

அத்துடன் நீங்கள் உங்கள் பங்குத் தளங்களிலும் உங்கள் பங்கு
அருட்பணியாளர்களின் ஒத்துழைப்புடன் நன்கு செயல்பட்டு வருவதும் எனக்கு நன்கு புரியும்.

மன்னார் மறைமாவட்டத்தில் 47 மறைமாவட்ட பங்குகள் காணப்படுகின்றன. இந்த 47 பங்குகளிலும் இந்த முதியோர் சங்கங்கள் இயங்க வேண்டும் என ஆசித்து நிற்கின்றேன்.

இந்த முதிர்ந்த வயதிலும் நீங்கள் துடிப்புடன் இங்கு இடம்பெற்ற
போட்டிகளில் பங்குப்பற்றி அதிலும் வெற்றிகளும் ஈட்டிய அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

நான் இங்கு உங்களுக்கு ஒரு முக்கிய விடயத்தை தெரிவிக்க விரும்புகின்றேன். நாம் இருக்கும் இந்த தோட்டவெளி மறைசாட்சிகள் ஆலய இடத்தில்தான் மறைசாட்சிகள் 1544 ம் ஆண்டு நமது விசுவாசத்துக்காக வீழ்த்தப்பட்டு இரத்தம் சிந்திய புனித இடமாக இருக்கின்றது.

இவர்களைப்பற்றி புனித சவேரியார் ஆழமாக எழுதி வைத்துள்ளார். ஆனால் நாம் இந்த மறைசாட்சிகளை இன்னும் புனிதர்களாக ஆக்காமால் இருந்து வருகின்றோம்.

இவர்களை புனிதர்களாக ஆக்குவதற்கு இது தோட்டவெளிக்கு மாத்திரம் சொந்தம் என தெரிவிக்க முடியாது. இது மன்னார் மறைமாவட்டத்தின் அனைத்து கத்தோலிக்க மக்களின் ஆழமான விசுவாசத்துக்கு எடுத்துக்காட்டாக அமைகின்றது.

நமது மறைமாவட்டத்தில் எவ்வாறு மருதமடு அன்னையின் புனித தலம் எல்லா மக்களையும் ஒன்றுக்கூட்டுகின்றதோ அதேபோல இவ் ஆலயமும் புனிதத்துவத்தில் மக்களை ஒன்றுக்கூட்டும் புனித தலமாக மேலும் சிறக்க வேண்டும் என எதிர்பார்த்து நிற்கின்றேன்.

இதற்கு நாம் வேண்டி நிற்பது மறைசாட்சிகளை புனிதர்களாக ஆகுவதற்கு நாம் அனைவரும் ஒன்றித்து செபிக்க வேண்டும். இவர்கள் மூலம் நாம் எதாவது வேண்டுதல் கேட்டு அவைகள் எமக்கு நிறைவடைந்தால் இங்கு ஒரு புத்தகம் வைக்கப்பட்டிருக்கும் பங்கு தந்தையிடம் கேட்டு அதில் பதிவு செய்யுங்கள்.
அது ஒரு சான்றாக அமையும்.

நான் இதுவிடயமாக கடந்த வாரம் உரோமாபுரிக்குச் சென்று இது சம்பந்தமான
கருதினாலை சந்தித்து உரையாடியுள்ளேன். ஆகவே இந்த மறையாட்சிகள் பற்றி பொது மக்கள் என்ன கருத்துக்கள் தெரிவிக்கின்றார்கள் என்பதை நாம் எண்பிக்க வேண்டியவர்களாகவும் இருக்கின்றோம்.

ஆகவே நாம் இந்த மறைசாட்சிகள் மூலம் புதுமைகள் பெற்றிருப்பின் நாம் இதன் பக்தியை வளர்க்கவும் இவைகளை தெரிவிக்கவும் கடமைப்பட்டிருக்கின்றோம்.
இவர்கள் புனிதர்களாக உயர்த்தப்படுவார்களானால் நாம் இவர்களுக்காக ஒரு
தினத்தை தெரிவு செய்து அதை கொண்டாடுவதற்கான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

மன்னார் தோட்டவெளி மறைசாட்சிகள் புனதர்களாக்கப்பட நாம் ஒன்றித்து செபிக்க வேண்டும்---ஆயர் இம்மானுவேல் ஆண்டகை. Reviewed by Author on October 21, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.