அண்மைய செய்திகள்

recent
-

புலிகள் மௌனிக்கப்பட்ட பின்னர் அரசியலில் அதிகளவிலான பெண்கள் கலந்து கொண்ட எழுச்சி மாநாடு -


தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணியின் ஏற்பாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட சர்வதேச மகளிர் தின பெண்கள் எழுச்சி மாநாடு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி மகளிர் பிரிவு தலைவியும் நல்லூர் பிரதேச சபை உறுப்பினருமான வாசுகி சுதாகரன் தலைமையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின பெண்கள் எழுச்சி மாநாட்டின் ஆரம்ப நிகழ்வாக யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய முன்றலில் இருந்து பேரிகை இசை முழங்க விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டனர்.

அதன் பின்னர் உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிர் நீத்தவர்களின் தூபிகளில் மலரஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

தொடர்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொடியினை கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஏற்றிவைத்தார்.
அதனையடுத்து மண்டபத்திற்குள் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்ட மாவீரர் சோதியாவின் திருவுருவப்படத்திற்கு அவரது தாயாரும் தியாகத்தாய் அன்னை பூபதியின் திருவுருவப்படத்திற்கு அவரது பேர்த்தியாரும் விளக்கேற்றி மலர்மாலை அணிவித்தனர்.

தொடர்ந்து அகவணக்கம், மங்கல விளக்கேற்றலைத் தொடந்து நிகழ்வில் பங்கேற்ற சுமார் ஆயிரத்து ஐந்நூறிற்கும் மேற்பட்ட மக்கள் எழுந்து நின்று ஒருமித்த குரலாய் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினர்.

அதனையடுத்து வரவேற்புரை, வாழ்த்துரை, தலைமையுரை என்பன நடைபெற்ற நிலையில் மகளிர் எழுச்சிப் பிரகடனம் வாசிக்கப்பட்டது.
அதனையடுத்து தப்பு நடனம் இசை வாத்திய இசை, நடன நிகழ்வுகள் உள்ளிட்ட கலை நிகழ்வுகள் நடைபெற்றதோடு கலை நிகழ்வுகளில் பங்கேற்ற கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

பிரதமவிருந்தினராகக் கலந்துகொண்ட யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி ஜெயலக்சுமி இராஜநாயகத்தின் பிரதம விருந்தினர் உரையினைத் தொடர்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணியினால் கிராமங்கள்தோரும் நடாத்தப்பட்ட விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றிபெற்றோருக்கான கௌரவிப்பும் பரிசில் வழங்கலும் நடைபெற்றது.
அதனையடுத்து தங்கள் அயராத முயற்சியால் ஒவ்வொரு துறையிலும் சாதனை நிலை நாட்டிய சாதனைப் பெண்கள் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.

அதனையடுத்து கல்வியில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில், க.பொ. த. சாதாரண தரம் மற்றும் க.பொ.த உயர்தரத்தில் மாவட்ட மற்றும் தேசிய நிலைகளில் முதன்மைப் பெறுபேறு பெற்றவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

தொடர்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிறப்புரையாற்றினார்.
இதேவேளை, விடுதலைப் புலிகள் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் தேசிய அரசியலில் அதிகளவிலான பெண்கள் இவ் மாநாட்டிலேயே கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
புலிகள் மௌனிக்கப்பட்ட பின்னர் அரசியலில் அதிகளவிலான பெண்கள் கலந்து கொண்ட எழுச்சி மாநாடு - Reviewed by Author on March 04, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.