அண்மைய செய்திகள்

recent
-

சூப்பர் 10 பெண்கள் - தமிழகம்


அனுரத்னா-மக்கள் மருத்துவர்



மருத்துவமனைக்கு வரவே அஞ்சும் பழங்குடிகள், குடிகாரக் கணவனிடம் அல்லல்பட்டு உளவியல் பாதிப்புக்குள்ளாகித் தவிக்கும் பெண்கள், போதிய ஊட்டச்சத்தில்லாமல் நோய்களோடு போராடும் குழந்தைகள்... இவர்கள் தாம் மருத்துவர் அனுரத்னா வின் இலக்கு. பொன்னேரி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவராகப் பணியாற்றும் அனுரத்னா, பணி நேரம் தவிர, மற்ற நேரங்களிலெல்லாம் ஊர் ஊராகப் பயணிக்கிறார்.

எவ்விதப் பாகுபாடுமில்லாமல், எல்லா வீடுகளுக்குள்ளும் உரிமையோடு நுழைந்து சிகிச்சையளிப்பது, குழந்தை களுக்கு ஊட்டச்சத்து  உணவுகள் வழங்குவது, இடை நிற்கும் குழந்தைகளை மீட்டுப் பள்ளிக்கு அனுப்புவது, குடும்பக்கட்டுப்பாடு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது, குடிகார ஆண்களுக்கு கவுன்சலிங் என அடித்தட்டு மக்களின் நலனுக்கானதாகவே இருக்கிறது அனுரத்னாவின் வாழ்க்கை. வணிகமாகிப்போன மருத்துவத்துறையில் மாற்றம் காண விரும்புபவர்கள் அனுரத்னாவோடு ஒருநாள் நடந்து பார்க்க வேண்டும்.

சித்ரா ஜெயராமன்-களப்போராளி



கதிராமங்கலமாகட்டும், பூந்தோட்டமாகட்டும்...  காவிரிப்படுகையின் வளத்தைச் சுரண்டத் துடிக்கும் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து நடக்கும் எல்லாப் போராட்டங்களிலும் சத்தமில்லாமல் நிற்கிறார் சித்ரா ஜெயராமன்.

2014-ம் ஆண்டு, அடியாமங்கலத்தில் சித்ராவின் முதல் போராட்டம் தொடங்கியது. கணவர் ஜெயராமன் மீது 24 வழக்குகளையும், சித்ராவின்மீது மூன்று வழக்குகளையும் பதிவு செய்திருக்கிறது காவல்துறை. தனக்கும் கணவருக்குமான உடைகள் மற்றும் மருந்துகளோடு சிறைக்குச் செல்வதற்கான ஆயத்தங்களோடுதான் களத்துக்கு வருகிறார் சித்ரா.

சமீபத்தில், கதிராமங்கலத்தில் போராட்டம் நடத்திய ஜெயராமனை காவல்துறை பிடித்துச்செல்ல, அவர் எங்கிருக்கிறார் எனத் தெரியாத பதற்றச் சூழலிலும் தளராது மக்களோடு போராட்டக் களத்தில் நின்றார். பாதிக்கப்படும் மக்களுக்கு உறவாக, நம்பிக்கையாக நிற்கிற சித்ரா இயற்கையைக் காக்கும் ஆற்றல் மிக்க களப்போராளி!

பாப்பாள்-சமூகநீதி தேடும் பெண்



திருப்பூர் மாவட்டம் திருமலைக்கவுண்டம் பாளையம்தான் பாப்பா ளுக்குச் சொந்த ஊர்.

பக்கத்து ஊரில் சத்துணவுச் சமையலராகப் பணியாற்றிய இவர், சொந்த ஊருக்கு மாறுதல் வாங்கி வந்தார். ஆனால், ‘தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் சமைத்தால் எங்கள் வீட்டுக் குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்கே அனுப்ப மாட்டோம்’ என்று சாதியத்தைத் தூக்கிப் பிடித்தது கிராமம். பாப்பாளை பள்ளிக்கூடத்துக்குள் அனுமதிக்காமல் நுழைவாயிலைப் பூட்டினார்கள்.

`பசிக்கிற குழந்தைக்கு சாதி பார்த்து சோறு திங்கத் தெரியுமாய்யா? நான் ஆக்கிப்போடுற சோறு நல்லா இல்லைன்னா குழந்தைங்க சொல்லட்டும். உங்க சாதி வெறியை குழந்தைங்க மேல திணிக்காதீங்க’ எனப் பொங்கினார் பாப்பாள். `என்ன நடந்தாலும் இந்த ஊரைவிட்டுப் போகமாட்டேன்' என்று உறுதியாக நின்றார்.

தமிழகம் முழுக்க அனல் கிளப்பியது இந்த விவகாரம். ஆதரவுக்கரங்கள் நீண்டன. அச்சுறுத்தல்களும் அதிகமாகின. அத்தனை தடைக்கற்களையும் கடந்து, `என் கிராமம்... என் பள்ளி... என் வேலை...'  என நேசத்தோடு பணியாற்றிக்கொண்டிருக்கிறார் பாப்பாள்!

நர்த்தகி நட்ராஜ்-உறுதி உள்ளம்



ஐந்து வயதில் பாலினச் சிக்கலை உணர்ந்து தவித்து நின்றபோது, ஆறுதலாக இருந்தது நடனம். செழிப்புமிக்க குடும்பத்தையும் அன்பைக் கொட்டிய உறவுகளையும் பிரிந்து, தன் தோழியோடு வீட்டைவிட்டு வெளியேறிய நர்த்தகி போய் நின்றது, நடனமேதை கே.பி.கிட்டப்பா பிள்ளையின் வீட்டில்.

தங்களை மாணவர்களாக ஏற்காத குருவின் மனதை வெல்ல, தன் தோழி சக்தியோடு ஓராண்டுக் காலம் அவர் வீட்டின்முன் நின்றார். அந்த உறுதியும் தீவிரமுமே நர்த்தகியை இன்று இந்தியாவின் நாட்டிய நட்சத்திரமாக உயர்த்தியிருக்கிறது. உலகம் முழுவதும் பயணித்து, சங்க இலக்கியங்களையும், நவீனக் கவிதைகளையும், தமிழிசையையும் நடனத்தில் பயன்படுத்திப் பெருமைசேர்த்திருக்கிறார் நர்த்தகி.

எல்லாச் சூழலிலும் தன் பால் அடையாளத்தை முன்னிலைப்படுத்திக்கொள்கிற நர்த்தகிதான், `திருநங்கை' என்ற அழகு வார்த்தையைத் தமிழுக்குத் தந்தார். இப்போது இந்திய அரசு, பத்மஸ்ரீ விருதை நர்த்தகியின் கலைச்சேவைக்கு கிரீடமாகச் சூட்டியிருக்கிறது. `பாலினக் குழப்பம்' என்கிற வாழ்வைப் புரட்டிப்போடும் இயற்கைச் சிக்கலை வென்று, இன்று தேசத்தின் பெருமையாக மாறியிருக்கிற நர்த்தகி, எல்லோருக்குமான முன்மாதிரி!

மாரியம்மாள்-விளையாட்டு வீராங்கனை



தமிழகம் உருவாக்கி யிருக்கும் கால்பந்துச் சூறாவளி. கடந்த ஆண்டு நடந்த தேசிய ஜூனியர் கால்பந்துப் போட்டியில், தமிழக அணியை முதல் முறையாக சாம்பியன் ஆக்கியிருக்கிறார் இந்தச் சின்னப் பெண். இறுதிப் போட்டியில் இரண்டு கோல்கள் உட்பட, மொத்த தொடரிலும் 12 கோல்கள் - டாப் ஸ்கோரர்!

நாமக்கல்லில் நெசவுக் குடும்பத்தில் பிறந்து, காலணி வாங்கக் காசில்லாமல், புழுதிமண்ணில் வெறும் காலில் விளையாடிப் பழகிய இவர், இன்று இந்திய அணியின் உடையணிந்து, கோல் மழை பொழிந்து கொண்டிருக்கிறார்.

எல்லோரும், ‘மெஸ்ஸி பிடிக்கும்’ என்று பெயரளவில் சொல்வார்கள். இவரோ, தன் ஆதர்ச நாயகனின் பிரதியாகவே சாதித்துக்கொண்டிருக்கிறார். மெஸ்ஸியைப் போலவே மின்னல் வேகம், மிரட்டும் இடதுகால் ஷூட்டிங், அசரவைக்கும் வித்தைகள், அசாத்தியமான துல்லியம்... இந்தியா இதுவரை கண்டிராத ஒரு கால்பந்து வீராங்கனை இவர்!

மாநில அளவிலான போட்டிகளில் ‘மாரியம்மாள் மாதிரி விளையாடு’ என்று ஒவ்வொரு பயிற்சியாளரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இதுதான் இந்த 16 வயதுப் பெண்ணின் மாபெரும் வெற்றி!

பச்சையம்மாள்-கொத்தடிமை மீட்பாளர்



பழங்குடி மக்களின் ஒளிவிளக்கு, பச்சையம்மாள். கல் குவாரியில் கொத்தடிமை யாக வேலை செய்த அண்ணனைப் பார்க்கச் சென்றபோது, அவர் வாங்கிய கடனுக்காக பச்சையம்மாளையும் கொத்தடிமையாக்கினார் ஆண்டை.

அதே குவாரியில் எட்டு வயதிலிருந்து கொத்தடிமையாக வேலைசெய்துவந்த அருளைத் திருமணம் செய்துகொண்டு, குவாரியிலேயே வாழ்க்கையைத் தொடங்கினார்.

2012-ம் ஆண்டு, பச்சையம்மாளின் குடும்பம் குவாரியிலிருந்து மீட்கப்பட்டது. 

‘தான் மீண்டதைப்போல இந்த அடிமைத் தளையிலிருந்து தம் மக்களையும் மீட்க வேண்டும்’ என உறுதியெடுத்த பச்சையம்மாள், அந்தத் தருணத்திலேயே சமூகச் செயற்பாட்டாளர்களின் துணையோடு கல் குவாரியிலிருந்த 15 குடும்பங்களை மீட்டெடுத்தார். அன்று முதல், அதுவே அவரது பிரதான வேலையாகியது. இதுவரை கொத்தடிமைகளாக இருந்த 103 பேரை மீட்டு, அவர்கள் வாழ்க்கைக்கு வெளிச்சம் தந்திருக்கிறார்.

‘விடுவிக்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர் மறுவாழ்வு சங்கம்’ என்கிற அமைப்பையும் நடத்துகிறார். மிகவும் விளிம்புநிலையில் இருக்கும் இருளர் பழங்குடிகளின் உரிமைக்காகவும் மேம்பாட்டுக்காகவும் தொடர்ந்து போராடி வருகிறார்!

தமிழ்ச்செல்வி-மதிப்புக் கூட்டிய மங்கை



`விவசாயம் லாபம் தரும் தொழில் இல்லை' என்கிற எண்ணம் இளம் தலைமுறையினர் மனதில் ஆழப் பதிந்திருக்கிறது. இந்தச் சூழலில், வேளாண்மை மீதான அவநம்பிக்கையைப் போக்கி, எல்லோருக்குமான வழிகாட்டியாகியிருக்கிறார் தமிழ்ச்செல்வி.

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்துள்ள கொண்டையம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இளம் விவசாயி இவர். தன் தோட்டத்தில் விளையும் பொருள்களை மதிப்புக் கூட்டி நேரடியாக மக்களுக்கு விற்கிறார். வாழைக்காய்கள் சிப்ஸாகின்றன. தேங்காயிலிருந்து பால் எடுக்கிறார். எள்ளுருண்டை, கம்பு சாதம், கேழ்வரகுக் களி, ஒப்பட்டு, சந்தகை, கடலை உருண்டை என 50 கிலோ பொருள்களை 60 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மேட்டூர் அணைக்கு தினமும் கொண்டு சென்று விற்றுவிட்டு வீடு திரும்புகிறார். `விதைத்தோம், அறுத்தோம், வந்த விலைக்கு விற்றோம்’ என்ற மரபு விவசாயக் குடும்பத்தில் இருந்துவந்த தமிழ்ச்செல்வியின் வாழ்வில் இந்த மதிப்புக் கூட்டல் யுக்தி ஏற்படுத்திக்கொடுத்திருக்கும் மாற்றம், ஆச்சர்யம். நாள் ஒன்றுக்கு 3,000 ரூபாய் வரை லாபம் பார்க்கிறார். ``விவசாயிகள் வியாபாரியாக மாற வேண்டும். இடைத்தரகை ஒழிக்க இதுவே முதன்மை வழி’’ என்று அடித்துச்சொல்லும் தமிழ்ச்செல்விக்கு 2018-ம் ஆண்டின் சிறந்த பெண் விவசாயிக்கான ‘வேளாண் செம்மல்‘ விருது கொடுத்து கௌரவித்துள்ளது கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்!

சுபத்ரா தேவி-இயற்கையின் மகள்



மேற்குத்தொடர்ச்சி மலையில் 20 ஆண்டு களுக்கும் மேலாக வன உயிரினங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார் சூழலியல் ஆய்வாளர் சுபத்ரா தேவி.

