மண்டேலாவின் வரலாறு எம்மை வழிகாட்டட்டும்: மனோ
நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை மூன்று கட்டங்களை கொண்டது என்பதை இந்நாட்டு அரசியல் அதிகார தலைவர்கள் மனதில் கொள்ள வேண்டும். முதலாவது, அவர் இனவாத அடக்குமுறைக்கு எதிரான ஒரு சாத்வீக போராளி. இரண்டாவது, சாத்வீக சமர் இராணுவ அடக்குமுறையால் நசுக்கப்பட போது ஆயுதம் தூக்க நிர்ப்பந்திக்கபட்ட, ஓர் ஆயுத போராளி. மூன்றாவது, உலகத்தின் துணையுடன் வெற்றி பெற்று ஆட்சியதிகாரத்தை பெற்றதன் பின், சமரில் தோல்வியடைந்த வெள்ளையர் தரப்பையும் அரவணைத்து உண்மையான நல்லெண்ண தேசிய ஐக்கியத்தை உருவாக்கிய மனிதாபிமானமிக்க மகத்தான ஒரு தேசிய தலைவன். இந்த மூன்று கட்டங்களும் சேர்ந்ததுதான் மண்டேலா சிந்தனை. இந்த சிந்தனைதான் இந்நாட்டு தலைவர்களுக்கு வழி காட்டவேண்டும்.
இந்நாட்டில் துன்பத்துக்கும், அடக்குமுறைக்கும் உள்ளாகியுள்ள தமிழ் பேசும் மக்களுக்கு மடிபா என்று செல்லமாக அழைக்கப்படும் நெல்சன் மண்டேலா, வாழ்ந்தும், இறந்தும் வழி காட்டுகின்றார். உலகம் இன்று பரந்து விரிந்து விட்டது. இனிமேல் இங்கு இந்த இனவாத பூச்சாண்டியெல்லாம் விலை போகாது என மண்டேலா எங்களுக்கு வழி காட்டிவிட்டார். அவர் வழியில் நாம் பயணிப்பதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
தென்னாபிரிக்கவின் முதலாம் கறுப்பின ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் மறைவையொட்டி மனோ கணேசன் விடுத்துள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நெல்சன் மண்டேலாவின் வாழ்வை சாத்வீக போராளி, ஆயுத போராளி, தேசிய தலைவன் என்ற மூன்று கட்டங்களாகவே நாம் பார்த்து புரிந்துகொள்ள வேண்டும். அதுவே அவருக்கு நாம் செய்யும் மெய்யான அஞ்சலி. அதுவே மண்டேலா சிந்தனை. அவரது இந்த சிந்தனையை திருத்தி, பகுதி பகுதியாக புரிந்துகொள்வது அவருக்கு செய்யும் அஞ்சலி அல்ல.
அவரது ஆயுத போராட்டத்தை சுட்டிக்காட்டி அவரை பயங்கரவாதி என்று பட்டம் சூட்டி மகிழ்ந்த வெள்ளையின அரசு, அவர் ஏன் ஆயுதம் தூக்கினார் என்றும், அவர் முன்னெடுத்த சாத்வீக போராட்டம் ஏன் தோல்வியடைந்தது என்றும் புரிந்துகொள்ள பிடிவாதமாக மறுத்தது. வெற்றி பெற்று ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய பின்னர், வெள்ளையினத்தவரை நோக்கி தனது மெய்யான நல்லெண்ண கரத்தை நீட்டி, தனது நாட்டில் மீண்டும் ஒரு சிவில் யுத்தம் தோன்றாமல் இருக்க அடித்தளமிட்ட மகத்தான மனிதாபிமான தலைவனை பார்த்து உலகம் இன்று வியக்கிறது.
அச்சப்படாதவன் வீரன் அல்ல, அச்சத்தை வெல்பவனே வீரன் என்றும், சுதந்திர இலக்கை நோக்கிய பயணம் சுலபமானதல்ல, எங்களில் அநேகர் மரணத்தின் நிழலை மீண்டும், மீண்டும் தொட்டு வந்த பின்னரே அந்த இலக்கை அடைய முடியும் என்றும், ஆபத்து வரும்போது முன் வரிசையில் சென்று தலைமை தாங்கு; பாராட்டு வரும்போது பின் வரிசையில் நின்று வழிகாட்டு என்றும் மடிபா மண்டேலா மனந்திறந்து சொல்லி சென்ற மகத்தான வார்த்தைகள் எனக்கும், எங்கள் கட்சிக்கும், எங்கள் மக்களுக்கும் வழி காட்டுகின்றன.
மண்டேலாவின் வரலாறு எம்மை வழிகாட்டட்டும்: மனோ
Reviewed by NEWMANNAR
on
December 07, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment