அண்மைய செய்திகள்

recent
-

கூட்டமைப்பில் இருந்து வெளியேறியது ஏன்? சி.வி.வினேஸ்வர் கூறிய காரணம் -


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியமை குறித்து வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கருத்து வெளியிட்டுள்ளார்.
தொண்டமானாறு பகுதியில் 02-03-2020 இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“எமது மக்கள் வழமையாக இரண்டு முக்கிய கேள்விகளை முன் வைக்கின்றார்கள். ஒன்று ஏன் இன்னொரு கட்சி?
இரண்டு உங்கள் கொள்கைகள் எவ்வாறு மற்றவர்களுடன் வேறுபடுகின்றது? இவை தான் அந்தக் கேள்விகள்.

நான் ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறினேன் என்பதை முதலில் உங்களுக்குக் கூறி வைக்கின்றேன்.
உச்ச நீதிமன்ற நீதியரசராகக் கடமையாற்றிக் கிட்டதட்ட பத்து வருடங்கள் ஓய்வில் இருந்த என்னை வலுக் கட்டாயமாக அரசியலுக்குக் கொண்டு வந்தவர்கள் தமிழ்த் தேசியக கூட்டமைப்பினர்.
எல்லா தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து என்னை அழைத்தால் நான் அரசியலுக்கு வருவது பற்றிச் சிந்திப்பேன் என்று கூறியிருந்தேன்.
ஐந்து கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து அழைத்ததால் நான் அரசியலுக்கு வந்தேன். எனக்கு பெயரோ, புகழோ, பணமோ, அதிகாரமோ சம்பாதிக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை.
எல்லாவற்றையும் ஏற்கனவே இறைவன் எனக்குத் தந்து உதவியிருந்தான். தமிழ் மக்களுக்கு என்னால் முடிந்த சேவையைச் செய்வோமே என்று நினைத்துத்தான் வர ஏற்றுக் கொண்டேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 2013ம் ஆண்டு மாகாணசபை தேர்தலின் போது வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனம் எனக்குத் தரப்பட்டது. எமது அரசியல் அபிலாஷைகள் என்ன என்பதை அதில் இருந்து புரிந்து கொண்டேன்.
ஆனால் காலம் செல்லச் செல்ல எமது ஆவணப்படுத்தப்பட்ட குறிக்கோள்களுக்கும் எமது நடைமுறைகளுக்கும் இடையில் பாரிய இடைவெளியை நான் காணநேர்ந்தது.
குறிப்பாக 2015 ஜனவரி 8ந் திகதி தேர்ந்தெடுக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்துடனான எமது உறவுகள் மிகவும் நெருக்கமுற்றதாகவும் சரணாகதி நோக்கிச் செல்வதையும் நான் உணர்ந்தேன்.
உதாரணத்திற்கு 2015 பெப்ரவரி 4ம் திகதிய சுதந்திர தின கொண்டாட்டத்தில் என்னைக் கலந்து கொள்ளுமாறு இரா.சம்பந்தன் அவர்கள் கேட்டுக் கொண்டார்.

1958ம் ஆண்டு றோயல் கல்லூரியின் மாணவ படையினரின் அணிவகுப்பில் நான் கலந்து கொண்ட பின்னர் ஒரு வருடமாவது நான் சுதந்திர தின விழாக்களில் கலந்து கொள்ளவில்லை என்றும் நீதியரசராக இருந்த போது கூட விசேடமாக அழைக்கப்பட்டும் நான் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறினேன். நான் செல்லவில்லை. இரா.சம்பந்தன் சென்றார்.
அதற்கடுத்து அதே வருடம் பெப்ரவரி 10ம் திகதியன்று இனப்படுகொலை பற்றிய தீர்மானத்தை வடமாகாணசபை ஏகோபித்து ஏற்றுக் கொண்டதை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் என் மீது வைர்யம் கொண்டார்கள்.

