அண்மைய செய்திகள்

recent
-

டைட்டன் நீர்மூழ்கி 'வெடித்து' 5 பேரும் இறந்தது எப்படி?

 111 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலைக் காண்பதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்ற டைட்டன் நீர்மூழ்கி உள்ளுக்குள்ளேயே வெடித்து சிதறியதில் அதில் இருந்த 5 பேரும் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க கடலோரப்படை அறிவித்துள்ளது.

டைட்டானில் ஓர் அழிவுகரமான வெடிப்பு நடந்திருப்பதாக அமெரிக்க கடலோரப்படை கூறுகிறது



இது அமெரிக்கா, கனடா, பிரெஞ்சு நாடுகளின் குழுக்கள் கடந்த ஐந்து நாள்களாக பெரிய அளவிலான தேடல், மீட்புப் பணிகளை மேற்கொண்டு வந்தன.

வியாழக்கிழமை மாலை அமெரிக்கக் கடலோரப்படை, டைட்டானிக் தளத்தைச் சுற்றியுள்ள குப்பைகளுக்கு மத்தியில் டைட்டனின் ஐந்து பெரிய துண்டுகளை கண்டுபிடித்ததாகக் கூறியது. இது நீர்மூழ்கியின் அழுத்த அறை வெடித்திருப்பதைக் காட்டுவதாகக் கூறியது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள கடலோரப்படை, அவர்களின் உடல்கள் எப்போதாவது மீட்கப்படுமா என்பதை உறுதிப்படுத்த முடியாது என்று கூறியது.

ரிமோட் மூலம் இயக்கப்படும் வாகனங்கள் (ROVs) தளத்தில் இருக்கும் என்றாலும், அடுத்த 24 மணிநேரத்தில் தேடுதல் பணி படிப்படியாக நிறுத்தப்படுகிறது.

டைட்டானிக்

Reuters

ஓஷன்கேட் நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டது என்ன?

அமெரிக்கக் கடலோரப்படையின் செய்தியாளர் சந்திப்பிற்கு முன்னதாக, டைட்டானை இயக்கும் ஓஷன்கேட் நிறுவனம் ஓர் அறிக்கையை வெளியிட்டது. 

"எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டாக்டன் ரஷ், ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான் தாவூத், ஹமிஷ் ஹார்டிங் மற்றும் பால்-ஹென்றி நர்ஜோலெட் ஆகியோரை துரதிர்ஷ்டவசமாக இழந்துவிட்டோம் என்று நாங்கள் இப்போது நம்புகிறோம்." என்று நீர்மூழ்கியை இயக்கும் ஓஷன்கேட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

"இந்த மனிதர்கள் உண்மையான ஆய்வாளர்கள், அவர்கள் தனித்துவமான சாகச உணர்வையும், உலகின் கடல்களை ஆராய்வதற்கும் பாதுகாப்பதற்கும் ஆழ்ந்த ஆர்வத்தையும் கொண்டவர்கள்.. இந்த துயரமான நேரத்தில் எங்கள் இதயங்கள் இந்த ஐந்து ஆன்மாக்களுடனும் அவர்களது குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருடனும் உள்ளன. அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.

மீட்புப் பணியில் மிகவும் கடினமாக உழைத்த சர்வதேச சமூகத்தின் பல அமைப்புகளைச் சேர்ந்த எண்ணற்ற ஆண்களுக்கும் பெண்களுக்கும் முழு OceanGate குடும்பமும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது." என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டைட்டானிக்

IFREMER/REUTERS/ OLIVIER DUGORNAY

நீர்மூழ்கியில் பயணித்தவர்கள் யார் யார்?

காணாமல் போன நீர்மூழ்கியில் 3 சுற்றுலாப் பயணிகள், ஒரு பைலட், ஒரு சுற்றுலா வழிகாட்டி ஆகிய 5 பேர் இருந்தனர். 

ஹாமிஷ் ஹார்டிங் - 58 வயதான இவர் பிரிட்டனைச் சேர்ந்த பெரும் தொழிலதிபர். சாகசப் பிரியரான இவர் விண்வெளிப் பயணத்துடன், பல முறை புவியின் தென் முனைக்கும் சென்று திரும்பியுள்ளார். 

ஷாஸாதா தாவூத் - 48 வயதான இவர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் கோடீஸ்வரர். 

சுலேமான் தாவூத் - ஷாஸாதா தாவூத்தின் மகன், 19 வயதேயான இவர் ஒரு மாணவர்

பவுல் ஹென்றி நர்கோலெட் - 77 வயதான இவர் பிரெஞ்சு கடற்படையில் 'டைவர்' பணியில் இருந்தவர். டைட்டானிக் சிதைவுகளில் அதிக நேரம் ஆய்வு மேற்கொண்டவர், முதல் பயணத்தில் இடம் பெற்றவர் ஆகிய பெருமைகளைக் கொண்ட இவருக்கு மிஸ்டர் டைட்டானிக் என்ற பட்டப்பெயரும் உண்டு. 

