அண்மைய செய்திகள்

recent
-

O/L பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்!

நெருக்கடியான சூழலிலும் கூட க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இம்மாதம் 23 (திங்கட்கிழமை) தொடக்கம் யூன் மாதம் 01 ஆம் திகதி வரை நடாத்துவதற்குத் தேவையான அனைத்தும் தயார் படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன தெரிவித்துள்ளார். 

ஆணையாளர் இது தொடர்பாக இன்றைய தினம் (18) அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை நடாத்துதல் தொடர்பாக மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர்களைத் தெளிவுபடுத்தும் ஊடகக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்தார். பாடசாலை விண்ணப்பதாரிகள் 407,129 பேரும் 110,367 தனிப்பட்ட விண்ணப்பதாரிகளும் உள்ளடங்கலாக மொத்தம் 517,496 விண்ணப்பதாரிகள் இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். பரீட்சை நிலையங்கள் 3,844 மற்றும் 542 ஒருங்கிணைப்பு நிலையங்கள் தாபிக்கப்பட்டுள்ளன.

 பரீட்சைக்குத் தேவையான கடதாசி உள்ளிட்ட எனைய பொருட்கள் தற்போது பரீட்சை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு வருவதுடன், பரீட்சை வினாத்தாள்கள் எதிர்வரும் நாட்களில் அனுப்பி வைக்கப்படும். பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்கள் அனைத்தும் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கு பாடசாலையில் அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். தனிப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு அனுமதிப்பத்திரங்கள் தாமதமானால் குறித்த விபரங்கள் அடங்கிய பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். பரீட்சைக்காக மேற்கொள்ளப்படும் விரிவுரைகள் மற்றும் பிரத்தியேக வகுப்புக்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறுத்தப்பட வேண்டும். 

 பரீட்சையில் தோற்றுவதற்கான அனுமதிப்பத்திரம் மற்றும் அடையாள அட்டை கட்டாயமானதுடன், அனுமதிப்பத்திரம் கிடைத்தவுடன் அதனைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். திருத்தப்பட வேண்டுமாயின் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தின் மூலம் திருத்தியமைத்துக் கொள்ளல் வேண்டும். பின்னர் திருத்தப்பட்ட பிரதி அச்சிடப்பட்டு, அதனை அனுமதிப்பத்திரத்துடன் இணைத்து பரீட்சை மண்டபத்தில் பிரதான பொறுப்பதிகாரியிடம் சமர்ப்பித்து பரீட்சையில் தோற்ற முடியும். கொவிட் 19 பெருந்தொற்று இன்னும் நிலவுகின்றமையால், பரீட்சை நிலையங்களில் சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படல் வேண்டும். கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட விண்ணப்பதாரிக்கு பரீட்சை நிலையத்தில் ஏற்பாடு செய்யப்படும் விசேட அறையில் பரீட்சைக்குத் தோற்ற முடியும். விசேட தேவையுடைய மாணவர்கள் 590 பேர் இம்முறை விண்ணப்பித்துள்ளமையால், அவர்களுக்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்துத் தடைகள் இருப்பினும் பரீட்சை தினங்களில் சிரமங்களின்றி மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு சிசுசரிய மற்றும் மேலதிக பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கும் இலங்கை போக்குவரத்துச் சபை தீர்மானித்துள்ளது. மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு சென்று வருவதற்காக பொதுவான புகையிரங்களும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. பரீட்சையை தடைகளின்றி எதிர்பார்க்கின்ற வகையில் நடாத்துவதற்காக அனர்த்த முகாமைத்துவ நிலையம், பொலிஸ் மற்றும் முப்படையினரின் உதவிகளும் பெறப்பட்டுள்ளன.

O/L பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்! Reviewed by Author on May 19, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.