அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பை வழங்குமாறு கோரிக்கை -


தென்னிலங்கையில் கிளர்ச்சியில் ஈடுபட்ட ஜே.வி.பிபியினருக்கு பொது மன்னிப்பு, தமிழ் மக்களைப் படுகொலை செய்த இராணுவ அதிகாரிக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கலாம் என்றால் அப்பாவிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பை ஏன் வழங்க முடியாது எனக் கேள்வியெழுப்பியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அவர்களுக்கும் பொது மன்னிப்பை வழங்கி விடுவிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று சென்று பார்வையிட்டு கலந்துரையாடியுள்ளனர்.
இச் சந்திப்பு தொடர்பாக கட்சியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி கே.சுகாஸ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலையே மேற்கண்டவாறு கோரிக்கையை விடுத்துள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்திருந்தோம். இதன் போது தங்களுடைய நிலைமைகளை மனவேதனையுடன் எங்களிடம் அவர்கள் வெளிப்படுத்தியிருந்தனர். உண்மையில் அவர்களுடைய நிலைமை படுமோசமாகவும் வேதனைக்குரியதாகவும் தான் காணப்படுகிறது.
குறிப்பாக பத்து ஆண்டுகள் கடந்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படாமலும் அதே நேரம் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள் கூட இழுத்தடிக்கப்படுகின்ற போக்கில் செல்கின்ற நிலைமையில் அவர்கள் வாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

மேலும் எங்கள் ஊடாக அவர்கள் சில கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைத்திருக்கின்றனர். அவ்வாறு அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளில் பிரதான கோரிக்கை என்னவெனில்,
அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அவர்கள் தமிழ் மக்களைப் படுகொலை செய்த இராணுவ அதிகாரியை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்திருக்கின்றார். அப்படியான சட்ட ஏற்பாடுகள் ஜனாதிபதிக்கு இருக்கின்ற போது அப்பாவியான தங்களை ஏன் ஜனாதிபதி விடுதலை செய்ய கூடாது.

அதிலும் குறிப்பாக சுலக்சன் என்ற அரசியல் கைதி 11 ஆண்டுகள் இந்த சிறைச்சாலையில் இருக்கின்றார். இவரை விட ஏனைய 11 கைதிகளும் பல்லாண்டுகாலமாக சிறைகளில் வாடுகின்றனர். எந்தவிதமான அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் போலிக் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
அவர்கள் எங்களிடம் கேட்டுக்கொண்ட விடயம் என்னவெனில்,
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயர் நிலையில் இருந்த கருணா அம்மான் போன்றவர்கள் சுதந்திரமாகத் திரிகின்றார்கள். ஆனால் அப்பாவிகளான எங்களை ஏன் அரசாங்கம் சிறைகளில் வைத்திருக்கின்றது.
இராணுவ அதிகாரியை பொது மன்னிப்பில் விடுவிக்க முடியுமென்றால் எங்களை ஏன் விடுவிக்க முடியாது. இந்த விடயங்களை இலங்கை அரசாங்கத்திடம் தெரிவிக்குமாறு வினயமாக வேண்டியிருக்கிறார்கள்.
அதற்கமைய இந்த விடயத்தை நாங்கள் ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்துகின்றோம். அத்தோடு மட்டுமல்லாமல் நான் ஒரு சட்டத்தரணி என்ற அடிப்படையில் இந்த அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்கின்ற அதிகாரம் ஜனாதிபதிக்கும், அரசிற்கும் இருக்கின்றது.

இது சட்டத்தின் பிரகாரம் நடைபெற முடியாத ஒரு காரியமல்ல. ஜனாதிபதி நினைத்தால் ஓர் இரவிற்குள் முடிவு எடுக்க முடியும்.
அது மாத்திரமல்ல இது போன்ற சம்பவங்கள் இலங்கையில் ஏற்கனவே நடந்திருக்கிறது. தென்னிலங்கையில் ஜே.வி.பி கிளர்ச்சியில் ஈடுபட்டது.
தென்னிலங்கை சிங்கள சகோதரர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அப்படியான ஒரு முன்னுதாரணத்தைப் பின்பற்றி இந்த அப்பாவி தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் விடுதலை வழங்க கூடாது.
அவ்வாறு விடுதலை வழங்குவதில் ஏதாவது நடைமுறைச் சிக்கல்கள் இருக்கிறதென்றால் குறைந்தபட்சம் அவர்களை உடனடியாக பிணையிலாவது விடுவிக்க வேண்டும்.

இதனைத் தான் அரசியல் கைதிகள் எங்களுடாக முன்வைத்த கோரிக்கையாக இருக்கிறது. அதற்கமைய நாங்களும் இதனை வெளிப்படுத்துகிறோம். ஆகவே இலங்கை அரசாங்கம் உடனடியாக அந்த அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமென்று கோருகின்றோம்.
ஜே.வி.பி சகோதரர்களுக்கு எவ்வாறு பொது மன்னிப்பை வழங்கினார்களோ அதே போன்று பொது மன்னிப்பை வழங்கக் கூடிய வாய்ப்பு இருக்கின்றமை ஆகிவற்றை வைத்து அந்த அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்வது அல்லது குறைந்தபட்சம் பிணையில் விடுவிக்க வேண்டுமென்று அரசியல் கைதிகளின் சார்பில் அரசாங்கத்திடம் நாங்கள் கோருகின்றோம் என்றார்.

கட்சியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன், சட்ட ஆலோசகர் கனகலிங்கம் சுகாஸ், அரசியல் கைதியின் சகோதரி கிரிசாந்தி உட்பட முன்னணியின் இளைஞர் அணி உறுப்பினர்கள் என பலரும் சென்று அரசியல் கைதிகளைப் பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பை வழங்குமாறு கோரிக்கை - Reviewed by Author on January 19, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.