அண்மைய செய்திகள்

recent
-

மன்னன் என்கிற மமதையில் செயற்படுகின்றார் மஹிந்த ராஜபக்ஸ! மன்னாரில் மைத்திரிபால பேச்சு (Photos)

இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள எழுச்சியின் காரணமாக நீங்கள் எல்லோரும் மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் ஆட்சிக்கு எதிராக ஒன்று திரண்டுள்ளீர்கள் என்பதனை நான் அறிகின்றேன். இந்த வேளையிலே மகிழ்ச்சியான ஒரு விடையம் எதிர்வரும் 8 ஆம் திகதி எங்களுடைய அன்னச்சின்னம் நிச்சயமாக வெற்றி பெறும் என்பதனை உறுதியாக கூறிக் கொள்ளுவதாக ஜனாதிபதி எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

-ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று (30) செவ்வாய்க்கிழமை காலை மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் இடம் பெற்றது.

இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இந்த நாட்டில் வாழுகின்ற மக்கள் ஏன் மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்கு எதிராக ஒன்று திரண்டுள்ளனர் என்ற விடயத்தை நான் சுருக்கமாக உங்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.

இரண்டு தடவைகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களை ஆட்சிப்பீடம் ஏற்றியமை உங்களின் வாக்குகளினால் என்பதனை நீங்கள் அறிவீர்கள்.

இன்று மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் நினைப்பு என்னவென்றால் நான் மக்களின் வாக்குகளினால் வெற்றி பெற்ற ஒருவன் அல்ல. நான் ஒரு மன்னன் என்ற மமதையில் அவர் செயற்பட்டு வருகின்றார்.

சிறிலங்கா சுதந்திரக்கட்சியாக அவர் மாறிவிட்டார். பலதரப்பட்டவர்களை அவர் அச்சுறுத்தி வருகின்றார். பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரது ஆலோசனைகளையும் அமுல்படுத்தமால் அச்சப்படுத்திக் கொண்டிருக்கின்றார். நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கா அவர்களையும் அச்சுறுத்தியுள்ளார்.

அதனால் இன்று நீதியரசர்கள் கூட அச்சப்படுகின்றனர்.

இந்த நாட்டில் பொலிஸார் சுதந்திரமாக செயற்படுவதற்கு ராஜபக்ஸவின் குடும்ப கோரிக்கைகளின் படி செயற்பட கட்டளை பிரப்பித்துள்ளார். அதே போன்றுதான் முப்படைகளுக்கும் அவர் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

வியாபாரிகளையும், பெரிய வியாபாரம் செய்யும் வியாபாரிகளையம் அச்சுறுத்தி கப்பம் பெற்று ராஜபக்ஸவின் குடும்பம் செயற்பட்டு வருகின்றது.

மக்களுக்கான நிதிகளிலும் அவர்கள் மோசடி செய்து வருகின்றனர். இந்த நாட்டின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய்களில் அரைவாசி கூட செலவு செய்யப்படாமல் அவர்களின் பொக்கற்றுகளுக்குள் செல்லுகின்றது.

இந்த நாட்டில் மக்கள் பட்டினியுடன் வாழ்ந்து வருகின்றனர். மூன்று வேளை உணவு உண்ண முடியாத நிலையில் கூட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

விவசாயிகள், மீனவர்களுக்கு அதிக பிரச்சினை உள்ளது. விவசாயிகளின் பிரச்சினை குறித்து இந்த அரசு எவ்வித அக்கறையும் எடுப்பதில்லை.

விவசாயிகளின் சிறுநீரக நோய் அதிகரித்துள்ளது. இந்த அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் கீழ் வெளிநாட்டில் இருந்து விவசாயத்திற்கு பசளை, கிருமி நாசினி ஆகியவற்றை கொண்டு வந்து அவர்களின் இந்த நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இடம்பெறுவதினாலேயே விவசாயிகள் இன்று இந்த சிறுநீரக பிரச்சினைகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

நான் விவசாய அமைச்சராக இருந்த போது வெளிநாடுகளில் இருந்து பசளைகள், கிருமி நாசினிகள் போன்றவற்றை இறக்குமதி செய்ய வேண்டாம் என கூறினேன். ஆனால் எதனையும் அவர்கள் செவிமடுக்கவில்லை.

