அன்பின் அடையாளமாய் மாறிய தாய் – இறுதிக் கிரியைகள் இன்று
அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த கணவன், மனைவி இருவரின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் மூன்று மணியளவில் இடம்பெறவுள்ளது.
கடந்த 11ஆம் திகதி நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 23 பேர் உயிரிழந்த நிலையில் 40க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர்.
குறித்த விபத்தில் சிக்கிய தாய் ஒருவர் தனது ஒன்பது மாதங்கள் ஆன குழந்தையை காப்பாற்றுவதற்கு பெரும் பாடுபட்டிருந்தார். அது குறித்த புகைப்படங்களும், காணொளிகளும் சமூக ஊடகங்களில் வைரலாகின.
எவ்வாறியினும், குழந்தையும், தாயும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், தாய் உயிரிழந்தார். மேலும், இந்த விபத்தில் குழந்தையின் தந்தையும் உயிரிழந்த நிலையில், இந்த தம்பதியினரின் மேலும் இரு குழந்தைகள் படுகாயமடைந்திருந்தனர்.
இந்நிலையில், காயமடைந்த மூன்று பிள்ளைகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பெற்றோர்களின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன.
இதன்படி, இவர்களின் சொந்த ஊரான கொஸ்லாந்தை மீறியபெத்த எஸ்.கே டிவிஷனில் இவர்களின் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளன.
விபத்தில் உயிரிழந்த காசிராஜான் தனலச்சுமி தம்பதிகளின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் மூன்று மணியளவில் இடம்பெற்று தோட்ட பொது மயானத்தில் உடல் அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment