அண்மைய செய்திகள்

recent
-

புர்கா என்றால் என்ன? அரசாங்கம் ஏன் தடை விதித்தது? -


இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டுள்ளனர்.
இந்நிலையில், தீவிரவாதிகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுதல் அல்லது, சில கலாசார பின்பற்றல்களை பயன்படுத்தி தங்கள் திட்டத்திற்காக அதனை கையாள முடியும் என்பதால் அரசாங்கம் சில முடிவுகளை எடுத்துள்ளது.
குறிப்பாக இஸ்லாமிய பெண்கள் முகத்தை மூடி அணியும் புர்காவிற்கு இலங்கை அரசாங்கம் தடைவிதித்துள்ளது. முக்கியமான அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை அடுத்து, மர்ம நபர்கள் சிலர் புர்கா அணிந்து சுற்றித்திரிந்ததும், அவர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்தே அதிரடியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா புர்காவிற்கு தடைவிதித்து வர்தமானியிலும் வெளியிட்டிருந்தார்.
புர்கா மீதான தடை தொடர்பில் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுவரும் சூழலில், அரசாங்கம் இச்சூழலில் எடுத்த முடிவு சரியென்கிறார்கள் பாதுகாப்புத் தரப்பினர்.
புர்கா என்றால் என்ன?

இஸ்லாமியப் பெண்கள் முகத்தை மூடி அணியும் நடைமுறையினை புர்கா என்பார்கள். பெண்களின் முகம் வெளியே தெரியாமல் இருப்பது இதன் நோக்கமாக கருதப்படுகிறது. பல இஸ்லாமிய அறிஞர்கள் பெண்கள் முகத்திரை அணிவது இஸ்லாமிய சமயத்தில் கட்டாயப்படுத்தப்படவில்லை என்று குறிப்பிடுகிறார்கள்.
இலங்கையிலும், 1990 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தான் புர்கா வழக்கத்திற்கு வந்ததாகவும் சில தகவல்கள் குறிப்பிடுகின்றன. எவ்வாறாயினும், இஸ்லாமிய அறிஞர்கள் பலரின் கருத்துப்படி மார்க்கத்தில் இது கட்டாயப்படுத்தப்படவில்லை என்று அறிய முடிகிறது.
இதேவேளை, இலங்கையின் ஒரு பகுதி இஸ்லாமியர்கள் முகம் தெரியுமாறும், உடல் மறைத்தும் பர்தா அணிவார்கள். அவர்கள் புர்கா அணிவதில்லை. புர்கா என்பது முகத்தினை முழுமையாக மூடி கண்கள் வலைபோன்ற ஒரு பகுதியினூடாக தெரியும். உடலும் இதோடு மூடியிருக்கும்.
ஆனால் பர்தா என்பது உடலை மட்டுமே மூடியிருக்கும். தலை மறைக்கப்பட்டு முகம் வெளியே தெரியுமாறு அமைந்திருக்கும். இலங்கையில் அரசாங்கம் முகத்தை முழுவதுமாக மூடும் புர்காவிற்கே தடைவிதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய நாடுகளில் இந்த முகத்திரை அணிவது பெரும் சர்ச்சைக்கு உள்ளான விடயமாக காணப்படுகிறது. முக்கியமாக பிரான்சில் இது பெரும் விவாதத்துக்கிடமான தடையாக உள்ளது. பிரான்சில் குறிப்பாக முகத்திரை என்றில்லாமல் சகல மத (கிறித்தவம், யூதம், இசுலாமியம் மற்றும் ஏனைய மதங்கள்) அடையாளங்களும் பொது இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2004ம் ஆண்டில் பிரான்சிய நாடாளுமன்றத்தில் மத சின்னங்களைப் பொது கல்வி கூடங்களில் அணிவதைக் கட்டுப்படுத்தும் சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் பிரான்சின் அனைத்து கல்வி நிலையங்களிலும் மதத்தை வெளிப்படையாக பறைசாற்றும் விதத்தில் மத சின்னங்கள் அணிவதை தடை செய்தது.

பிரான்சிய கல்விக் கூடங்களில் கல்வி பயிலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியரல்லாத பிறர் முக்காடு அணிவதன் காரணம் அறியாமை மற்றும் அசௌகரியமாக உணர்ந்த காரணங்களாலும் அதனால் நிகழ்ந்த தகராறுகளினாலும் பிரான்சில் மத சார்பற்ற நடுநிலைமையைப் பேணும் ஸ்டேசி ஆணைக்குழு இச்சட்டத்தை பரிந்துரைத்தது.

உலகின் சில இஸ்லாமிய நாடுகளிலும் புர்கா எனப்படும் முகத்திரையை அணிவது கட்டாயமாக்கப்படவில்லை. இதேவேளை, புர்கா அணிவது தொடர்பில் இஸ்லாமியப் பெண்களிடத்திலும் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
புர்கா என்றால் என்ன? அரசாங்கம் ஏன் தடை விதித்தது? - Reviewed by Author on April 30, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.