இவற்றிற்கு அதிகமான பணத்தை கொடுப்பதினால் விவசாயிகள் செத்து மடிந்தால் என்ன என்று அவற்றை கணக்கில் எடுக்காது செயற்படுகின்றனர்.

அவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். எனவே இவ்வாறான வித்தியாசமான செயற்பாடுகளுக்கு பணம் கொடுப்போரின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

விவசாயிகளின் ஓய்வூதியத் திட்டம் நிறுத்தப்பட்டது விவசாயிகளுக்கு செய்யும் மாபெரும் துரோகமாகும்.

நாங்கள் உங்களுக்கு தெழிவாகச் சொல்லுகின்றோம் நாம் அமைக்கும் எமது ஆட்சியில் விவசாயிகளுக்கு அதிகமான ஓய்வூதியத்தை பெற்றுத் தருவதற்கு திட சந்தர்ப்பம் கொண்டுள்ளோம். இந்த நாட்டு விவசாயிகளுக்கு மேலும் இந்த நாட்டிலே பல வகை காய்கறி வகைகளை உற்பத்தி செய்ய ஊக்குவிக்காது இந்த அரசாங்கம் இவற்றை எல்லாம் இறக்குமதி செய்து எமது விவசாயிகளை மிகவும் வதைப்படுத்துகின்றது.

நாம் உருவாக்கும் இந்த ஆட்சியில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பல வகைகள், மரக்கறி வகைகள் ஆகியவற்றின் இறக்குமதிக்கு தடை விதித்து எமது நாட்டு விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கி அவர்களின் விவசாய,உற்பத்தி நடவடிக்கைகளை ஊக்கப்படுத்துவோம். இந்த அரசாங்கம் மீனவர்களின் பிரச்சினைகள் குறித்தும் பார்ப்பதில்லை.

மீனவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு மீன்பிடி அமைச்சராக இருந்த ராஜித சேனாராத்தின அவர்களுக்கு இந்த அரசாங்கம் இடம் கொடுக்கவில்லை.

மீனவர்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகளை நாங்கள் அடையாளப்படுத்தியுள்ளோம். மீனவர்களுக்கும் ஓய்வூதியத் திட்டத்தை நாங்கள் அமுல்படுத்துவோம். அதே போன்று எமது தேசிய மீன்பிடிப்பாளர்களின் அந்த மீன் பிடித்துறையை ஊக்குவித்து அவர்களின் தொழில் துறையை வளப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுவோம்.

இந்த நாட்டு மீனவர்களுக்கு வழங்குவதற்காக வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் படகுகள், வள்ளம், வலைகள் போன்றவற்றிற்கான வரி நிலை முழுமையாக நீக்குவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். இந்த விடயங்கள் அனைத்தையும் உங்களுக்காக நடைமுறைப்படுத்துவோம் என்று கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

எவ்வளவுதான் இந்த நாட்டில் அபிவிருத்திகளை மேற்கொண்டாலும் மனித வளங்களை ஒரே இடத்தில் ஒற்றுமைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ், முஸ்லீம், சிங்கள மக்களை ஒற்றுமைப்படுத்தி ஒரே இடத்தில் அமரச் செய்வதற்கு வெறுமனே இந்த அபிவிருத்தி திட்டங்கள் மாத்திரம் போதுமானதாக இல்லை.

ஒரு துப்பாக்கியில் இருந்து வரும் சத்தத்தை இன்னொரு துப்பாக்கியின் சத்தத்தினால் நிறுத்த முடியும். துப்பாக்கியில் இருந்து வரும் சத்தத்தை துப்பாக்கி மூலம் நிறுத்த முடியும். மனிதர்களின் உள்ளங்களில் ஏற்பட்டுள்ள அந்த சத்தத்தை நிறுத்த முடியாது. யுத்தம் முடிவடைந்த போது அந்த மக்களை ஒரே இடத்தில் அமரச் செய்வதற்கு முடியாமல் போயுள்ளது.

நாங்கள் உருவாக்கப்போகும் புதிய அரசாங்கத்தில் சிங்களம், தமிழ், முஸ்லீம் மக்களின் உள்ளார்ந்த உணர்வுகளை ஒற்றுமைப்படுத்துகின்ற பணியினை செய்து முடிப்போம் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

இந்த மக்களின் குரல் வலைகளை வெடிச்சத்தங்களினாலும், துப்பாக்கியினாலும் ஒரு போதும் நிறுத்த முடியாது என்பதனை கூறிக் கொள்ள விரும்புகின்றேன். ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு போதனைகள் உள்ளது. அந்த வகையில் பௌத்த மதம் போதித்தது எவ்வாறு எல்ல மதங்களையும் ஒற்றுமைப்படுத்துவது என்று.

அதே போன்று முஹம்மது நபி அவர்கள் மனித இதயங்களை எவ்வாறு ஒற்றுமைப்படுத்துவது என கூறியுள்ளார். அதே போன்று யேசு கிறிஸ்து அவர்கள் மனித இதயங்களை எவ்வாறு ஒற்றுமைப்படுத்துவது என கூறியுள்ளார்.

-எனவே நாங்கள் தெழிவாகச் சொல்லுகின்றோம். மக்களை ஒற்றுமைப்படுத்துவது துப்பாக்கியினாலோ அல்லது வெடிச்சத்தங்களினாலோ அல்ல. மனிதர்களின் உள்ளங்களினால் மாத்திரமே என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
-நான் இந்த மக்களை எவ்வாறு ஒற்றுமைப்படுத்துவேன் என ஏற்கனவே கூறியது போன்று மதங்கள் எதைச் சொல்லுகின்றதோ அந்த மதக் கலாச்சாரத்தின் அடிப்படையில் மக்களை ஒற்றுமைப்படுத்துவேன்.

-எவர் எந்த மொழியில் பேசினாலும் மக்களின் உள்ளத்தில் உள்ள பிரச்சினைகளை நாங்கள் அறிந்து கொள்ள வேண்டும். மக்களின் துன்ப துயரங்கள் குறித்தும் அறிந்திருக்க வேண்டும். அதற்கான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

-மக்களாகிய உங்களுக்கு உள்ள பிரச்சினைகள் அவர்களுக்கு இல்லை. அவர்களிடம் பணமும், பாதுகாப்பும் உள்ளது. அவர்களிடம் துப்பாக்கி துளைக்காத வாகனம் உள்ளது. அவர்கள் ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். இந்த நாட்டின் ஜனாதிபதி போன்று யாரும் மன்னர் வாழ்க்கை வாழ்ந்தது இல்லை. தற்போது தேர்தலுக்காக வெளிநாடுகளில் இருந்து மக்களுக்கு வழங்க பல பொருட்கள் மஹிந்த ராஜபக்ஸவினால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அவை உங்களுக்கு வழங்கப்படும்.அவற்றை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள்.

நடைபெறும் தேர்தலில் அன்ன சின்னத்திற்கு வாக்களித்து மஹிந்த ராஜபக்ஸவை தூக்கி எறியுங்கள். அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவருக்கு இந்த ஊழல் மிக்க அரசாங்கம் வழங்கிய அனைத்து சலுகைகளையும் தூக்கி எறிந்து விட்டு எம்முடன் இணைந்துள்ளார். றிஸாட் பதியுதீன் இந்த மாவட்டத்திற்கு மட்டுமல்ல இந்த நாட்டு முஸ்லீம் மக்களின் தலைவர் என்பதனை நீங்கள் மறந்து விட வேண்டாம். என தனது உரையில் தெரிவித்தார். குறித்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன, பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டதோடு பல ஆயிரக்கணக்கான மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

மன்னார் நிருபர்-












மன்னன் என்கிற மமதையில் செயற்படுகின்றார் மஹிந்த ராஜபக்ஸ! மன்னாரில் மைத்திரிபால பேச்சு (Photos) Reviewed by NEWMANNAR on December 31, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.