அண்மைய செய்திகள்

recent
-

வட இலங்கையின் தொல்லியல் சுற்றுலா மையங்களில் ஒன்றான மன்னார் தேக்கம் அணைக்கட்டின் சிறப்பு

 சமகாலத்தில் இலங்கையின் தேசிய வருமானத்தை ஈட்டித்தரும் துறைகளில் ஒன்றாக சுற்றுலாத்துறை காணப்படுகின்றது. 

இவற்றுள் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை அதிகமாக கவரும் அம்சமாக இயற்கை  மரபுரிமைச் சின்னங்களும் தொல்லியல் மரபுரிமைச் சின்னங்களும் காணப்படுகின்றன. 

இவ்வாறனதொரு பின்னணியிலே வன்னியின் இயற்கை அமைப்பு, காட்டுவளங்கள், கனிமங்கள், இயற்கையாக ஊற்றெடுத்துப் பாயும் அருவிகள், வரலாற்றுப் பழைமை வாய்ந்த பிரதேசங்கள், குளங்கள் ,கால்வாய்கள், கலிங்குகள், அணைக்கட்டுக்கள், ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்ட தொங்குபாலங்கள் என்பன இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் வன்னிப் பிரதேசத்தையும் இணைத்துக்கொண்டது. 

சுற்றுலாத்துறை பயணிகளை அதிகம் கவரும் பிரதேசமாகவும் பல தொல்லியல் வரலாற்றுச் சுவடுகளையும் கொண்ட மையமாக பறையனாளங்குளம் என்ற கிராமத்திற்கு அருகிகே அருவி ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்ட தேக்கம் அணைக்கட்டு அமைந்துள்ளது. 


இது காணப்படும் பிரதேசம் அணைக்கட்டின் பெயராலே தேக்கம் என சிறப்பாக அழைக்கப்படுகின்றது.


பண்டைய இலங்கையின் தலைசிறந்த நீர்ப்பாசன முறையை உலகத்தின் எந்தவொரு புராதன நாகரிகத்துடனும் ஒப்பிடமுடியாது. 

மலைகளை இணைத்து  நீரைச் சேகரித்தல், நடுநிலை பிரகாரம் குளங்களை அமைத்தல் மற்றும் அணைகளை கட்டி ஆற்றை திசைதிருப்புதல் என்பன  தொடர்பாக எம் மூதாதையரிடமிருந்த அறிவு தன்னிகரற்றதாகும்.

 எனவே இவற்றை இன்று பாதுகாக்கும் பொறுப்பினை நீர்ப்பாசன திணைக்களத்தின் ஊடாக தொல்லியல்  திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.

 அந்தவiயில் தற்பொழுது 34,000 இக்கு மேற்பட்ட பாரிய நீர்த்தேக்கங்களும் பெருந்தொகையான கிராமிய குளங்களும் அவற்றோடு இணைந்த கால்வாய்கள், அணைக்கட்டுக்கள் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 இப் பாரம்பரிய பண்டைய நீர்ப்பாசன அமைப்புக்களை தொல்லியல் திணைக்களம் இன்று மரபுரிமைச் சின்னங்களாக அடையாளப்படுத்தியுள்ளதோடு பேணிப் பாதுகாத்து நிகழ்கால, எதிர்கால சந்ததியினரிடம் ஒப்படைக்கப்படுகின்றது. 

இவ் நீர்ப்பாசன மரபுரிமைச் சின்னங்களில் ஒன்றாக இத்தேக்கம் அணைக்கட்டு காணப்படுகின்றது. 

வன்னிப் பிராந்தியத்தின் மன்னார் மாவட்டத்தில் உள்ள மடு பிரதேச செயலாளர் பிரிவில் பறையனாயனங்குளம் என்ற கிராமத்திற்கு தென்மேற்கே அமைந்துள்ளது. இது ஆஃ131 என்ற கிராம சேவையாளர் பிரிவின் கீழே இன்று காணப்படுகின்றது. 

மல்வத்து ஓயாவின(அருவி ஆறு) கிளை நதியொன்றினை மறித்து அணையைக்கட்டி நீரைத்தேக்கி திசை திருப்பியமையால் தமிழில் தேக்கம் அணைக்கட்டு எனவும் சிங்களத்தில் தேக்கம அமுண எனவும் அழைக்கப்படுகின்றது. 

இத் தேக்கம் அணைக்கட்டானது இவ்விடத்தில் அமைக்கப்பட்டதற்கு இதன் புவியியற் காரணியும் காரணமாகும். 

ஏனெனில் ஒரு ஆற்றை மறித்து அணை கட்டுவதென்றால் அவ்விடத்தில் ஆற்றுநீரின் வேகம் குறைந்ததாக காணப்படவேண்டும். 

அப்போது தான் அணைக்கட்டு அமைக்கும் போது உடைப்பெடுக்காது பலமானதாகக் காணப்படும். அணைக்கட்டை அமைக்கும் போது தரைத்தோற்றத்தின் உயர வேறுபாடுகளையும் கருத்தில் கொள்ளவேண்டும். அதனடிப்படையிலே இவ்மையம் தேர்ந்தெடுக்கப்பட்டு அணைக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் நீரைத்தேக்குகின்ற பிரதேசம் உயரமாக இருந்தால் தான் அதிக நீரைத்தேக்கி உயரம் குறைந்த பிரதேசங்களுக்கு நீரைத் திசை திருப்பமுடியும். 

இதனை கருத்தில் கொண்டு இவ் அணையைக்கட்டி இரண்டு கிளைகளாக அருவி ஆற்றை பிரித்து வலது பக்கம் கட்டுக்கரைக்குளத்திற்கும் இடது பக்கம் அகத்தி முறிப்புக்குளத்திற்கும் நீரை திசை திருப்பி நீரின் வேகத்தை குறைத்து இவ் அணைக்கட்டை பலப்படுத்தி  அமைத்தனர். 

வவுனியா, மன்னார் மாவட்டத்தின் எல்லையாகக் காணப்படும் பறையனாளங்குளக் கிராமத்திற்கு தென்மேற்கே இவ்அணை அமைந்துள்ளது. 

அதாவது மதவாச்சி - தலைமன்னார் நெடுஞ்சாலையில் பறையனாயங்குளச் சந்தி அல்லது ஆலங்குளம் சந்தியிலிருந்து மதவாச்சி நோக்கச்செல்லும் பிரதான வீதியின் குறிப்பிட்ட தூரத்திலிருந்து வலது பக்கமாகவுள்ள கிறவல் பாதையூடாக பயணம்செய்து, பின் தேக்கம் அணைக்கட்டின் மூலம் திசைதிருப்பப்பட்ட அருவியாற்றிற்கு  மேலாக கம்பியினால் தொடுக்கப்பட்ட தொங்கு பாலத்தில் பயணித்து எதிர்ப்படும் கிறவல் பாதையினூடாக சுமார் 100m வரையில் நடந்துசென்றால் இவ்வணைக்கு  சென்று விடலாம். மேலும் தேக்கம் அணைக்கட்டின் மேலதிக நீர் வெளியேறும் ஆற்றுப்படுக்கையை அடைவதற்கு அங்கு காணப்படும் அதர் வழியாக நடந்துசெல்ல வேண்டும்.

இவ் அணைக்கட்டை சென்றடைவதற்கு இன்னுமொரு பாரம்பரிய காட்டுவழிப் பாதையையும் காணப்படுகிறது. 

இப்பாதையானது தேக்கம் அணைக்கட்டிலிருந்து கட்டுக்கரைக் குளத்திற்கு நீரை திசைதிருப்பும் பிரதான வான்கதவு குஞ்சுக்குளம் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர் திசை திரும்பி வருகின்ற கிளையாற்றின் கரையோடு அமைந்துள்ள ஒற்றையடிப் பாதையினூடாக 5km தூரம் சென்றால் தேக்கத்தை அடையலாம்.

இவ் அணைக்கட்டின் வளைவான பிரமாண்டமான தோற்றம், அதன் வடிவமைப்பு, சிறந்த தொழில்நுட்பம், அழகுத்தன்மை என்பன இவற்றைப் புதிதாக பார்வையிடுவோருக்கு ஆச்சரியமளிப்பதாகவே இருக்கிறது. இன்றை நிலையில் காணப்படும் இவ் அணைக்கட்டை அமைப்பதற்கு சுற்றாடலில் கிடைத்த பாரிய கற்களையும் பிற இடங்களிலிருந்து கிடைத்த ஒருசில கற்தூண்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது. கட்டப் பயன்படுத்தப்பட்டிருக்கும் கற்கள் சிறிய மலைகள் போன்று காட்சியளிப்பதனால் இவ்விடத்திற்கு அவற்றைக் கொண்டுவருவதற்கு யானைகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றே எண்ணத்தோன்றுகிறது. 

அணைக்கட்டின் மேற்பகுதியில் பயன்படுத்தப்பபட்டிருக்கும் ஒருசில நன்கு பொழிந்த கருங்கற்தூண்களை உற்று நோக்கில் அவற்றில் 2200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பிராமி எழுத்துக்கள் காணப்படுகின்றன.
பிராமி எழுத்துக்கள்

எனினும் அவை அணைக்கட்டின் மேல் நடைபாதைக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதாலும் மேலதிக நீர் அணைகட்டின் மேலாக பாய்வதனாலும் எழுத்துக்கள் தேய்வடைந்து இன்று வடிவம் மாறிய நிலையிலே  காணப்படுகின்றன. ஆயினும் அவை பிராமி  எழுத்துப் பொறித்த கல்வெட்டுக்கள் என்பதை எம்மால் உறுதிபடுத்திக் கொள்ளமுடிகிறது.

