அண்மைய செய்திகள்

recent
-

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் எப்போது நீதி கிடைக்கும்? நீதி தாமதிக்கப்படுகின்ற ஒவ்வொரு நிமிடமும் நீதி மறுக்கப்படுகின்றது

காணாமல் ஆக்கப்படுதல் என்பது மிகப்பெரியதொரு மனித உரிமை மீறல் ஆகும் உலகில் பல நாடுகளில் காணமல் ஆக்கப்படுதல் என்பது இன்றும் சர்வசாதரணமாக இடம் பெற்று வருகின்ற விடயமாகும் உலக நாடுகளில் கிளர்சியாளர் குழுக்களாலும் இரானுவத்தாலும் அரசியல் சார்ந்த காரணங்களாலும் தனி மனிதனோ அல்லது குழுக்களோ மக்கள் தொகுதியோ காணமல் ஆக்கப்படுகின்ற சம்பவங்கள் இன்றும் அரங்கேரித்தான் வருகின்றது அரசியல்,வன்முறை,போர்,போன்ற காரணிகளால் உலகம் முழுவதும் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய தகவலுக்காக காத்துக்கிடக்கும் அவர்களின் குடும்பங்களின் துயரம் குறித்த கவனத்தை சமூக ரீதியாக ஈர்ப்பதற்கு ஆகஸ்ட் 30 ஆம் திகதியை சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர்
 தினமாக ஐக்கிய நாடுகாள் சபை கடந்த 2011.08.30 திகதி அன்று அறிவித்தது

 தமிழர் தாயக பகுதியை பொறுத்தவரையில் காணாமல் ஆக்கப்படுதலின் உள்ளார்ந்த வழியை அதிகம் அனுபவித்த தமிழ் தாய்மார்கள் பலர் யுத்தத்தின் காரணமாகவும் அதே நேரம் சரணடைந்தும் இரானுவத்தின் கைகளில் பிள்ளைகளை கொடுத்து அவர்கள் மீண்டும் கிடைக்க மாட்டார்களா? என்ற ஏக்கத்துடன் புகைப்படங்களை ஏந்தியவாறு வீதிகளில் போராட்டங்களுடனும் எதிர்புக்களுடனும் தங்கள் வாழ்க்கையின் இறுதி நாட்களை எண்ணி வருகின்றனர் 

 இலங்கையின் போர்கல வரலாற்றில் நீண்ட கால யுக்தியாக இந்த வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் என்பது இடம் பெற்றது இலங்கையின் அரச படைகளால் மட்டுமல்லாது பல்வேறு ஆயுத குழுக்களாலும் பல்வேறு போராட்ட தரப்புக்களாலும் இந்த காணமல் ஆக்கப்படுதல் தொடர்பான சம்பவங்கள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடதக்கதொன்றாகும் இவ்வாறான காணாமல் ஆக்கப்படுதல் சம்பவங்கள் இலங்கையின் வடகிழக்கு பகுதிகளில் பல தசாப்தங்களாக இடம்பெற்ற மனித உரிமை மீறலாக கருதப்பட்டு வந்தாலும் இன்றும் பல்வேறு கடத்தல் சம்பவங்கள் பதிவாகின்றமை இலங்கையில் தனி மனித சுதந்திரம் சமூகத்தில் தொடர்ந்து மறுக்கப்படுகிறது என்பதை எடுத்து கூறுகின்றது

 இறுதி யுத்தத்திற்கு முன்பும் சரி பின்னரும் சரி வெள்ளை வேண் கடத்தல்,இரானுவத்தினரிடம் சரணடைந்தவர்கள், வயது வித்தியாசம் இன்றி இலங்கை அரச தரப்புபடைகளால் கைது செய்யபட்டவர்கள்,நலன்புரி முகாம்களுக்கு சென்றவர்கள் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியல் நீண்டு செல்வதை அவதானிக்க முடியும் இலங்கையின் போர்ச்சூழல் ஆரம்பித்த கால பகுதியில் இருந்து மனித கடத்தல் அல்லது வலிந்து காணாமல் போகச்செய்தல் எனும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது என்பதற்கு சான்றாக இன்றும் உறவுகளை தொலைத்துவிட்டு வீதிகளிலும் வீதியோரங்களிலும் கொட்டகைகள் அமைத்து போராடும் வயோதிப தாய்மார்களே சாட்சியம் 

 தங்கள் பிள்ளைகளுக்காகவும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காகவும் கண்ணீரோடு தெருத்தெருவாகவும்,பல தூதரகங்களுக்கு முன்பாகவும் தங்களின் உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறிவதற்காக மழையிலும் வெயிலும் சமூகத்தின் ஏளனப் பார்வைக்கு மத்தியிலும் உன்னதமானதும் உயிரோட்டமானதொரு போராட்டம் வடக்கு கிழக்கு தமிழர்வாழுகின்ற பகுதிகளில் மக்கள் மயப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகின்றது இவ்வாறான பின்னனியில் இந்த தாய்மார்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் எதிர்பார்ப்புக்களுக்கும் இலங்கை அரசாங்கம் இதுவரை நியாயமான தீர்வையோ அல்லது அந்த தீர்வை நோக்கி கொண்டு செல்வதற்கான ஒரு பொறிமுறையினையோ இதுவரை முன்வைக்கவில்லை இதன் காரணமாகவே இங்கே பாதிக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த கோசமும் நியாயமான சர்வதேச விசாரணையினை நோக்கிதாக காணப்படுகின்றது

