
வெளிநாடுகளுடனான உறவு வலுவடைந்து வரும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதியின் இலங்கை விஜயமும் விரைவில் இடம் பெறலாம் என எதிர்பார்த்துள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஜனவரி 9 ஆம் திகதி கடந்த அரசாங்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததன் பின்னர் புதிய அரசின் கீழ் வெளிநாடுகளுடனான உறவு வலுவடைந்துள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுடனான உறவு மீண்டும் வலுவடைந்துள்ளது.
ரஷ்யாவும், அமெரிக்காவும் எமது நாட்டுடன் நல்லுறவை பேண முன்வந்துள்ளன.இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு நாட்டிற்கு இல்லாது போயுள்ள ஜீ.எஸ்.பி.பிளஸ். போன்ற வரிச் சலுகைகளை மீண்டும் பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.
எமது நாட்டில் இடம் பெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் காரணமாக பல வகையிலும் வெளிநாடுகளுடனான உறவை நாம் இழந்துள்ளோம் அதனால் அதனை புதுப் பிக்கும் வகையில் இடம் பெற்று வரும் பேச்சுவார்த்தைகளிலேயே அமெரிக்க ஜனாதிபதியின் இலங்கை வருகை குறித்தும் ஆராயப்பட்டிருந்தது.
இதன் மூலம் மீனவர் பிரச்சினைகளுக்கும் உடனடி தீர்வை எட்டக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் சாத்தியம் உள்ளது. எவ்வாறாயினும் இவ்வருட இறுதியில் நல்லாட்சி அரசாங்கம் அமெரிக்க ஜனாதிபதியின் விஜத்தினை உறுதிப்படுத்திக் கொள்ளும்.
அதேவேளை நாளை 3 ஆம் திகதி தொடக்கம் 5 ஆம் திகதி வரையில் சென்ஹய் மாநாடு ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இடம் பெறவுள்ளது. இதில் பங்கேற்பதன் மூலம் ஆப்கானிஸ்தான், ஈரான், மொங்கோலியா, பாகிஸ்தான், துருக்கி, பௌ ருஸ் போன்ற நாடுகளுடனான உறவினை வலுப்படுத்திக் கொள்ள முடியும் என எதிர் பார்த்துள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment