அண்மைய செய்திகள்

recent
-

`முழு இதயத்தோடு ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்' -கிறிஸ்தவர்களுக்கு தவக்காலம் விடுக்கும் அழைப்பு

இன்றைய நாளில் நம் நெற்றியில் குருவானவரால் பூசப்படும் சாம்பல், நாம் ஒருநாள் மண்ணுக்குத் திரும்புவோம் என்பதை உணர்த்துகிறது. நாம் மண்ணுக்குள் போவதற்குள் நம்முடைய மண்ணுலக வாழ்வை, நாம் செய்யும் இரக்கச் செயல்களால் அழகாக்குவோம்.
`முழு இதயத்தோடு ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்' - கிறிஸ்தவர்களுக்கு தவக்காலம் விடுக்கும் அழைப்பு

`நாம் திரும்பிவந்து ஆண்டவரோடு ஐக்கியமாக வேண்டும்' என்கிறது தவக்காலம். `முழு இதயத்தோடு ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்’ என ஒவ்வொருவருக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது. இது, கி.மு. 835-ல் இருந்து 796 வரையிலான காலகட்டத்தில், இறைவாக்குப் பணியைச் செய்து வந்த இறைவாக்கினர் யோவேல், ஆண்டவரின் வருகைக்காக இஸ்ரயேல் மக்கள் தங்களைத் தயார் செய்துகொள்ளவேண்டும் என்பதற்காகக் கொடுக்கப்பட்ட அழைப்பாக இருந்தாலும், கிறிஸ்துவர்கள் அனைவருக்குமான அழைப்பாகவே கூறப்படுகிறது.
தவக்காலம்
`முழு இதயத்தோடு ஆண்டவரிடம் திரும்பி வருவது' என்பது, வழிபாட்டுக் கூட்டங்களில் கலந்துகொள்வதோ, உடைகளைக் கிழித்துக்கொண்டு, சாக்கு உடை உடுத்தியபடி, சாம்பலில் உட்கார்வதோ அல்லது அழுது புரள்வதோ (மத் 15: 8-9) அல்ல. மாறாக, குற்றத்தை உணர்ந்து, நெருங்கிய இதயத்துடன் (திபா 51:17) ஆண்டவரை நோக்கி வருவதே. அதுதான் முழு இதயத்துடன் ஆண்டவரிடம் திரும்பி வருவதாகும். இன்னும் சொல்லப்போனால் ஆண்டவராகிய கடவுள் ஒவ்வொருவரிடமிருந்தும் எதிர்பார்ப்பது வெளிப்புற மாற்றத்தை அல்ல, உட்புற மாற்றத்தையே. மனதில் ஏற்படும் அத்தகைய மாற்றம்தான் ஆண்டவருக்கு உவப்புடையதாகும்.
`நாம் ஏன் ஆண்டவரிடம் முழு இதயத்தோடு திரும்பி வரவேண்டும்' என்று சிலர் கேட்கலாம். அதற்கு மூன்று முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. 


1.நாம் அவருடைய மக்கள்...
நாம் ஆண்டவருடைய மக்கள், அவர் நம்முடைய (விண்ணகத்) தந்தை (எரேமியா 7:23) அதனால் நாம் அவரிடம் முழு இதயத்தோடு திரும்பி வரவேண்டும். ஆண்டவரின் மக்கள் என்ற காரணத்துக்காக அவரிடம் திரும்பி வரவேண்டும்.
2. அருள் நிறைந்தவராக, அன்பானவராக... 
கடவுள் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர், நீடிய பொறுமை உள்ளவர், பேரன்பு மிக்கவர். அதனால் நாம் ஆண்டவரிடம் முழு இதயத்தோடு திரும்பி வரவேண்டும். இந்த உலகத்தில் யாரும் அருள் நிறைந்தவராக, இரக்கம் மிக்கவராக, பேரன்பு கொண்டவராக இருக்கிறார்களா? என்று தெரியவில்லை. ஆனால், கடவுள் இருக்கிறார். கடவுளின் இத்தகைய பண்புகள் விவிலியம் முழுவதும் சொல்லப்பட்டுள்ளன. ஆகவே, கடவுளின் மக்களாகிய நாம் ஒவ்வொருவரும் அவருடைய பண்புகளை உணர்ந்து, அவரிடம் திரும்பி வருவது தேவையான ஒன்றாகும்.