பின்னர் வடமாகாணசபையில் என்னை வெளியேற்ற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் நான் இன்று உங்கள் முன் இருந்திருக்கமாட்டேன்.
உங்களைப் போன்ற இளைஞர்கள் பலர் தெருவேறி ஆர்ப்பாட்டங்களில் இறங்கியதாலேயே எனக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கைவிடப்பட்டது.
அப்போது இளைஞர்களுக்கு இந்த முதியவர் ஒரு உறுதிமொழி அளித்தார். “உங்களுடன் இருப்பேன்” என்று அன்று கூறியிருந்தேன்.
ஆகவே தான் உங்களுடன் இருக்க இந்தக் கட்சியைத் தொடங்கினேன். நான் ஒரு மாற்றுத்தலைமையை உருவாக்க வேண்டும் என்று கட்சியைத் தொடங்கவில்லை. இது கால சூழலின் ஒரு கொடை என்றே கூற வேண்டும்.
அதாவது பல கட்சிகளும் தமது கட்சி நலன்களிலும் சுயநல எண்ணங்களிலும் மூழ்கி இருக்கும் போது மக்கள் நலம் பார்க்க ஒரு கட்சி தேவையாக இருந்தது. நாம் அந்த இடைவெளியை நிரப்பி உள்ளோம்.
தமிழ்த் தேசியப் பரப்பில் செயற்படும் அனைவரையும் அரவணைத்து ஒட்டுமொத்தத் தமிழ் மக்களின் நியாயமான எதிர்பார்ப்புக்களை அடையப் பாடுபடுவதே எமது நோக்கம்.

தமிழர்களின் இன்றிருக்கும் முக்கிய கட்சி அன்றைய அரசாங்கக் கட்சிக்குப் பின்னால் சலுகைகளுக்காக சரணாகதி அடைந்ததால் இன்று அக் கட்சியால் தமிழ் மக்களின் பல தேவைகளையும் அடையாளங் காட்டி அவற்றிற்காகப் போராட முடியாத நிலையில் அது தத்தளிக்கின்றது.
போரிட்டவர்கள் பயங்கரவாதிகள் என்று ஒரு நபர் கூறியுள்ளார். அதைக் கேட்ட போராளிகளின் குடும்பத்தவர்கள் அனைவரும் அந் நபருக்குப் பாடம் படிப்பிக்கத் துடிதுடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
அரச பயங்கரவாதமே எமது சாதுவான இளைஞர் யுவதிகளை ஆயுதமேந்த வைத்தது என்பதை அவர் மறந்துவிட்டார் போல் தெரிகிறது.
உரிமைக்காகப் போராடுவதைப் பயங்கரவாதம் என்று குறித்த நபர் கூறப்போய் உலகெங்கணும் உருவாகும் உரிமைப் போராட்டங்களை அந் நபர் கொச்சைப்படுத்திவிட்டார்.

அது ஒரு புறமிருக்க எமது கட்சி பற்றிய ஒரு விளக்கத்தை அண்மையில் யாழ் ஊடக அமைய கேள்விகளின் போது வெளியிட்டிருந்தேன். அதாவது, எமது புரிந்துணர்வு உடன்படிக்கையை நாம் வெளியிட்டுள்ளோம்.
அதில் எமது செயற்பாடுகள் எவ்வாறு இருக்கப் போகின்றன என்பது பற்றி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். இவை வெறும் வார்த்தைகள் அல்ல.
கூட்டமைப்பு செயற்பட்டது போல தமிழ் மக்களின் எதிர்காலத்தை தனி ஒருவர் தீர்மானிக்கும் வகையில் நாம் செயற்படமாட்டோம்.
உலகம் பூராகவும் பரந்து வாழும் எமது மக்கள் மத்தியில் பல மேதைகளும் அறிஞர்களும் இருக்கின்றார்கள். அவர்களை எல்லாம் உள்வாங்கி நாம் செயற்பட வேண்டும்.
நன்கு ஆராயப்பட்ட உத்திகளின் அடிப்படையில் நாம் செயற்பட வேண்டும். அவற்றை நிறுவன மயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளின் ஊடாகவே நாம் முன்னெடுக்க முடியும்.
அதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம். தாமதம் ஆனாலும் இவற்றை நாம் செய்வதற்கு திட சங்கற்பம் பூண்டிருக்கின்றோம்.
அரசாங்கத்தில் தங்கி இருக்காமல் எமது அபிவிருத்தியை எப்படி நாம் முன்னெடுக்க முடியும் என்பது தொடர்பிலும் அறிஞர்கள், புத்திஜீவிகளை ஒன்றிணைத்து எமது அரசியல் ராஜதந்திர செயற்பாடுகளை எப்படி முன்னெடுக்கலாம் என்பது தொடர்பிலும் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம்.

