அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்கு துறை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கை வேதனையளிக்கின்றது-உப்புக்குளம் அல்-அஸ்ஹர் மீனவ கூட்டுறவு சங்கம்.

மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்கு துறையின் ஒரு பகுதி தோட்டவெளி மீனவர்களுக்கு வழங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளமை உப்புக்குளம் மீனவ சமூகத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக உப்புக்குளம் அல்-அஸ்ஹர் மீனவ கூட்டுறவு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். -இவ்விடயம் தொடர்பாக உப்புக்குளம் அல்-அஸ்ஹர் மீனவ கூட்டுறவு சங்கத்தின் ஊடக சந்திப்பு இன்று திங்கட்கிழமை(3) காலை 10.30 மணியளவில் சங்க கட்டிடத்தில் இடம் பெற்றது. -இதன் போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே குறித்த சங்கத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார். 

 -அவர் மேலும் தெரிவிக்கையில்,,, உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்கு துறையில் இலங்கை துறைமுக கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பகுதியினை விடத்தல் தீவிலிருந்து இடம்பெயர்ந்து தற்போது தோட்டவெளியில் வசித்து வரும் மீனவர்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக ஊடக வெளியீடு மூலம் அறியக்கூடியதாக உள்ளது. மேற்படி உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்குதுறை உப்புக்குளம் மக்களால் பாரம்பரியமாக தொழில் புரிந்து வந்த இடமாகும். இப்பகுதியை எமது மூதாதையர்கள் கொட்டு வாடி களை அமைத்து மீன்களை கொள்வனவு செய்து அதனை கொழும்புக்கு அனுப்பி வைத்தும் இங்கு கருவாடு பதனிட்டும் தங்களின் வாழ்வாதாரத்தை கொண்டு சென்றுள்ளனர். 1982ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை துறைமுக கூட்டுத்தாபனம் கடலட்டை பதனிடும் தொழிலை ஆரம்பிப்பதற்கு இப்பகுதியை அரசிடம் விண்ணப்பித்திருந்தனர். இதற்கு எமது மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கவில்லை. 1990ம் ஆண்டு காலப்பகுதியில் இங்கு வசித்து வந்த முஸ்லிம்கள் விடுதலை புலிகளால் வெளியேற்றப்பட்ட போது இப்பகுதி இந்திய இராணுவமும் பின்னர் இலங்கை இராணுவமும் டெலோ என்ற அமைப்பும் இங்கு முகாமிட்டு இருந்தனர்.

 அரசு இப்பகுதியை உயர் பாதுகாப்பு இடமாக பிரகடனப்படுத்தியது. 1995ம் ஆண்டு காலப்பகுதியில் எமது மக்கள் மீளக்குடியமர தொடங்கினர். அப்போதும் ரெலோ என்ற அமைப்பு இவ்விடத்தில் முகாமிட்டு இருந்தனர். எமது மக்கள் இப்பகுதியில் இருந்து சற்று தள்ளி தமது படகுகளை நிறுத்தி தங்களது தொழிலை நடாத்தி வந்தனர். இக்காலப்பகுதியில் விடத்தல் தீவிலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்கள் முதலில் பள்ளி முனையிலும் பின்னர் பனங்கட்டிக்கொட்டு இறங்குதுறை பகுதியிலும் தொழில் செய்து வந்த நிலையில் அவர்களிடம் ஏற்பட்ட பிணக்கு காரணமாக ரெலோ அமைப்பின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த எமது இறங்குதுறை பகுதியினை எமது அனுமதியின்றி விடத்தல்தீவில் இருந்து இடம்பெயர்ந்த தங்களின் மக்கள் என்ற காரணத்தினால் வழங்கியிருந்தனர்.

 நாம் இச்செயற்பாட்டை தொடர்ந்து எதிர்த்து வந்தோம். 2002ம் ஆண்டு சமாதான உடன்படிக்கை காரணமாக விடுதலை புலிகளின் பிரசன்னம் மாவட்டத்தில் இருந்த போது அவர்களிடம் இப்பிரச்சினையை தோட்டவெளியில் வசிக்கும் விடத்தல்தீவு மீனவர்கள் கொண்டு சென்றனர். அவர்கள் எம்மை அழைத்து தற்காலிகமான ஒரு உடன்படிக்கையை இருதரப்பும் இணைந்து செய்து கொள்ள பணித்தனர். இவ் உடன்படிக்கையில் இவ் இறங்குதுறை எக்காலமும் உப்புக்குளம் மக்களுக்குரியது, இவ் இறங்கு துறையில் உப்புக்குளம் மக்களால் அமைத்து தரப்படும் கொட்டு வாடிகளையே பயன்படுத்துவது.,நிலமை சீரடைந்ததும் விடத்தல்தீவு மீனவர்கள் இத்துறைமுகத்தை மீளவும் உப்புக்குளம் மக்களிடம் கையளிப்பது என்ற தீர்மானங்கள் அவர்களின் ஊடாக எட்டப்பட்டது. 