தவக்காலம்

இங்கு இன்னொரு கேள்வி எழலாம். ‘கடவுள் அருள் நிறைந்தவராக, பேரன்பு கொண்டவராக இருக்கின்றாரே, அது எப்படி?’ என்பதே அந்தக் கேள்வி. இப்படித்தான் இளைஞர் ஒருவர் ஒரு துறவியிடம் சென்று, `கடவுளை அருளாளனாகவும் அன்பாளனாகவும் சொல்கிறார்களே... அது எப்படி?' என்று கேட்டார். `இந்த உலகத்தில், தன்னை அன்பு செய்பவரை மட்டுமல்லாமல், வெறுப்பவரையும் அன்பு செய்வதால் அவர் அருளாளனாக இருக்கிறார். மறுவுலகில் அப்படியில்லை, அவர் தன்னை அன்பு செய்பவரை மட்டும் அன்பு செய்வதால் அன்பாளனாக இருக்கிறார்' என்றார் துறவி. எனவே, தன்னை அன்பு செய்பவரை மட்டுமல்லாமல், வெறுப்பவரையும் அன்பு செய்யும் அருளாளனாக விளங்கும் ஆண்டவரிடம், அவருடைய மக்கள் ஒவ்வொருவரும் முழு இதயத்தோடு திரும்பி வருவது மிகவும் இன்றியமையாதது.
3. இதுவே தகுந்த காலம்
ஆண்டவரிடம் முழு இதயத்தோடு திரும்பி வர மிக முக்கியக் காரணம், இது தகுந்த காலமாகவும் இன்றே மீட்பு நாளாகவும் இருக்கின்றது. இயேசு தன்னுடைய பணிவாழ்வைத் தொடங்கும்போது, `காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்' (மாற்கு 1: 15) என்று சொல்லித்தான் தொடங்கினார். இயேசு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளையும் தூய பவுலின் வார்த்தைகளையும் ஒருசேர இணைத்துப் பார்த்தால், நாம் ஆண்டவரிடம் திரும்பி வர இறையாட்சியின் வருகைக்கும் இந்த நாளை விட்டால், வேறு பொன்னான நாள் இல்லை என்பது உறுதியாகிறது. ஆகவே, இதுவே தகுந்த காலம், இன்றே மீட்பு நாள் என்பதை உணர்ந்து, `முழு இதயத்தோடு ஆண்டவரிடம் திரும்பி வருவது' நல்லது.
நாம் ஆண்டவரிடம் திரும்பி வருவதை எப்படி செயல் வடிவில் வெளிப்படுத்தப் போகிறோம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது.
மத்தேயு எழுதிய நற்செய்தியில், இயேசு மூன்று முதன்மையான காரியங்களைக் குறித்துப் பேசுகின்றார். நோன்பிருத்தல், அறம் செய்தல் அல்லது தர்மம் செய்தல், இறைவேண்டல் செய்தல் என்பதுதான் அந்த மூன்று முதன்மையான காரியங்கள். இவற்றின் மூலம் ஒருவர் தன்னையும், பிறரையும், கடவுளையும் அன்பு செய்து, அவரிடம் முழு இதயத்தோடு திரும்பி வரலாம்.