இதனைத்தவிர சில கற்றூண்களில் கி.பி 10-12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. 

ஒரு தூணில் நந்தி உருவம் போன்ற தோற்றம் காணப்படுகிறது. இன்னொரு தூணில் அலங்கார குறியீடும் காணப்படுகிறது

ஒரு தூணில் நந்தி உருவம் 

இங்கே ஐரோப்பியர் ஆட்சியில் கட்டப்பட்ட இவ் அணைக்கட்டில் பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட கருங்கற் தூண்டுகளை பயன்படுத்தியிருப்பது ஒரு ஆய்வுக்குரிய விடயமாகும். அதாவது ஐரோப்பிய ஆட்சியில் யாழ்ப்பாணத்திலுள்ள  இந்துக்கோயிலை இடித்தழித்து அதன் கற்களைக் கொண்டு கோட்டைகள், கிறிஸ்தவ ஆலயங்களை அமைத்தது போல வன்னிப்பிராந்தியத்திலும் வரலாற்று பழைமை வாய்ந்த இந்து, பௌத்த ஆலயங்கள் அழிக்கப்பட்டு அவற்றிலிருந்த கற்களையும் பயன்படுத்தி தேக்கம் அணைக்கட்டு அமைத்தனர் என கருதலாம். குறிப்பாக அக்காலத்தில் வன்னிப்பிராந்தியத்தில் மாதோட்டத்திலுள்ள திருக்கேதீஸ்வரம் ஆலயமே பெரிதாகக் காணப்பட்டது. 

அவ்வாலயத்தை இடித்தே மன்னார்க் கோட்டை, யாழ்ப்பாணம் ஊர்காவற்துறைக் கோட்டை மற்றும் மடுதேவாலயம் என்பன கட்டப்பட்டன என ஐரோப்பிய ஆவணங்கள் கூறுகின்றன. 

எனவே திருக்கேதீஸ்வரத்தில் இருந்து மடுதேவாலயத்திற்கு கொண்டுவரப்பட்ட கற்களை இவ்வணை கட்டப்பயன் படுத்தியிருக்கலாம் என்ற வரலாற்று நினைவுகள் தற்காலத்திலும் நினைவுபடுத்தப்பட்டு வருவதனை இவ்விடத்தில் குறிப்பிடலாம். 

இத்தேக்கம் பிரதேசத்தை அண்மித்து பிச்சம்பிட்டி, மங்கலம்பிட்டி, நரிஇழைச்சான், பன்னவட்டுவான், உப்பன், நவிந்தமடு, கள்ளிக்குளம், பெரியமுறிப்பு, குஞ்சுக்குளம் ஆகிய கிராமங்கள் காணப்பட்டன. 

ஆனால் இன்று குஞ்சுக்குளம் பெரியமுறிப்பு போன்ற கிராமங்களைத் தவிர ஏனைய கிராமங்கள் இன்று மக்கள் குடியிருப்புக்கள் அற்ற காட்டுப்பிரதேசமாகவே காணப்படுகின்றன.

 இக்கிராமங்களில் வாழுகின்ற மக்களின் பொருளாதாரமானது விவசாய நடவடிக்கைகளிலும், வேட்டையாடல் மற்றும் தேன் சேகரித்தல் போன்றவற்றில் தங்கியுள்ளது.  இங்கு மான், மரை, பன்றி மற்றும் பெரிய பறவை இனங்கள் போன்ற இப் பிரதேச மக்களால் வேட்டையாடப்படுவதும்  குறிப்பிடத்தக்கதாகும்.  இப் பிரதேசத்திற்கு அண்மையில் வாழ்கின்ற மக்கள் இந்துமத வழிபாட்டை மேற்கொள்வதுடன் பாடசாலை கல்வியை தொடர்கின்ற கல்விச்சமூகத்தையும் கொண்டு காணப்படுகிறது. 

இவ் அணைக்கட்டானது இலங்கையிலுள்ள பல்வேறு சுற்றுலா மையங்களுக்கு அண்மையிலும் மத்திய நிலையமாகவும் காணப்படுகின்றது.