ஆகவே, எமது அரசியல், சமூக, பொருளாதார உரிமைகளுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பை போல அரசாங்கங்களிடம் சரணாகதி அடைந்து மண்டி இடாமலும் தனி ஒருவரின் மூளையில் தங்கியிராமலும் நிறுவனமயப்படுத்திய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாம் முயற்சிக்கின்றோம்.
இந்த அடிப்படையிலேயே இணைந்த வடக்கு கிழக்கில் சுய நிர்ணய உரிமைகள் அடிப்படையிலான தீர்வை அடைவதற்கான எமது அணுகுமுறை வேறுபடுகிறது.
எமது அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான இந்த அணுகுமுறையில் அடிப்படையாக நாம் ஏனைய அரசியல் கட்சிகளில் இருந்து வேறுபடுகின்றோம்.
அதாவது, வெறும் வார்த்தை ஜாலங்களால் தமிழ் தேசியம் மலரும் என்று நாம் நினைக்கவில்லை. மற்றவர்கள் மீது சதா குற்றம் சொல்லி வருவதால் தமிழ்த் தேசியம் மலரும் என்று நாம் நினைக்கவில்லை.
அல்லது அரசிடம் மண்டி இடுவதால் தீர்வு வரும் என்றும் நாம் நம்பவில்லை. அத்துடன் தனி ஒருவரின் புத்தியும் உழைப்பும் மட்டும் பலாபலன்களைக் கொண்டுவரும் என்றும் நாம் நம்பவில்லை.
இந்த அடிப்படையில் தான் நாம் எம்மை ஒரு மாற்று அணியாகக் காண்கின்றோம். எமது தாரக மந்திரம் வித்தியாசமானது. அரசியலில் தன்னாட்சி, சமூக ரீதியாக தற்சார்பு, பொருளாதாரத்தில் தன்னிறைவு காண்பதே எமது குறிக்கோள்.

நீங்கள் எமது தனித்துவத்தை தெளிவாகப் புரிந்து கொண்டு எம்மை அடையாளம் கண்டுகொள்வீர்கள் என்று நம்புகின்றேன். எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை நாம் தாயரித்து வருகின்றோம். விரைவில் வெளியிடுவோம்.
நான் முதலமைச்சராக இருந்த போது எமது மக்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு முதலமைச்சர் நிதியத்தை உருவாக்குவதற்கு கூட்டமைப்பும் அரசாங்கமும் ஒத்துழைக்கவில்லை.
முட்டுக்கட்டைகளைப் போட்ட வண்ணமே இருந்தார்கள். நான் தற்போது ஒரு நம்பிக்கை பொறுப்பை உருவாக்கி உள்ளேன். இதனூடாக பல செயற்திட்டங்களை முன்னெடுக்க உள்ளேன்.
அதே போல கூடிய விரைவில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள தமிழ் புத்திஜீவிகள் அறிஞர்களை உள்ளடக்கிய ஒரு சிந்தனை மையத்தை உருவாக்குவேன்.

நாம் மக்கள் நலம் சார்ந்த நடவடிக்கைகளிலேயே இறங்கியுள்ளோம். அதன் அடிப்படையில்த்தான் இன்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றை எமது இளைஞர்கள் ஒழுங்கமைத்துள்ளார்கள்.
அடுத்து மக்கள் கருத்துப் பகிர்வுக்குப் போகலாம் என்று நினைக்கின்றேன்.” என கூறியுள்ளார்.
கூட்டமைப்பில் இருந்து வெளியேறியது ஏன்? சி.வி.வினேஸ்வர் கூறிய காரணம் - Reviewed by Author on March 03, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.