தவக்காலம்

ஒருவர் பிறரை அன்பு செய்யாமல், அந்த அன்பின் வெளிப்பாடாக அறம் செய்யாமல், ஆண்டவரை அன்பு செய்வதோ அல்லது அவரிடம் முழு இதயத்தோடு திரும்பி வருவதோ இயலாத காரியம். ஆகையால், இந்தத் தவக்காலத்தில் அறச் செயல்களைச் செய்ய, அது பெரிதோ சிறிதோ... எதற்கும் தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் ஆண்டவரை அன்பு செய்ய முடியும். அவரிடம் திரும்பி வரவும் முடியும். 
ஒரு தேநீர்க் கடையில், `எனக்கு ஒரு காபி, குட்டிச்சுவருக்கு ஒரு காபி' என்ற குரல் கேட்டு, அங்கு தேநீர் அருந்திக்கொண்டிருந்த இளைஞன் ஒருவன் திரும்பிப் பார்த்தான். அவன் திரும்பிப் பார்த்த இடத்தில் இருந்த ஒருவர், ஒரு காபி பருகிவிட்டு, கடைக்காரரிடம் இரண்டு காபிக்குப் பணம் கொடுத்துப் புறப்பட்டார். இப்படிப் பலரும் செய்ததைக் கண்ட இளைஞன், யாரைக் `குட்டிச்சுவர்' என்கிறார்கள் என்று கண்களைச் சுழலவிட்டான். அந்த தேநீர்க் கடையருகே இருந்த குட்டிச்சுவர் பக்கத்தில், உடம்புக்கு முடியாமல் ஒரு சிலர் இருந்தார்கள். அவர்களுக்கான காபிக்குத்தான் இவர் பணம் தருகிறார் என்பது அவனுக்குப் புரிந்தது. உடனே அவனும் அவ்வாறு செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான். 

தவக்காலம்

தேவையில் உள்ள மனிதருக்கு உதவி செய்ய நினைத்தால் எப்படியும் செய்யலாம். அதைத்தான் இந்த நிகழ்வு எடுத்துக் கூறுகிறது. ஆகையால், தவக்காலத்தைத் தொடங்கி இருக்கும் நாம், நோன்பின் வழியாகவும் இறைவேண்டல் வழியாகவும் நம்மையும் கடவுளையும் அன்பு செய்யும் அதே அளவுக்கு, அறச் செயல்கள் வழியாக அடுத்தவரை அன்பு செய்வோம். அதன்வழியாக ஆண்டவரிடம் திரும்பி வருவதை அர்த்தமுள்ளதாக்குவோம் என்று இன்றைய நாளில் அழைப்பு விடுக்கப்படுகிறது. 
இயேசு கிறிஸ்து 40 நாள்கள் இரவும் பகலும் உண்ணாமல் வனாந்தரத்தில் நோன்பு இருந்ததாக விவிலியத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே, கிறிஸ்துவர்களும் அந்த அனுபவத்தில் இணையும் அன்றைய தினமே தவக்காலத்தின் முதல் நாளாகும். இயலாமைகளை, பாவங்களை, பிழைகளைக் கண்டறியும் காலம் இது. நமது பலவீனங்களை இறைவனின் பலத்தின் மூலம் நிவர்த்தி செய்யும் காலம்.

இன்றைய நாளில் நம் நெற்றியில் குருவானவரால் பூசப்படும் சாம்பல், நாம் ஒருநாள் மண்ணுக்குத் திரும்புவோம் என்பதை உணர்த்துகிறது. நாம் மண்ணுக்குள் போவதற்குள் நம்முடைய மண்ணுலக வாழ்வை, நாம் செய்யும் இரக்கச் செயல்களால் அழகாக்குவோம். அதற்கு ஒரு வாய்ப்பாக இந்த தவக்காலத்தைப் பயன்படுத்துவோம். இவ்வாறு நாம் இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.
`முழு இதயத்தோடு ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்' -கிறிஸ்தவர்களுக்கு தவக்காலம் விடுக்கும் அழைப்பு Reviewed by Author on March 06, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.