அண்மைய செய்திகள்

recent
-

அரையிறுதியில் இந்தியா உறுதி... வாய்ப்பை நழுவவிட்ட இலங்கை:


உலகக்கிண்ணம் தொடரின் 35வது லீக் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு உறுதியானது.
இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் உலகக்கிண்ணம் தொடரின் 35-வது லீக் ஆட்டம் செஸ்டர்-லி-ஸ்ட்ரீட் ரிவர்சைடு மைதானத்தில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தெரிவு செய்தது.
அதன்படி, இலங்கை அணித் தலைவர் கருணாரத்னே, குசால் பெரேரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
முதல் பந்திலேயே கருணாரத்னே ஆட்டமிழந்தார். அடுத்து குசால் பெரேரா உடன் அவிஷ்கா பெர்னாண்டோ ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

பெர்னாண்டோ 30 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். குசால் மெண்டிஸ்(23), மேத்யூஸ்(11), தனஞ்ஜெயா டி சில்வா(24), ஜீவன் மெண்டிஸ்(18), திசாரா பேரேரா(21) என இலங்கை 49.3 ஓவரில் 203 ஓட்டங்கள் சேர்த்து விக்கெட்டுகள் அனைத்தையும் பறிகொடுத்தது.
தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் கிறிஸ் மோரிஸ், பிரிட்டோரியஸ் தலா 3 விக்கெட்டுக்களும், ரபாடா 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 204 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது.

தொடக்க வீரர்கள் அம்லா மற்றும் குயின்டான் டி காக் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். குயின்டான் டி காக் 15 ஓட்டங்களில் மலிங்கா பந்தில் வெளியேறினார்.
அவரை தொடர்ந்து அம்லாவுடன் ஜோடி சேர்ந்த அணித் தலைவர் பாப் டு பிளிஸ்சிஸ் அதிரடி ரன் வேட்டையில் ஈடுபட்டார்.
இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இரு வீரர்களும் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தனர்.
இறுதி வரை ஆட்டம் இழக்காமல் அணித் தலைவர் பாப் டு பிளிஸ்சிஸ் 96 ஓட்டங்களுடனும் அம்லா 80 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இறுதியில், தென்ஆப்பிரிக்கா அணி 37.2 ஒவர்களில் 204 ஓட்டங்கள் என்ற இலக்கை அடைந்து வென்றது. இதன்மூலம் இலங்கை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
தென்ஆப்பிரிக்கா அணி உடனான தோல்வியால், உலகக்கிண்ணம் தொடரின் அரையிறுதி சுற்றுக்குள் நுழையும் இலங்கை அணியின் கனவு தகர்ந்தது.
இலங்கை அணி எஞ்சியுள்ள 2 போட்டியில் வென்றாலும், அரையிறுதிக்கு முன்னேறுவது கடினமான விடயம்.

அதே போல இந்திய அணி தற்போது 11 புள்ளிகளுடன் தோல்வியை சந்திக்காத அணியாக நல்ல ரன் ரேட்டில் (+1.160) உள்ளது.
ஒருவேளை இந்திய அணி எஞ்சியுள்ள எல்லா போட்டியிலும் தோல்வியை சந்தித்தாலும், பாகிஸ்தான், வங்கதேசம் எஞ்சியுள்ள இரு போட்டியிலும் வெற்றி பெற்றாலும், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் என மூன்று அணிகளுல் தலா 11 புள்ளிகள் பெறும்.

அப்போது இத்தொடரில் அதிக ரன் ரேட் உள்ள அணி என்ற அடிப்படையில் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும்.
அதே நேரம் இங்கிலாந்து அணி எஞ்சியுள்ள 2 போட்டியில் ஒரு போட்டியில் மட்டும் வென்றாலோ அல்லது இரண்டிலும் தோற்றாலோ பாகிஸ்தான், வங்கதேச அணிகளில் ஒரு அணிக்கு வாய்ப்பு கிடைக்கும்.
8 போட்டிகளில் விளையாடியுள்ள தென் ஆப்பிரிக்க அணிக்கு இது இரண்டாவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
அரையிறுதியில் இந்தியா உறுதி... வாய்ப்பை நழுவவிட்ட இலங்கை: Reviewed by Author on June 29, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.