 2009ஆம் ஆண்டில் யுத்தம் முடிந்த பின்னர் இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றுலா பயணிகளின் வருகையானது அதிகரித்தே செல்கின்றது. இதன் காரணமாக இன்று இவ் மையம் பலரின் பார்வையைப் பெற்றுக் கொண்டது. அந்தவiயில் தேக்கமானது மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களின் போக்குவரத்திற்கு மையமாகக் காணப்படுவதனால் இவ் மாவட்டங்களிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் தேக்கம் அணைக்கட்டுப்பகுதிக்கு வருகை தந்து தமது மனமகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கு இதனுடைய அமைவிடம் சிறப்பாக காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். 

இன்று இப்பகுதிகளில் மக்கள் காணப்படாத அடர்ந்த காட்டுப்பகுதியாகவே காணப்படுகின்றது.

 இருப்பினும் அருவியாற்றைக் கடந்து வேட்டையாடச் செல்வோருக்கும் இன்பமயமாகப் பொழுதைக் கழிக்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இங்கு காணப்படும் அழகான தொங்குபாலமும், தேக்கம் அணைக்கட்டுமே காட்டினுள் காணப்படும் ஒற்றையடிப் பாதையுமே பிரதான நடைபாதையாகக் காணப்படுகின்றது.

 இந்நிலையானது இங்கு வருபவர்களை கவரக்கூடியதான இயற்கைச் சூழலை கொண்டுள்ளமை சிறப்பானதாகும். 

இவ் அணைக்கட்டானது நீர்வளம் கொண்ட அருவியாற்றை மறித்துக் கட்டப்பட்டமையால் வருடத்தில் கோடை காலத்தில் ஒருசில மாதங்களை தவிர, ஏனைய பெரும்பாலான காலங்களில் அணைக்கட்டிற்கு தெற்கு பக்கமாக வேகமாக நீர் வீழ்ந்து கொண்டே இருக்கும்.

 அவ்வாறு இங்கு நீர் வீழ்கின்ற காட்சி மலைநாட்டில் மலைகளிலிருந்து ஊற்றெடுத்துப் பாயும் நீர்வீழ்ச்சிகள் போல இரைச்சலுடனே காணப்படுகின்றது. இவ் அழகான நீர்வீழ்;ச்சி வடஇலங்கையில் இங்கே தான் சிறப்பானதாக காணப்படுகின்றது. ஆனால் இவ் நீர்வீழ்ச்சி இங்கு உண்டு  என்பதை பலரும் அறிந்திருக்கவில்லை. ஆயினும் காட்டுவள இலாக, நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள், அயற்கிராம மக்கள் போன்றோர் அவ்வவ்போது குடும்பசகிதம் வருகை தந்து செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது. 

அணைக்கட்டுக்கு தெற்குப் புறமாக ஓடும் அருவியாறு தேக்கம் அணைக்கட்டிற்கு மேலும் அழகையும் சிறப்பையும் கொடுப்பதைக் காணலாம். இவ்வணைக்கட்டுடன் இணைந்த சிறிய  பாறைகளுக்கு இடையே விழும் நீர் பட்டு தெறிப்படைந்து நடுவில் தீவு போல காட்சியளிக்கும் மணற்திட்டுக்களை சுற்றி இரண்டும் பக்கமும் ஓடும் நீரோட்டங்களும் அவற்றின் மத்தியில் காணப்படும் அழகான உயர்ந்த மரங்களுமஇ; நீருற்றுக்குள் ஒன்று சேர்ந்து ஆறாக ஓடும். பாதையின் இரு மருங்கி;லும் நீண்டு செல்லும் உயர்ந்த மணல் மேடுகளும்இ அருவியாற்றின் இரு மருங்கிலும் உள்ள பரிமரங்களுக்கு மத்தியில் உள்ள அழகான குழிகளும் பார்ப்போருக்கு அழகான இயற்கைக் காட்சிகளாகவே காணப்படுகின்றன.

 இவ்வாறு பல சிறப்பம்சங்களைக் கொண்டு காணப்படும் தேக்கம் அணைக்கட்டானது எமது அரும் பொக்கிசம் என்றே கூறலாம். எனவே தான் இதன் தொல்லியல் வரலாற்றை மக்களுக்கு எடுத்துக்காட்டி சிறந்த சுற்றுலாத்தலமாகவும் அதிகளவான சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது அப்பிரதேச அரச அதிகாரிகளினதும் மக்களதும் பொறுப்பு வாய்ந்த கடமையாகும். 


பொ.வருண்ராஜ்
உதவி விரிவுரையாளர்(தற்காலிகம்)
தொல்லியல் பாட அலகு
யாழ் பல்கலைக்கழகம்













வட இலங்கையின் தொல்லியல் சுற்றுலா மையங்களில் ஒன்றான மன்னார் தேக்கம் அணைக்கட்டின் சிறப்பு Reviewed by NEWMANNAR on December 30, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.