கவிதை என்பது கற்பனை, உணர்ச்சி ஆகியவற்றின் மொழியாகும் நூல் வெளியீட்டு விழாவில் தமிழ் நேசன் அடிகளார்- படங்கள்
உணர்வுகளின் வெளிப்பாடே கவிதை என்பர். கவிதை என்பது கற்பனை, உணர்ச்சி ஆகியவற்றின் மொழியாகும். 'கவிதை என்பது கடல்மடை திறந்ததுபோல் கனவேகத்தில் குதித்து ஓடிவரும் உணர்;ச்சிப் பெருக்கு. கவிஞனின் உள்ளத்திலிருந்து பொங்கிவழியும் உணர்ச்சியே கவிதையாகும். அவ்வுணர்ச்சியை அமைதியாக நினைவுக்குக் கொண்டுவந்து நெறிப்படுத்துவதிலிருந்து கவிதை தோற்றமுறுகிறது' என்கிறார் வேர்ட்ஸ் வேர்த் என்னும் ஆங்கிலக் கவிஞர் என அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் குறிப்பிட்டார்.
கடந்த 24ஆம் திகதி மன்னாரைச் சேர்ந்த திரு. ஜே. ஆர். மயூறன் அவர்கள் எழுதிய 'மனப்பூக்கள்' என்ற கவிதை நூல் வெளியீட்டு விழாவிற்கு தலைமை தாங்கி உரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மையத்தின் இயக்குனரும், 'மன்னா' பத்திரிகையின் ஆசிரியரும், மன்னார் தமிழ்ச் சங்கம் மற்றும் மன்னார் சர்வமதப் பேரவை ஆகியவற்றின் தலைவருமான தமிழ் நேசன் அடிகளார் தொடர்ந்து உரையாற்றும்போது கூறியதாவது,
ஓர் இலக்கியத்தை நன்கு சுவைப்பதற்கு அல்லது அதன் தரத்தை மதிப்பிடுவதற்கு அவ்விலக்கியத்தில் அமைந்துள்ள அறிவுக்கூறு இன்றியமையாததாகும்.
அறிவுக்கூறு என்பது வாழ்வியல் உண்மை, சிரிய கருத்து, உயர்ந்த நீதி நெறி போன்றவற்;றைக் குறிக்கும். இவ்வறிவுக்கூற்றைக் கொண்டே சில இலக்கியங்களின் தகுதி மதிப்பிடப்படுகின்றது. 'கவிதை அடிப்படையில் வாழ்க்கையின் ஒரு திறனாய்வாகும். எவ்வாறு வாழவேண்டும் என்பது பற்றிய கருத்துக்களை ஆற்றலுடனும், அழகுடனும் விளக்கும் திறனைப் பொறுத்துக் கவிஞரின் புகழ் அமைந்துள்ளது.' என்கிறார் மத்தியு ஆனோல்ட் என்ற திறனாய்வாளர்.
இந்நிகழ்வில் வடமாகாண போக்குவரத்து, மீன்பிடி, கைத்தொழில் அமைச்சர் திரு. டெனிஸ்வரன் அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார். வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திரு. வினோ அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். கவிதை நூலுக்கான வெளியீட்டுரையை எழுத்தாளர் எஸ். உதயா அவர்கள் நிகழ்த்தினார். ஆய்வுரையை எழுத்தாளரும் குறும்பட இயக்குனருமான திரு. நிசாந்தன் அவர்கள் வழங்கினார். இந்நூல் திரு. ஜே. ஆர். மயூறன் அவர்களின் மூன்றாவது நூல் என்பது குறிப்பிடத்தக்கது.
கவிதை என்பது கற்பனை, உணர்ச்சி ஆகியவற்றின் மொழியாகும் நூல் வெளியீட்டு விழாவில் தமிழ் நேசன் அடிகளார்- படங்கள்
Reviewed by NEWMANNAR
on
December 07, 2013
Rating:
No comments:
Post a Comment