காணாமற்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது
காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைக் காலம் 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான மூவரடங்கிய இந்த ஆணைக்குழுவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியமித்திருந்தார்.
காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்து ஜனாதிபதியிடம் அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்கான அதிகாரம் இந்த ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கடந்த மாதம் ஆணைக்குழுவின் பணிப்பாணையை ஜனாதிபதி விரிவுபடுத்தியதை அடுத்து, ஆணைக்குழுவிற்கு அலோசனை வழங்குவதற்காக மூவரடங்கிய சர்வதேச நிபுணர்கள் குழுவொன்றையும் நியமித்திருந்தார்.
இதற்கமைய, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சமர்ப்பித்த அறிக்கையின் 4,359 ஆவது பந்தியில் சுட்டிக்காட்டப்பட்டமைக்கு அமைய, பல்வேறு விடயங்களில் மேலதிக விசாரணை தேவைப்படுவதாகக் கண்டறியப்பட்ட விடயங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான அதிகாரமும் இந்த ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
காணாமற்போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு நாளை மறுதினம் (07) மன்னாரில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
காணாமற்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது
Reviewed by NEWMANNAR
on
August 06, 2014
Rating:

No comments:
Post a Comment