அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையை விடாமல் துரத்தும் குவேனி சாபம்: மரபுவழி கதை -


இலங்கையை தொடர்ந்து துரத்தும் குவேனி சாபம் பற்றிய மரபுவழிக்கதையை இங்கு பார்ப்போம்,
தமிழ் பெண் குவேனி இட்ட சாபத்தினால் சிங்களவர்கள் மத்தியில் ஒற்றுமையின்மை மற்றும் அரசியல் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது இலங்கையில் நடந்துள்ள தொடர் குண்டுவெடிப்பால் அரசியல் ரீதியான பிரச்சனைகளும் நிலவி வருகின்றன.

விஜயன் யார்?
வட இந்தியாவில் உள்ள வங்காளம், ஒரிசா ஆகிய பகுதிகள் முந்தைய காலத்தில் லாலாதேசம் என்று அழைக்கப்பட்டது.
இந்த ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னன் சிங்கபாகு, சிங்கத்துக்கும் ஒரு ராஜகுமாரிக்கும் பிறந்தவர்.
சிங்கபாகு, சிகாசிவாலி என்ற பெண்ணை மணந்து அவளை பட்டத்து ராணி ஆக்குகிறார். இவர்களுக்கு 16 முறை இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன. இந்தக் குழந்தைகளில் மூத்தவன் விஜயன். அவனை பட்டத்து இளவரசனாக சிங்கபாகு நியமிக்கிறார்.
இலங்கைக்கு சென்ற விஜயன்
கி.மு. 543 ஆம் ஆண்டு இயற்கை காட்சிகளை அதிகம் கொண்ட இலங்கை நாட்டிற்கு விஜயன் செல்கிறான். இலங்கை நாட்டில் விஜயன் காலடி வைத்ததும், அங்கு ஒரு மரத்தடியில் குவேனி என்ற பெண் அமர்ந்திருக்கிறாள்.
குவேனி என்ற சொல், கவினி என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு ஆகும். கவினி என்றால் "பேரழகு படைத்தவள்" என்று பொருள்.
இலங்கையை ஆண்ட ராவணன் ராட்சதன் என்று கூறப்பட்டதுபோல, குவேனியையும் ராட்சத குலம் என்று வர்ணிக்கிறது, "மகாவம்சம்" . விஜயனுக்கு அடைக்கலம் கொடுக்கிறாள் குவேனி.

இருவரும் காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொள்கிறார்கள், இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.
விஜயனுடன் இலங்கை சென்ற அவனுடைய 700 நண்பர்களும் பல நகரங்களையும், கிராமங்களையும் உருவாக்குகிறார்கள். அந்தப் பகுதிகளை உள்ளடக்கிய ராஜ்ஜியத்துக்கு மன்னனாகும்படி, விஜயனை கேட்டுக் கொள்கிறார்கள்.
ஆனால், சிம்மாசனம் ஏற ஆசைப்பட்ட விஜயன், ஒரு இளவரசியை மணந்துகொள்ள வேண்டும் என்று கூறியதையடுத்து, விஜயனின் நண்பர்கள் மதுரைக்கு சென்று, அங்கு மன்னருக்கு முத்துக்கள், தங்க ஆபரணங்கள் முதலியவற்றை பரிசாக வழங்கி, தங்கள் மன்னனான விஜயனுக்கு இளவரசியை மணமுடித்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.
இதற்கு பாண்டிய மன்னன் சம்மதிக்கிறார். பாண்டிய இளவரசியுடன், விஜயனின் 700 நண்பர்களுக்கும் 700 பெண்களை தேர்வு செய்து, இலங்கைக்கு அனுப்பி வைக்கிறார்.

பாண்டிய இளவரசி தன்னை மணப்பதற்கு இசைந்து இலங்கைக்கு வந்து விட்டதை அறிந்து விஜயன் மிகவும் மகிழ்ச்சி அடைந்து, குவேனியை அழைத்து, "நான் பாண்டிய ராஜகுமாரியை மணக்கப்போகிறேன். என்னுடைய இரண்டு குழந்தைகளையும் என்னிடம் ஒப்படைத்துவிட்டு, இங்கிருந்து போய்விடு" என்று கூறுகிறான்.
இதனால் வேதனை அடைந்த குவேனி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு "லங்காபுரா" என்ற இடத்துக்கு போய்விடுகிறாள்.
பாண்டிய ராஜகுமாரியை மணந்து கொண்ட விஜயன், அவளுடன் வந்த 700 பெண்களுக்கும் அமைச்சர்களாக உள்ள தன் நண்பர்களை அவரவர் தகுதிக்கு ஏற்ப மணம் முடித்து வைக்கிறான்.
38 ஆண்டு காலம் தர்மம் தவறாமல் இலங்கையை ஆண்டான். அவனது சந்ததிகளே சிங்களர்கள்.
குவேனி சாபம்
குவேனியை ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால், ஆத்திரமடைந்த குவேனி சாபம் விடுகிறாள். இலங்கையில் சிங்கள சந்ததிகள் யாராலும் நிலையான அரியணையில் அமர முடியாது என்று சாபம் விடுகிறாள்.
இந்த காரணத்தினால் இன்று வரை இலங்கையில் அரசியல் ரீதியான பிரச்சனைகள் இருக்கின்றன.
சாபத்தில் இருந்து மீள ஆலயம் கட்டிய சிங்களவர்கள்
இந்த சாபத்தை போக்க வேண்டுமாயின் இளவரசர் விஜயன் - குவேனி ஆகியோரின் சிலைகள் அருகருகில் இருக்கும் வகையில் ஆலயம் ஒன்று 2014 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
மாத்தறை புகையிரத நிலைய வீதியில் உள்ள ஸ்ரீசுப்பிரமணியர் ஆலயர்புனர் நிர்மாணம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டபோது அந்த ஆலயத்தில் விஜயன் மற்றும் குவேனியின் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இலங்கையில் சிங்களவர்கள் உருவாக காரணமான விஜயன் மற்றும் இயக்கர் குல வேடுவ பெண்ணான குவேனி ஆகியோருக்கான முதல் கோயில் இதுவாகும்.
தபால் தலை வெளியீடு
1956-ல் விஜயனின் வருகை" என்ற தலைப்புடன் சிறப்பு தபால் தலை ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது. குவேனி ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது போலவும், கப்பலில் வந்த விஜயன் அவளிடம் அடைக்கலம் கோருவது போலவும் இந்த தபால் தலை அமைந்திருந்தது. தபால் தலையை பார்த்த சிங்கள தலைவர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
விஜயன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தவன் என்ற கருத்து ஏற்கத் தக்கது அல்ல. தவிரவும், விஜயன் வந்தபோதே இங்கு குவேனி என்ற தமிழ்ப்பெண் இருந்திருக்கிறாள் என்று கூறினால், இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள் என்பதை நாமே ஒப்புக்கொண்டது போலாகிவிடும்.
எனவே, இந்த தபால் தலையை வாபஸ் பெறவேண்டும்" என்று கூறினார்கள். இதன் பிறகு தபால் தலை வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இலங்கையை விடாமல் துரத்தும் குவேனி சாபம்: மரபுவழி கதை - Reviewed by Author on April 24, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.