அண்மைய செய்திகள்

recent
-

எது நடக்கக் கூடாதோ அது நடந்து விட்டது... -


ஈழத் தமிழர்களின் எதிர்காலப் பாதுகாப்பு கருதி, எது நடக்கக்கூடாது என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வேண்டினார்களோ, அது நடந்து விட்டது என தமிழக அரசியல்வாதியான ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று இடம்பெற்று புதிய ஜனாதிபதியொருவர் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில்,
இலங்கையில் நடைபெற்ற தேர்தலில், ஈழத் தமிழர்களின் எதிர்காலப் பாதுகாப்பு கருதி, எது நடக்கக்கூடாது என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வேண்டினார்களோ, அது நடந்து விட்டது. ஆம்.... தமிழினத்தின் எதிரியான கோத்தபாய ராஜபக்ச அமோக வெற்றி பெற்று இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது இலங்கையில் அமைதியை ஏற்படுத்த எந்த வகையிலும் உதவாது.

இலங்கையில் நேற்று நடைபெற்ற 8-ஆவது ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் இலங்கை பொதுஜன கட்சி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கும், இலங்கை முன்னாள் பிரதமர் பிரேமதாசாவின் புதல்வரும், ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளருமான சஜித் பிரேமதாசாவுக்கும் இடையில் தான் கடுமையான போட்டி நிலவியது.
இவர்கள் இருவருமே தமிழர்களுக்கு ஆதரவானவர்கள் அல்ல என்ற போதிலும், இந்த இருவரில் எவர் மிகவும் மோசமானவர், எவர் கொஞ்சம் மோசமானவர் என்ற அடிப்படையில் தான், தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை இலங்கையில் வாழும் தமிழர்கள் தீர்மானிக்க வேண்டியிருந்தது.

அதைப்போலவே, ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச தமிழர்களின் நலன் காக்கப்படும்; தமிழர்கள் வாழும் பகுதிகளில் இருந்து ராணுவம் விலக்கப்படும்; மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.
அதனால் அவருக்கு தமிழ் தேசியக் கூட்டணி, தமிழ் முற்போக்குக் கூட்டணி, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட தமிழர் கட்சிகள் ஆதரவு அளித்தன. அதனால் பிரேமதாச தமிழர் ஆதரவு வேட்பாளராகவே பார்க்கப்பட்டார்.
அதற்கு மாறாக கோத்தபாய ராஜபக்ச சிங்கள பேரினவாதத்தின் சின்னமாகவே களமிறங்கினார். அவரது சகோதரர் மகிந்த ராஜபக்ச தொடங்கிய இலங்கை பொதுஜன கட்சியின் வேட்பாளராக அவர் போட்டியிட்டாலும், இலங்கையின் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் இலங்கை சுதந்திர கட்சியும் அவருக்கு ஆதரவு அளித்தது.

இலங்கை அதிபர் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால் இலங்கை ராணுவம் வலிமைப்படுத்தப்படும்; போர்க்குற்ற விசாரணைகள் அனைத்தும் கைவிடப்படும் என்பன உள்ளிட்ட சிங்கள மக்களிடம் இனவெறியைத் தூண்டும் வகையிலான பிரச்சாரத்தையே கோத்தபாய முன்னெடுத்தார். அவரது இனவெறி பிரச்சாரம் தான் இப்போது அவருக்கு வெற்றியை தேடித்தந்துள்ளது.
இலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரைத் திட்டத்தை கோத்தபாய ராஜபக்ச அறிவித்த போதே, அவர் வெற்றி பெற்றால் இலங்கையில் தமிழர்கள் வாழ முடியாத நிலை ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தேன். இப்போது அவர் வெற்றி பெற்றுள்ள நிலையில் தமிழர்களுக்கு எதிராக அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.
2009ஆம் ஆண்டு ஈழப் போரில் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொடூரமான முறையில் படுகொலை செய்த போர்க்குற்றவாளிகள் எவரும் இனி தண்டிக்கப்பட மாட்டார்கள். போர்க்குற்றவாளியான கோத்தபாய ராஜபக்சவே ஜனாதிபதியாக வந்துள்ள நிலையில், எந்தவிதமான போர்க்குற்ற விசாரணையும் இனி நடக்காது. மொத்தத்தில் இதுவரை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்ட தமிழர்கள், இனி நான்காம் தர குடிமக்களாக நடத்தப்படுவர்.

இத்தகைய சூழலில் இலங்கையில் வாழும் தமிழர்களின் நலன்களை இனி எவ்வாறு காப்பாற்றலாம்? என்பது குறித்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் சிந்திக்க வேண்டும். இலங்கை தேர்தல் முடிவுகள் இன்னொரு கள எதார்த்தத்தை வெளிப்படுத்தியுள்ளன. தமிழர்களின் எதிரியாக வரித்துக் கொண்டு களமிறங்கிய கோத்தபாயவுக்கு தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சராசரியாக 10% வாக்குகள் கூட கிடைக்கவில்லை.
அதிபர் தேர்தல் முடிவுகள் சொல்லும் பாடங்களையும், புதிய அதிபர் தமிழர்களுக்கு எதிராக ஏவுவதற்கு காத்திருக்கும் அடக்கு முறைகளையும் வைத்துப் பார்க்கும் போது ஈழத்தமிழர்களுக்கு தனித்தமிழீழம் அமைத்துத் தருவது தான் ஈழப் பிரச்சினைக்கு சிறந்தத் தீர்வாக அமையும்.

தேர்தல் முடிவுகளையே அதற்கான பொதுவாக்கெடுப்பு முடிவாக கருதலாம் என்றாலும் கூட, தேவைப்பட்டால் மீண்டும் ஒருமுறை பொதுவாக்கெடுப்பு நடத்தியாவது தனித்தமிழீழம் அமைத்துக் கொடுக்க ஐ.நா. அமைப்பு முன்வர வேண்டும். இதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பை இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எது நடக்கக் கூடாதோ அது நடந்து விட்டது... - Reviewed by Author on November 18, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.