பொதிகை மலையின் பசுமைமாறாக் காடுகளின் தன்மை, அரிய உயிரினங்கள், சூழலியல் பாதிப்புகளால் ஏற்படக்கூடிய மாற்றங்கள், வனவிலங்குகளிடம் ஏற்படும் மாறுபாடுகள் எனக் களத்தில் தங்கி ஆய்வுகளை மேற்கொள்ளும் சுபத்ரா, பொதிகை மலையைக் காக்க நடத்தும் போராட்டங்கள் நெடியவை.

பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோயில் திருவிழாவின்போது வனத்தில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் பற்றியும், தாமிரபரணி ஆறு மாசடைவது பற்றியும் சுபத்ரா நடத்தும் ‘ஏ ட்ரீ’ அமைப்பு, புகைப்பட ஆதாரங்களுடன் வெளியிட்ட அறிக்கை, அரசு நிர்வாகத்தை உலுக்கியது. அதன்பிறகே வனத்துறை விழித்தது.

மெக்ஸிகோப் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம், புதுவைப் பல்கலைக்கழகம் எனப் பல்வேறு உயர்பீடங்களில் கௌரவம் மிக்க பல விருதுகளைப் பெற்றிருக்கிறார் சுபத்ரா. மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் தங்கி, வனம்குறித்து ஆய்வுசெய்ய வரும் மாணவர்களுக்கு உதவுகிறார் இந்த இயற்கையின் மகள்!

திவ்யதர்ஷினி-ட்ரெண்ட் ஸ்டார்



90'ஸ் கிட்ஸின் நாஸ்டால்ஜியாவில் தொடங்கி, 2K கிட்ஸின் இன்ஸ்பிரேஷனானது வரை, சின்னத்திரையில் திவ்யதர்ஷினியின் பயணம் `வேற லெவல்' மாற்றம்; முன்னேற்றம்!

குறும்புப் பேச்சும், க்யூட் தமிழும் மட்டு மல்ல, விருந்தினர் களை நேர்த்தியாகக் கையாண்டு சாமர்த்திய மாகப் பதில்கள் வாங்குவதும் டிடி-யின் தனித்துவமான ஸ்டைல்தான்.

நொடிக்கு நொடி அப்டேட் ஆகும் ஊடக உலகில், ட்ரெண்டில் நிலைத்து நிற்பதே பெரும் சவால். அப்படிப்பட்ட இடத்தில் இளம் தொகுப்பாளர்களுக்கு இன்றைக்கும் பெஞ்ச் மார்க்காக இருக்கிறார் டிடி.

13 வயதிலேயே ஸ்டுடியோவில் அடியெடுத்து வைத்தவர் டிடி. சமீபத்தில் 20 ஆண்டுகளை நிறைவு செய்தது இவர் வாழ்க்கையின் மற்றுமொரு ஸ்வீட் எபிசோட். சின்னத்திரை தாண்டி இப்போது சினிமாவிலும் பிஸியாகியிருக்கும் டிடி-க்கு இன்னும் காத்திருக்கிறது... பல வருட சாதனைப் பயணம்!

ஸ்னோலின் - ஜான்சி-உயிர் தந்த இதயங்கள்



தூத்துக்குடியில், கடந்த வருடம் கட்ட விழ்த்துவிடப்பட்ட அரச வன்முறையின் ஒட்டுமொத்த எதிர்ப்பு முகமாக மாறி, காற்றில் விரவிக்கிடக்கின்றனர் இந்த இரு பெண்களும்.

தம் மண்ணுக்கு வரும் மக்கள் விரோதத் திட்டங்களை எதிர்த்தால், இந்த அரசின் அடக்கு முறையைக் களத்தில் நின்று தடுத்தால், பதில் என்னவாக இருக்கும் என்பதற்குத் தற்கால சாட்சியங்கள், இவர்கள் இருவரின் கதைகள்.

ஸ்னோலினின் பின்கழுத்தில் நுழைந்து முகத்தின் முன்புறமாக வும், ஜான்சியின் இடப்புற தலைவழியே நுழைந்து வலப்புறமாகவும் வெளியேறிய இரண்டு தோட்டாக்களும் துளைத்துச்சென்றது இவர்களின் உயிர்களை மட்டுமல்ல; மக்கள்நலன் என இந்த அரசு எடுத்து மாட்டிக்கொண்டிருக்கும் முகமூடியையும்தான். கலவரத்தின் இடையே காணாமல்போன இவர்களின் உயிர், இந்தச் சமுதாயத்தில் நீதியின் விலை!




















சூப்பர் 10 பெண்கள் - தமிழகம் Reviewed by Author on March 08, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.