 இலங்கையில் நடைபெற்ற மனித குலத்திற்கு எதிரான போர்குற்றங்கள் சர்வதேச ரீதியல் விசாரிக்கப்பட்டால் மாத்திரமே தங்களுக்கு நீதியான பதில் கிடைக்கும் என பல சமூக செயற்பாட்டாளர்களும் பாதிக்கப்பட்ட தாய்மார்களும் வைக்கும் கோரிக்கைகும் அங்கலாய்ப்புக்கும் பூகோள அரசியல் இதுவரை இடம்தரவில்லை என்பதே உண்மை . நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த கடந்த அரசாங்கத்தில் கூட சர்வதேசத்தின் அழுத்தங்கள் மத்தியில் உருவாக்கப்பட்ட காணாமல் போனோருக்கான அலுவலகம் ஒரு கண்துடைப்பு நாடகம் என்பதுடன் இந்த அலுவலகத்தால் எந்தவிதமான நன்மைத்தனங்களும் அல்லது நீதியான விசாரனைகளுக்கான எந்த முன்னெடுப்புக்களும் இதுவரை எட்டப்படவில்லை என்பதே பல தாய்மார்களின் குற்றச்சாட்டாகும்

 பொதுவாக இறந்துபோனவர்களுக்கு ஒரு நினைவேந்தல் செய்வதன் மூலம் உளவியல் ரீதியாக ஆறுதல் கிடைக்கும் ஆனால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என தெரியாத நிலையிலும்! அப்பாவின் முகங்களை மறந்த சின்னஞ்சிறார்களின் ஏக்கத்திலும்! கடைசி காலத்தில் செய்யவேண்டி கடமைகளை கூட செய்வதற்கு பிள்ளைகளின்றி வாழும் பெற்றோர்களின் கண்ணீரின் வலிகளிலும் உள ரீதியான தாக்கம் எப்போதுமே நீண்டு கொண்டிருக்கும் 2009 ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் பின்னர் இருந்து தற்போதுவரை 115க்கும் மேற்பட்ட தாய்மார் தங்களுடைய பிள்ளைகளை தேடிய நியாயயமான தேடலில் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டு மரணித்துள்ளார்கள் இவர்களது மரணம் சாதாரணமான ஒன்றல்ல வலிகளை சுமந்த சாட்சியங்கள் இந்த இறப்புக்களின் மூலம் அழிக்கப்பட்டுக்கொண்டு வருகின்றது இவ்வாறான பின்னனியில் தாமதிக்கும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமமானது என்ற முடிவுக்கே நியாயத்தை கோரும் மக்கள் வரவேண்டியுள்ளது

 இன்று சமூகத்தில் உள்ள பொருளாதார நெருக்கடிக்குள் மிகவும் பாதிக்கப்படும் ஒருதரப்பாக இந்த காணமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இருக்கின்றது குறிப்பாக கணவர் காணாமலாக்கப்பட்டு பிள்ளைகளுடன் வாழும் இளம் தாய்மார்களின் இன்றை நிலை பல சோகங்களை உள்ளடக்கியது பெண்தலைமைத்துவ குடும்பங்களாக அந்த பெண்கள் சொல்லமுடியாத துயரங்களை சுமந்து கொண்டு வாழ்கை போரட்டத்தையும் நடாத்தி தங்களின் உறவுகளுக்கான போராட்டங்களிலும் தொடர்ந்து போராடி வருகின்றனர் தன் பிள்ளையை பறிகொடுத்த நூற்றுக்கணக்கான தாய்மார்கள் தங்கள் முதுமை நிலையையும் மறந்து மரணத்திற்கு முன்னாவது என் பிள்ளையை பார்த்து விடமாட்டோமா என்ற ஏக்கத்துடன் பல ஆயிரம் நாட்கள் கடந்தும் வீதிகளில் இறங்கி போராடி வருகின்ற நிலையை கண்கூடாக பார்க்கமுடிகிறது 

 யுத்ததின் போது காணாமல் ஆக்கப்பட்ட தனது தந்தைக்காக பல குழந்தைகள் பள்ளி புத்தகங்களை சுமக்க வேண்டிய கைகளில் போராட்ட பதாதைகளை சுமந்து தந்தையை தேடி போராடி வருகின்றார்கள் இந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிய போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்றாலோ அல்லது இவர்களுக்கான நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்றாலோ பொதுமக்களும் இந்த போராட்டங்களில் பங்குதாரராக மாறவேண்டும் அன்று அவர்களுக்கு நடந்தது மற்றவர்களுக்கு நடக்காது என ஏனைய பொது மக்கள் ஒதுங்கி இருந்து விட முடியாது இந்த காணாமல் ஆக்கப்படும் சந்தர்பங்கள் தனி குடும்பங்களுக்கு நேர்ந்த மனித உரிமை மீறல்கள் அல்ல மாறாக இது யுத்தத்தின் ஒரு வகை தந்திரோபாய செயற்பாடாகவே கருதுவேண்டும் நேற்று அவர்களுக்கு நாளை நமக்காகவும் இருக்கலாம். 

 எனவே நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து தாய்மார்கள் செய்யும் அறவழி போராட்டத்திற்கு சர்வதேசத்தின் உதவியுடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மை நிலையை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் அத்துடன் இவர்களுக்கான நீதி பொறிமுறை மற்றும் பொறுப்புக்கூறல் என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் அதுவரை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்திற்கு முடிவு எப்போதும் இல்லை என்பதே நிதர்சனம்.


-ஜோசப் நயன்




















காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் எப்போது நீதி கிடைக்கும்? நீதி தாமதிக்கப்படுகின்ற ஒவ்வொரு நிமிடமும் நீதி மறுக்கப்படுகின்றது Reviewed by Author on August 29, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.