 அதன் பின்னர் தோட்டவெளி மீனவர்களினால் இலங்கை துறைமுக கூட்டுத்தாபனத்திற்கு தங்கள் படகுகளை கட்டுவதற்கு இடம் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டு எமது மக்களினதும் இப்பகுதியில் உள்ள ஏனைய மீனவ கிராமங்களின் எதிர்ப்பின் காரணமாக அது கைவிடப்பட்டது. எமது இறங்குதுறை தொடர்பாக தொடர்ச்சியாக அரச தலைவர்கள், அரச அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பு, மனித உரிமை ஆணையக மட்டத்தில் பல கலந்துரையாடல்கள் நடைபெற்றும் எதுவித பயனற்ற நிலையில் அவர்களின் வெளியேற்றம் தொடர்பாக எதுவித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு இருக்கவில்லை. 

 இது தொடர்பான பல ஆவணங்கள் எமது கோவையில் உள்ளது. அதன் பின்னர் அவர்களை வெளியேறுமாறு தொடர்ந்து கோரி வந்தோம். ஆனால் யாரோ சிலரின் நடவடிக்கையால் பல வேண்டத்தகாத சம்பவங்கள் இடம்பெற்று எமது மக்கள் 53 பேர் வரையில் இது தொடர்பான வழக்குடன் 10 வருடங்கள் கடந்தும் தீர்வு எட்டப்படாத நிலையில் தொடர்ந்து நீதிமன்றம் சென்று வருகின்றனர். சில மாதங்களுக்கு முன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மன்னார் வருகையின் போது எமது சங்கம் சார்ந்த உறுப்பினர்கள் சந்தித்து இவ் இறங்குதுறை தொடர்பாக விளக்கமாக தெரிவித்தோம் அப்போது அவ்விடயத்தை தாங்கள் ஆழ்ந்து கேட்டறிந்ததுடன் இவ்விடயத்தை மீள் பரிசீலனை செய்வதாக உறுதியளித்ததுடன் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரிடமும் கலந்துரையாடி மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தீர்கள்.

 தற்போது தங்களின் ஊடகம் வாயிலாக வெளியிடப்பட்ட அறிக்கை எமக்கும் எமது மக்களுக்கும் பெரும் அதிச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தாங்கள் இவ்விடயத்தில் ஒரு தரப்பினரின் நியாயங்களை மாத்திரம் கேட்டறிந்து மற்றைய தரப்பான எம்மை புறக்கணித்துள்ளதாக நாம் கருதுகின்றோம். ஏனெனில் இவ்விடயம் இருதரப்பு அல்லது இரு சங்கங்களினதோ விடயமல்ல இரு சமூகங்கள் சம்பந்தப்பட்ட விடயம் என்பதையும் இரு சமூகங்களுக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவிவந்த ஒற்றுமை இவ் இறங்கு துறை காரணமாக சிறிது காலம் கசப்புடன் இருந்து வந்த நிலையில் தற்போது இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு வரும் வேளையில் தங்களின் இவ்வாறான செயல்பாடு மீளவும் எம்மை பழைய துர்ப்பாக்கிய நிலைக்கு கொண்டு சென்று விடுமோ என்று அச்சப்படுகின்றோம். 

 மேலும் தங்களின் ஊடக வாயிலாக வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் உப்புக்குளம் தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள பகுதியில் நடுவாக துண்டாடப்பட்டு இவ்விடம் வழங்கப்படுவதாக அறியக்கூடியதாக உள்ளது. எனவே இது பொருத்தமற்ற செயற்பாடாக நாம் கருதுகின்றோம். எனவே எமக்கு இது தொடர்பாக தங்களுடன் கலந்துரையாடுவதற்கும் வழங்கப்பட்ட விடயத்தை மீள்பரிசீலனை செய்யுமாறும் தங்களை தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.



மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்கு துறை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கை வேதனையளிக்கின்றது-உப்புக்குளம் அல்-அஸ்ஹர் மீனவ கூட்டுறவு சங்கம். Reviewed by Author on October 03, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.