அண்மைய செய்திகள்

recent
-

பிக்கு மீது தமிழர் சுடுநீர் வீசியிருந்தால்....! விக்னேஸ்வரன் கேள்வி -


ஒரு புத்த பிக்கு மீது தமிழர் ஒருவர் சுடுநீர் வீசியிருந்தாரானால் அவரைச் 'சமாதானமாகப் போ' என்பார்களா? என வட மாகாண முன்னாள் முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
அத்துடன், குறைந்தது பகிரங்கமாக எமது சுவாமியின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டால் தான் சுவாமி அவர்கள் சமாதானத்தை நாட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
கிளிநொச்சியில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,
என் அன்புக்குரிய மக்களே! நாம் எமது அபிலாசைகளை வென்றெடுக்கின்ற அரசியல் பயணத்தில் தற்போது மிக முக்கியமான காலகட்டத்தில் வந்து நிற்கின்றோம்.
அகிம்சை ரீதியாக தமது உரிமைகளுக்காக குரலெழுப்பிய மக்களை ஆளும் அதிகார வர்க்கங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கியதனாலேயே எமது இளைஞர்கள் அன்று ஆயுதம் ஏந்தவேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தார்கள்.
'சமாதானத்திற்கான யுத்தம்' என்கின்ற பெயரில் உலக வல்லரசுகளின் ஆதரவோடு எம் மண்ணில் எமது மக்கள் மீது தொடுக்கப்பட்ட இனவழிப்பு யுத்தம் நிறைவடைந்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் தமிழ் மக்களின் நீதியானதும், நியாயமானதுமான கோரிக்கைகளுக்கான தீர்வு திட்டத்தினை முன் வைப்பதிலும் அதனை அமுல்படுத்துவதிலும் கரிசனை காட்டாது இலங்கையின் ஆளும் அதிகாரவர்க்கம் தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்ற செயற்பாடு அவர்களின் உள்ளக்கிடக்கையை தெட்டத்தெளிவாக வெளிக்கொண்டு வருகின்றது.
வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி கிடைக்கவில்லை. நிலவுரிமை மற்றும் மரபுரிமைப் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. தமிழ் அரசியல் கைதிகளுக்கான விடுதலை பற்றி எந்த உத்தரவாதமும் கிடைக்கவில்லை.

கன்னியாவில் ஒரு இந்து மதப் பெரியார் மீது வேண்டுமென்றே ஒரு சிங்கள பௌத்தர் சுடு தேநீரை அவர் முகத்தில் வீசியுள்ளார். 'சமாதானமாகப் போங்கள்' என்கின்றார்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பொலிஸாரும்.
ஒரு புத்த பிக்கு மீது தமிழர் ஒருவர் சுடுநீர் வீசியிருந்தாரானால் அவரைச் 'சமாதானமாகப் போ' என்பார்களா? குறைந்தது பகிரங்கமாக எமது சுவாமியின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டால் தான் சுவாமி அவர்கள் சமாதானத்தை நாட வேண்டும்.
இவ்வாறான சம்பவங்கள் ஏராளம். கண்ணீர் களமாக காட்சியளிக்கின்றது எமது நிலம். ஒரு மாபெரும் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு இன நீதி மறுக்கப்பட்டுள்ள எமது மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்ட தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் நிபந்தனைகளேதுமற்ற ஆதரவினை ஆதாரமாகக் கொண்டு சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து இலங்கை தன்னை விடுவித்து கொண்டுள்ளதோடு திட்டமிட்டே வேண்டுமென்று தமிழர்களின் பூர்வீக அடையாளங்களை அழித்து தமிழர் மண்ணில் பௌத்த விகாரைகளை அமைப்பதிலும் சிங்களக் குடியேற்றங்களை நிறுவுவதிலும் முனைப்போடு எந்தவித பதட்டமும் இல்லாது செயற்பட்டு வருகின்றது.

எமது மக்கள் தமது விரல்களாலேயே தங்களது கண்களைக் குத்திக்கொண்டுள்ளதை இப்பொழுது நன்கு உணரத்தொடங்கியுள்ளார்கள்.
எமது மக்களின் உள உணர்வுகளை உதாசீனம் செய்து தொடர்ந்தும் அரச இயந்திரங்களின் ஒத்தோடிகளாக இருக்கின்ற இன்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை நான் வேதனையுடன் இங்கு தெரிவிக்க வேண்டி இருப்பதையிட்டு கவலையடைகின்றேன்.
எமக்கு இப்பொழுது பாராளுமன்றத்தில் இருக்கும் பலத்தை வைத்து பலதையும் அரசாங்கத்திடம் இருந்து பெற்றிருக்கலாம். இவ்வாறான பலம் இனி எமக்குக் கிடைக்குமோ தெரியாது.
அவ்வாறு தமது பலத்தைப் பாவியாது இருந்தமை எப்பேற்பட்ட குற்றம் என்பதை இப்பொழுது உணர்ந்துள்ளனர் கூட்டமைப்பினர். அதனால்தான் தாம் வஞ்சிக்கப்பட்டுள்ளதாக இப்போது கூறத்தொடங்கியுள்ளனர்.
கூட்டமைப்பின் தலைவர்கள் இவ்வாறு கூறி மக்களின் அனுதாபத்தைப் பெறலாம் என்று யோசிக்கின்றார்கள் போலும். ஆனால் இதுகாறும் இருந்த பலத்தை எமது மக்களின் நன்மைக்காகப் பாவியாது விட்டமை எவ்வளவு பெரிய தவறு என்பதை இப்போது உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகின்றேன்.
ஆகவே, தான் தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தியாக கட்சி பேதங்கள் இன்றி ஒரு மாபெரும் மாற்று அணியினைக் கட்டியெழுப்ப வேண்டிய காலத்தின் கட்டாயம் இன்று எழுந்திருக்கின்றது.

அவ்வாறானதொரு அரசியல் கூட்டிணைவை விட எம்மை காக்கப்போவது வேறொன்றுமில்லை. இவ்வாறு இணைவதானால் கட்சிகள் சுயநலம் களைவது அவசியம். கட்சிகளின் சுயநல சிந்தனைகள் தமிழ் மக்களின் விடிவுக்கு இடம்கொடுக்க மாட்டா என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
எமது மக்கள் மீது சமகாலத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அரசியல் சூழ்ச்சிகளை உடைத்தெறிந்து, எமது மக்களுக்கான தைரியமான அரசியலை முன்னெடுத்துச் செல்லக்கூடிய சக்திகள் யாவும் ஓரணியில் இணைந்து செயற்;பட வேண்டும் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்துகின்றேன். இதனையே நான் முன்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில்; கூறி வந்திருக்கின்றேன்.
தனிப்பட்ட கட்சி நலன்களைத் தாண்டி தினம் துன்பச்சிலுவைகளைச் சுமந்து வாழும் எமது மக்களின் நலன்களுக்காக கடந்து போன காலங்களை நியாயப்படுத்துவதை விடுத்து நிகழ்காலத்தின் யதார்த்தங்களைக் கருத்திற்கொண்டு ஒருமித்த ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில் இணைந்து செயலாற்றுவதற்கு அனைவரையும் அழைத்து நிற்கிறேன்.
ஒரு சிலரின் தனிப்பட்ட அரசியல் நலனுக்காக என்மீது நேரடியான யுத்தம் ஒன்று தொடுக்கப்பட்டுள்ளதை நான் நன்கறிவேன். இதுபற்றி நான் சலனப்படப் போவதில்லை.

பயணம் பக்குவமாகத் தொடரும். சிறுவர்களின் கல்லெறிகள் எம்மைப் பாதிக்க எம் மக்கள் விட மாட்டார்கள். நான் முதலமைச்சராக இருந்த காலத்தில் கூட எம்முடன் இணைந்து அரசியல் செய்த ஒரு தரப்பினர், தங்கள் அனைத்துப் பலங்களையும் பாவித்து என்னைத் துரத்துவதற்குப் பிரயத்தனம் செய்தார்கள்.
அந்தச் சதி முயற்சி எம் மக்களின் சக்தியால் முறியடிக்கப்பட்டது. அந்த மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக, நேர்மையான, விலைபோகாத, மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பதில் நான் உறுதியாக உள்ளேன் என்பதை இங்கு கூறி வைக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
பிக்கு மீது தமிழர் சுடுநீர் வீசியிருந்தால்....! விக்னேஸ்வரன் கேள்வி - Reviewed by Author on July 29, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.