ஸ்டாக்டன் ரஷ் - 61 வயதான இவர்தான் இந்த டைட்டானிக் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த ஓஷன் கேட் நிறுவனத்தின் நிறுவர் மற்றும், தலைமை செயல் அதிகாரி.

NOAA VIA SPL

எப்படி விபத்து நடந்தது?

அமெரிக்க கடலோரப்படையின் ரியர் அட்மிரல் ஜான் மௌகரின் கூற்றுப்படி, அவர்கள் கண்டறிந்தது ஒரு "பேரழிவு வெடிப்பு" நடந்திருப்பதைக் காட்டுகிறது.

ஏனென்றால், இரண்டு பாகங்களை அவர்கள் கண்டுபிடித்தனர். ஒன்று டைட்டனின் வால் கூம்பு மற்றும் மற்றொன்று அதன் தரையிறங்கும் சட்டகம் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. இவற்றை வைத்துப் பார்க்கும்போது கப்பல் சிதறியதாகக் தெரிய வருகிறது.

இது ஏன் நடந்தது என்பதைக் கண்டுபிடிப்பதற்கு இதுவரை கிடைத்திருக்கும் பாகங்களைக் கொண்டு ஆய்வு செய்யப்படும் என்று மீட்புக் குழு நிபுணர்கள் கூறுகிறார்கள்.

"கருப்புப் பெட்டி எதுவும் இல்லை, எனவே கப்பலின் கடைசி நகர்வுகளை உங்களால் கண்காணிக்க முடியாது," என்று அவர்கள் கூறுகிறார்கள். அதனால் விசாரணையின் செயல்முறை விமான விபத்து போன்றதாக இருக்காது.

புலனாய்வாளர்கள் கிடைத்திருக்கும் துண்டுகளை மேற்பரப்பிற்கு கொண்டு வந்ததும், அந்த கடைசி தருணங்களில் என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ளும் வகையில் அதை ஆய்வு செய்வார்கள்.

நீர்மூழ்கியின் பாகங்கள் நுண்ணோக்கின் கீழ் கவனமாக ஆராயப்படும். எந்த இடத்தில் வெடிப்பு ஏற்பட்டது, பிளவு எங்கே தொடங்கியது என்பது அதன் மூலம் கண்டுபிடிப்பார்கள்.

டைட்டன் நீர்மூழ்கியின் பைலட்: டைட்டானிக் மீது அதீத ஆர்வம் கொண்டவர்

டைட்டன் நீர்மூழ்கியின் பைலட்டாக சென்றவரும் அந்த நீர்மூழ்கியை உருவாக்கிய நிறுவனத்தின் நிறுவனருமான ஸ்டாக்டன் ரஷ், பிபிசி ஆவணப்படத்திற்கான நேர்காணலில் கடல் மீதான தனது தீராக் காதலை விவரித்திருந்தார்.

“ஒவ்வொரு முறையும் நான் கடலுக்குள் டைவ் செய்யும்போது, அதுவரை பார்த்திராத ஒன்றைப் பார்க்கிறேன். அதற்கு முன் அதை எந்த மனிதர்களும் பார்த்திருக்க மாட்டார்கள்,” என்று அவர் கண்களில் ஆர்வம் ததும்பக் கூறினார்.

“கடலைப் பற்றி ஆராயவும், அது மக்களை உற்சாகப்படுத்தவும் அதில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டறியவும்” உதவும் ஒரு தொழிலாக ஓஷன்கேட் இருக்க வேண்டும் என்று ரஷ் விரும்பினார்.

“மக்களுக்கு டைட்டானிக் கப்பல் மீது அதிக ஆர்வம் உள்ளது,” என்றவர், அது கட்டாயம் சென்று பார்க்கவேண்டிய ஒரு பயணம் என்று டைட்டானிக் சிதைவுகளைக் காண கடலுக்குள் செல்லும் பயணம் குறித்து அவர் விவரித்திருந்தார்.

டைட்டன் நீர்மூழ்கியில் பயணித்து, அதற்குள் ஏற்பட்ட வெடிப்பில் உயிரிழந்த ஐவரில் 61 வயதான ஸ்டாக்டன் ரஷும் ஒருவர்.

