அண்மைய செய்திகள்

recent
-

நாட்டில் முதலீடு செய்ய ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் பல வேலைத்திட்டங்கள்!

 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் நாட்டில் முதலீடு செய்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்கு பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கையில் வர்த்தக வசதிகளை அதிகரிப்பதற்கான பரிந்துரைகளை உருவாக்கும் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்தார்.


ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (30) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முதலீட்டாளர்களுக்கு உள்ள தடைகளை நீக்கி, நாட்டில் வர்த்தகம் மேற்கொள்வதை எளிதாக்கும் வகையில் சட்டம் கொண்டு வர எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், முதலீடு மற்றும் வியாபாரத்தை ஊக்குவிப்பதில் அதிகாரிவர்க்க ஆட்சி பாரிய தடையாக உள்ளது என சுட்டிக்காட்டிய அவர், நிர்வாக செயற்பாடுகளுக்கு அரச சேவை முகாமைத்துவ கொள்கையே தேவை எனவும் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே,

வர்த்தக வசதிகள் மேம்படுத்தல் குறிகாட்டியில் இன்று நாம் 99 வது இடத்தில் இருக்கிறோம்.

இதனுடன் தொடர்புள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி பணிகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி எமக்கு பூரண சுதந்திரம் வழங்கியுள்ளார். அத்துடன், இது தொடர்பில் ஜனாதிபதி செயலணியொன்று தற்போது செயற்பட்டு வருகின்றது. பாராளுமன்றம் வழங்கிய பொருத்தமான பரிந்துரைகள் உடனடியாகவும், நடுத்தர மற்றும் நீண்ட காலத்திலும் செயல்படுத்தப்படும்.

நாட்டில் இயங்கும் அனைத்து நிறுவனங்களையும் ஒரே கட்டமைப்பில் பதிவு செய்தல், ஒவ்வொரு நிறுவனத்தாலும் தரவு மற்றும் தகவல் அமைப்புகளைப் பேணுதல் மற்றும் தகவல்களை ஒரே தரவு அமைப்பில் பேணுதல் போன்ற வேலைத்திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

குறிப்பாக, நாட்டில் வர்த்தகத்தை எளிதாக்கும் வகையில் சட்டம் கொண்டு வர எதிர்பார்க்கப்படுகிறது. முதலீட்டாளர் ஒருவர் நாட்டுக்கு வரும் போது , ​​சம்பந்தப்பட்ட துறையில் முதலீடு செய்வதற்கு ஏற்ற காணி எங்குள்ளது என்பதைத் துல்லியமாக அறியும் தரவுக் கட்டமைப்பு இன்னும் நம் நாட்டில் இல்லை. ஆனால் இந்தியாவில் காணி தொடர்பான தரவுத் தகவல் வங்கி உள்ளது. நாமும் அத்தகைய திட்டத்திற்கு செல்ல வேண்டும்.

மேலும், முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் சட்ட கட்டமைப்பு நம் நாட்டில் இல்லை. முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் தங்கள் வர்த்தகப் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளைப் பெறுவதற்கு கடந்த அரசாங்கம் வணிக உயர் நீதிமன்றங்களை நிறுவியது. ஆனால், எதிர்பார்த்தபடி, தேவை பூர்த்தியாகாததால், முதலீட்டாளர்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.

நம் நாட்டில் உள்ள பெரும்பாலான அரச அதிகாரிகளுக்கு நிர்வாக மனப்பான்மையே தவிர முகாமைத்துவ மனப்பான்மை இல்லை. எனவே, அரச அதிகாரிகளுக்கு தொழில்முயற்சி குறித்து பரவலாக அறிவூட்ட வேண்டிய தேவையும், நிர்வாகத்திற்கு பதிலாக முகாமைத்துவ அரச சேவையின் தேவையும் எழுந்துள்ளது.

2018 ஆம் ஆண்டில், சுவிட்சர்லாந்தில் உள்ள பிரபல கேபிள் கார் நிறுவனம் எமது நாட்டில் கேபிள் கார் திட்டமொன்றை ஆரம்பிக்க முன்வந்தது. அதற்கான 3 இடங்கள் அடையாளங் காணப்பட்டன.இந்தத் திட்டத்திற்கு 15 நிறுவனங்களின் அனுமதியைப்பெற வேண்டியிருந்தது. ஆனால் இதே திட்டம் நேபாளம் மற்றும் டொமினிக் குடியரசு என்பவற்றுக்கும் கிடைத்தன. அங்கு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.65 மில்லியன் டொலர் பெறுமதியான இந்தத் திட்டத்திற்கு இன்னும் நமது நாட்டில் அனுமதி கிடைக்கவில்லை.

இது போன்ற பிரச்சினைகளை அடையாளங்கண்டு ஜனாதிபதி செயலணியுடன் இணைந்து தீர்வு காண ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார். இனங்காணப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்கி நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது . எதிர்வரும் செப்டம்பர், ஒக்டோபர் மாதமளவில் இந்த செயற்பாடுகளை நிறைவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றார்.




நாட்டில் முதலீடு செய்ய ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் பல வேலைத்திட்டங்கள்! Reviewed by Author on July 31, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.