அண்மைய செய்திகள்

recent
-

ஆலயம் ஒவ்வொருவரையும் ஒற்றுமைப் படுத்தும் இறைவனின் இல்லமாக வேண்டும்-மன்னார் ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ.

நாம் ஆலயம் வருவது எமது விண்ணப்பத்தை இறைவனிடம் சமர்பிக்கும்
நோக்கத்துடன் மட்டுமல்லாது இருக்காது இங்கு வரும் ஒவ்வொரு குடும்பமும் சமூகமும் எமது உறவினர்கள் இவர்களின் மத்தியில் எமது அன்பை வளர்க்கும் மக்களாக இந்த ஆலயத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை இவ்வாறு தெரிவித்தார்.

-மன்னார் மறைமாவட்டத்தில் காத்தான்குளத்தில் புனித சூசையப்பர் பெயரில்
புதிய ஆலயத்தை நிர்மானித்து அதை அபிஷேகம் செய்யும் நிகழ்வு சனிக்கிழமை (27.07.2019) இடம்பெற்றபோதே ஆயர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆயர் கலாநிதி மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தொடர்ந்து இங்கு தனது மரையுரையில் தெரிவித்ததாவது.

நாம் இந்த ஆலயத்தை எவ்வாறு ஆசீர்வதித்து அபிஷேகம் செய்கின்றோமோ
இதனுடாக இறைவன் உங்கள் ஒவ்வொருவரையும் இறைவன் அர்சித்து ஆசீர்வதிக்க வேண்டும்.

இங்கு அமைக்கப்பட்டிருக்கும் இந்த பிரமாண்டமான ஆலயத்தில் நீங்கள்
அனைவரும் ஒன்றுக்கூடி ஒரே குடும்பமாக இறைவனுக்கு புகழ்பாட வேண்டும்.

நீங்கள் உங்கள் விண்ணப்பங்களை இறைவன் முன்னிலையில் கொண்டு வரும்போது இந்த ஆலயம் இறைவனின் வீடாக நினைத்து நீங்கள் செயல்படும்போது இறைவன் உங்களை சந்திப்பார்.

சலமோன் அரசர் இறைவனிடம் தனது வேண்டுதலை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டி நிற்கின்றார் என்பதை வேதாகமம் வாயிலாக நாம் அறிகின்றோம்.

நமது கண்ணுக்கு புலப்படாத இறைவனிடம் எமது கஷ;ட துன்பங்களை, எமது நாளாந்த வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை இறைவனிடம் சமர்பிக்கின்றோம் எமது விண்ணப்பத்தை முன்வைக்கின்றோம்.

உங்கள் விண்ணப்பங்களை இறைவன் முன் சமர்பிக்க இந்த ஆலயம் இறைவனின் இந்த வீடு உங்களுக்கு ஒரு தகுந்த இடமாக அமைகின்றது.

இந்த ஆலயத்தை நீங்கள் எவ்வளவு அழகாக வைத்திருக்கின்றீர்களோ அவ்வாறு நீங்கள் இவ் ஆலயம் வரும் ஒவ்வொருவரையும் நீங்கள் மதித்து, ஏற்று, குடும்பம் அல்லது சமூக வேறுபாடுகள் இன்றி ஒற்றுமையில் இறைவனை சந்திக்கும்போது அப்பொழுது இறைவன் எம்மை ஆசீர்வதிப்பார்.

சாலமோன் அரசர் தாவீது அரசர் ஆண்டவருக்கு கூடாரம் அமைத்து மக்கள் இறைவனை காண வேண்டும் என்று எவ்வாறு அவா கொண்டார்களோ இவ்வாறு நாமும் இப்பொழுது இங்கு ஒரு அழகான ஆலயத்தை அமைத்து இறைவனை சந்திப்பதற்கு இறைவன் சித்தம்
கொண்டுள்ளார்.

நீங்கள் பேறுபெற்றவர்கள். ஏனெனில் காத்தான்குளம் மக்கள் இறைவனுக்கு புனித சூசையப்பர் என்ற பெயரில் நல்லதொரு இல்லம் அமைத்து இறைவனை சந்திப்பதற்கான ஒரு நல்ல இடத்தை ஏற்படுத்திக் கொண்டீர்கள்.

உங்களிடம் இருந்த தேவாலயம் சரித்திரம் கொண்ட தேவாலயமாகும். இந்த ஆலயமானது போரின்போது சேதமாக்கப்பட்டதாலும், உங்கள் பங்கின் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதாலும் முன்னாள் மன்னார் ஆயர் கலாநிதி மேதகு இராயப்பு யோசேப் ஆண்டகை இவ்விடத்தில் ஒரு புதிய ஆலயம் அமைக்க வேண்டும் என்ற சிந்தனையில் இதற்கான அனுமதி வழங்கி உதவி புரிந்தார்.

இவரின் வேண்டுகோளுக்கமைய அன்றைய பங்கு தந்தை அருட்பணி வசந்தகுமார் இவ் ஆலயத்தை அமைக்க முற்பட்டார். பலரின் ஒத்துழைப்புடன் அவர் அந்த பணியை தொடர்ந்தமைக்கு நாம் அவருக்கு நன்றி கூறுகின்றோம்.