ஓஷன்கேட் நிறுவனத்தின் நிறுவனர், ஸ்டாக்டன் ரஷ் ஒருமுறை இப்படிக் கூறினார். “ஆங்கில மொழியில் உலகம் முழுக்க அனைவரும் அறிந்த மூன்று வார்த்தைகள் உள்ளதாக ஒரு கட்டுரையில் படித்தேன். அவை, ‘கோகோ கோலா’, ‘கடவுள்’ மற்றும் ‘டைட்டானிக்.” 

டைட்டானிக் விபத்துக்கும் டைட்டன் நீர்மூழ்கியை உருவாக்கியவருக்கும் என்ன தொடர்பு?

ஸ்டாக்டன் ரஷ் டைட்டானிக் பயணங்களை ஒருங்கிணைக்கும் நிறுவனமான ஓஷன்கேட்டின் தலைமை நிர்வாகியாக இருந்தார். அவரும் அந்த நீர்மூழ்கியில் பயணம் செய்தார்.

அனுபவம் வாய்ந்த பொறியாளரான அவர், முன்பு ஒரு சோதனை விமானத்தை வடிவமைத்தவர். அவர் பல சிறு நீர்மூழ்கிகளில் பணியாற்றியுள்ளார்.

ஸ்டாக்டன் ரஷ் 2009ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தை நிறுவினார். தனது வாடிக்கையாளர்களுக்கு ஆழ்கடல் பயணத்தை அனுபவிப்பதற்கான வாய்ப்பை வழங்கினார். மேலும் 2021இல் டைட்டானிக்கின் சிதைந்த பாகங்கள் இருக்கும் இடத்திற்கு பயணங்களை ஏற்பாடு செய்யத் தொடங்கியபோது உலகளாவிய தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார்.

அவரது நிறுவனம், 250,000 டாலர்கள் செலவில் பயணிகளுக்கு புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலின் எஞ்சிய பாகங்களைப் பற்றிய மிக நெருக்கமான பார்வையைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்க முயன்றது.

அதில் பங்கேற்பவர்கள், சுமார் 595 கிமீட்டருக்கு ஒரு பெரிய கப்பலில் டைட்டானிக் சிதைவுகள் உள்ள இடத்தை நோக்கிச் செல்வார்கள். கடலின் மேற்புறம் வரை பெரிய கப்பலில் சென்ற பிறகு, அங்கிருந்து ஆழ்கடல் பயணத்தை டைட்டன் எனப்படும் ஒரு பேருந்து அளவிலான நீர்மூழ்கியில் 8 மணிநேர பயணத்தில் செல்வார்கள்.

கடந்த 2022ஆம் ஆண்டு, நியூயார்க் டைம்ஸிடம் அவர் பேசியபோது, இந்த வணிகத்தை ஆதரித்துப் பேசினார். மேலும், இதற்கு ஆகும் விலை, “விண்வெளிக்குச் செல்வதற்கான செலவில் ஒரு சிறு பகுதியே” என்றும் தெரிவித்திருந்தார். 

அவர் படித்த பிர்ன்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் இணையதளத்திற்காக 2017ஆம் ஆண்டு கட்டுரை ஒன்று, ஸ்டாக்டன் ரஷ் ஓஷன்கேட் நிறுவனத்தின் ஒவ்வொரு ஆழ்கடல் டைவிங் பயணத்திலும் உடன் செல்வதாகத் தெரிவிக்கிறது.

ஸ்டாக்டன் ரஷ், வெண்டி ரஷ் என்பவரை மணந்தார். வெண்டி ரஷ், டைட்டானி விபத்தின்போது பெண்களையும் குழந்தைகளை தங்களுக்கு முன்னதாக தப்பிக்க வைத்துவிட்டு, விபத்திலேயே உயிரிழந்த இசிடோர், ஐடா ஸ்டிராடஸ் ஆகியோரின் எள்ளுப்பேத்தி ஆவார்.

தி சிம்ப்சன்ஸின் எழுத்தாளரும் தயாரிப்பாளருமான மைக் ரெய்ஸ், ரஷ் உடன் வேறு ஓஷன்கேட் நீர்மூழ்கியில் டைட்டானிக் சிதைவுகளைக் காண பயணித்தார். அவர், ரஷ் குறித்துப் பேசும்போது ‘காந்தியை போன்றவர்’ என்று கூறியதாக நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

தந்தைக்காக நீர்மூழ்கியில் சென்ற மகன்

ENGRO CORPORATION/DH GROUP

நீர்மூழ்கியில் சென்று உயிரிழந்தவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த தந்தையும் மகனும் அடங்குவார்கள்.

பிரிட்டிஷ் தொழிலதிபர் ஷாஜதா தாவூத் பாகிஸ்தானின் பணக்கார குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்தவர். இவர் தனது மகன் சுலைமானுடன் நீர்மூழ்கியில் பயணம் செய்தார்.

தாவூத் தனது மனைவி கிறிஸ்டின் மற்றும் மகள் அலினாவுடன் தென்மேற்கு லண்டனில் உள்ள சர்பிட்டனில் வசித்து வந்தார். நீர்மூழ்கியில் செல்வதற்கு முன்பு இவ்ரகள் குடும்பம் கனடாவில் ஒரு மாத காலம் தங்கியிருந்தது.

ஷாஜதா ஒரு பெரிய உர நிறுவனமான என்க்ரோ கார்ப்பரேஷன் என்ற பாகிஸ்தானின் கூட்டு நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்தார்.

அவர் தனது குடும்பத்தின் தாவூத் அறக்கட்டளை மற்றும் கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட SETI இன்ஸ்டிடியூட் உடன் பணிபுரிந்தார். இது ஏலியன்கள் பற்றி ஆராய்ச்சி செய்யும் நிறுவனம்.

ஷாஜதா மூன்றாம் சார்லஸ் அரசால் நிறுவப்பட்ட இரண்டு தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்பவராகவும் இருந்தார். அரண்மனையில் இருந்து அவருக்கு மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஷாஜதாவின் குடும்பத்தினர், அவர் "வெவ்வேறு இயற்கை வாழ்விடங்களை" ஆராய்வதில் ஆர்வமாக இருந்ததாகவும், இதற்கு முன்பு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஆக்ஸ்போர்டு யூனியன் ஆகிய இரண்டிலும் பேசியதாகவும் கூறினார்.

அவர் அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியாவிலும், இங்கிலாந்தில் உள்ள பக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்திலும் படித்தார்.

அவரது மகன் சுலேமான் கிளாஸ்கோவில் உள்ள ஸ்ட்ராத்க்லைட் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தார், அங்கு அவர் பல்கலைக்கழகத்தின் வணிகப் பள்ளியில் தனது முதல் ஆண்டை முடித்திருந்தார்.

நீர்மூழ்கிப் பயணம் குறித்து பயங்கரமானதாக உணர்ந்ததாகவும், எனினும் தனது தந்தையின் மகிழ்ச்சிக்காக அவருடன் சென்றதாகவும் சுலேமானின் அத்தை தெரிவித்திருந்தார்.

நீர்மூழ்கி வெடித்திருக்கும் என்பதை முன்னரே உணர்ந்தேன்: டைட்டானிக் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் 

Getty Images

நீர்மூழ்கியை இழந்துவிடுவோம் என்பதை முன்கூட்டியே உணர்ந்துவிட்டதாக டைட்டானிக் திரைப்பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் பிபிசியிடம் கூறியுள்ளார்.

டைட்டானிக் கப்பலைக் காண கேமரூன் இதுவரை 33 முறை சென்று வந்திருக்கிறார்.

நீர்மூழ்கியின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது, அதன் வழி ஆகியவற்றைக் கொண்டு பேரழிவு நடந்திருக்கும் என்று முன்கூட்டியே உணர்ந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.

"என்ன நடந்தது என்பதை நான் என் ஆழமாக உணர்ந்தேன். நீர்மூழ்கியின் மின்னணு அமைப்பு செயலிழந்து அதன் தகவல் தொடர்பு அமைப்பு துண்டிக்கப்பட்டது, அதன் டிராக்கிங் டிரான்ஸ்பாண்டர் செயலிழந்தது ஆகியவற்றை தெரிந்து கொண்டபோதே அது போய்விட்டது என்று தெரிந்தது"

"ஆழ்கடலில் மூழ்கக்கூடிய குழுக்களில் உள்ள எனது தொடர்புகள் சிலருக்கு நான் உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். சுமார் ஒரு மணி நேரத்திற்குள் எனக்கு பின்வரும் உண்மைகள் கிடைத்தன. அவர்கள் வழிதவறினர். அப்போது 3500 மீட்டர் ஆழத்தில் இருந்தனர். 3800 மீட்டர் தரையை நோக்கிச் சென்றனர்"

"அவர்களின் தொடர்பு சாதனங்கள் தொலைந்துவிட்டன, வழிசெலுத்தும் அமைப்பு தொலைந்துவிட்டது. நான் உடனடியாக சொன்னேன், ஒரு தீவிர பேரழிவு இல்லாமல் இவை இரண்டும் ஒரே நேரத்தில் செயலிழக்காது. அப்போது எனது நினைவுக்கு வந்தது 'வெடிப்பு' "

Bbc Tamil 


டைட்டன் நீர்மூழ்கி 'வெடித்து' 5 பேரும் இறந்தது எப்படி? Reviewed by NEWMANNAR on June 23, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.