நாம் தேவாலயம் வருவது இறைவினடம் கேட்பதற்கு மாத்திரம் அல்ல.
விண்ணப்பத்துக்கு மாத்திரம்தான் எமது செபம் அமையக் கூடாது. நாம் மனம்மாறி இறைவனை போற்ற வேண்டும் அவருக்கு நன்றி கூற வேண்டும்.

இவ்வாறான ஒரு பங்கின் குடும்பம்தான் எப்பொழுதும் இறைவனுடன் ஒன்றித்து இருக்கும். கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் அவர் கோவிலுக்குச் சென்றபோது அங்குள்ள மக்கள் ஆலயத்தை தவறான வழியில் பயண்படுத்தி அங்கு ஆடு மாடுகள், புறாக்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி தந்தையின் இல்லத்தை கள்ளர் குகையாக ஆக்காதீர்கள் என கண்டித்து நின்றார்.

ஆகவே அன்புள்ள மக்களே நாமும் இறைவனின் இல்லத்தை பக்தியோடு பாதுகாப்போம். ஆகவே நாம் இந்த ஆலயத்துக்கு வருவது பராக்கு பாக்க மற்றவர்களை ஏளனம் செய்ய வராது செபிப்பதற்காக வருவோம்.

இன்று புனிதமாக்கப்பட்ட இவ் ஆலயத்தை நீங்கள் புனிதமாக வைத்திருக்க முற்பட வேண்டும். இதிலிருந்து நாம் தவறும்போது நாம் இறைவனிடமிருந்து தூரச் செல்லுகின்றோம்.

இந்த இறைவனின் இல்லம் உங்கள் ஒவ்வொருவரையும் ஒற்றுமையாக்கும் இல்லமாக அமைய வேண்டும். உங்கள் குடும்பங்களுக்கு அசீர்வாதம் கிடைக்கப்பெறும் இல்லமாக இது அமைய வேண்டும்.

எமது நம்பிக்கை கொண்ட வாழ்க்கையோடு எம்மத்தியில் அன்பை வளர்த்து இவ் ஆலயத்தை புனிதமாக கையாளுவோம். இந்நாளில் எனக்கு ஒரு பயம் இருக்கின்றது. அதாவது என்னுடைய சிறு பராயத்தில் திருப்பலிகள் திருச்சபையின் தாய்மொழியாம் லத்தீன் மொழியில்தான் நடாத்தப்பட்டு வந்தன.

அந்தேரம் அழகாக பாடினார்கள். அப்பொழுது எங்களுக்கு மொழி விளங்கவில்லை. இப்பொழுது நாம் தமிழ் மொழியில் திருப்பலி ஒப்புக்கொடுக்கின்றோம். தமிழ் மொழியில் செபங்களை சொல்லுகின்றோம். தமிழ் மொழியில் பாடல்களைப் பாடுகின்றோம்.

இது குருக்களுக்கும் பாடகர் குழாமுக்கும் மட்டும் நாம் விட்டுவிட
முடியாது. திருப்லியில் பங்குமற்றும் அனைவரும் ஒன்றித்து எமது வாய்களை திறந்து செபங்கள் பாடல்களில் பங்கு கொள்ளும்போது நாம் இவ் ஆலயத்தை புனிதப்படுத்துகின்றோம்.

ஆகவே பொதுநிலையினராகிய நீங்கள் ஆலயம் வருவது வேடிக்கையாக இருந்து கொண்டு ஒன்றித்து செபங்களில் ஈடுபடாதிருந்தால் வத்திக்கான் மீண்டும் லத்தீனிலே திருப்பலி ஒப்புக்கொடுங்கள் என கூறிவிடுமோ என்ற பயமே என்னை ஆட்கொண்டுள்ளது.

ஆகவே பொது நிலையினராகிய நீங்கள் இவற்றை உணர்ந்து திருப்பலியின்போது குருக்களும் பாடகர் குழாம் மட்டும் செபிப்பதையும் பாடல்கள் பாடுவதையும் நிறுத்திக் கொண்டு அனைவரும் ஒன்றித்து செயல்பட வேண்டும் என வேண்டி நிற்கின்றேன்.

நீங்கள் புதிய பங்குத்தந்தை அருட்பணி யே.அமல்ராஐ; அவர்களுடன் இணைந்து இந்த புதிய ஆலயத்தை கட்டி எழுப்பியுள்ளீர்கள் உங்களுக்கு நன்றி கூறி நிற்கின்றேன். இந்த ஒற்றுமை என்றும் உங்களுடன் நிலைத்து நிற்க இறை ஆசீர் வேண்டி நிற்கின்றேன் என்றார்.

ஆலயம் ஒவ்வொருவரையும் ஒற்றுமைப் படுத்தும் இறைவனின் இல்லமாக வேண்டும்-மன்னார் ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ. Reviewed by Author on July 29, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.