
20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக சிறுபான்மை இன, சிறு அரசியல் கட்சிகளின் நேற்றைய சந்திப்பிலும் இறுதிமுடிவு எட்டப்படவில்லை.
இவ்வாறிருக்கையில் பல்வேறு சர்ச்சைகளுடன் இழுபறியில் இருக்கும் இத்திருத்தச்சட்டம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் இறுதி முடிவை வெளியிடுவார் என உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக அரசியல் அமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள உத்தேச 20 ஆவது திருத்தச்சட்ட மூலம் தொடர்பாக ஆராய்வதற்கான நேற்றைய தினம் சிறுபான்மை, சிறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருசலாமில் நடைபெற்றது.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம் பெற்ற இச்சந்திப்பில் அமைச்சர் பழனி திகாம்பரம், கல்முனை மாநகர மேயரும் மு.கா.வின் பிரதி தவிசாளருமான நிஸாம் காரியப்பர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமிட், ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் குமரகுருபரன் மற்றும் முரளிரகுநாதன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
20ஆவது திருத்தச்சட்ட மூலம் தொடர்பாக அமைச்சர் ஹக்கீம் மற்றும் ஹெல உறுமயவின் தலைவரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடு, அதன் பின்னர் ஹெல உறுமயவின் பிரதிநிதிகள் வெளியிடும் கருத்துக்கள், 20ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பாக இறுதியான முடிவு ஆகியவை தொடர்பாக கலந்துரையாடுவதற்கே இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் குறித்த கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஜாதிக ஹெல உறுமய, ஜனநாயக மக்கள் காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயக கட்சி, நவசமசமாஜக்கட்சி உட்பட மேலும் சில கட்சிகள் பங்கேற்றிருக்கவில்லை. இதன் காரணத்தால் சட்டமூலம் தொடர்பாக இச்சந்திப்பின் போது இறுதிமுடிவெதுவும் எடுக்கப்படவில்லை.
இச்சந்திப்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறுகையில் இரட்டை வாக்குச் சீட்டை உள்வாங்கவேண்டும் என்ற கோரிக்கை மறுக்கப்படும் பட்சத்தில் அது பாரிய விளைவை சிறுபான்மையினருக்கு ஏற்படுத்திவிடும். அவ்வாறான ஒரு சட்டமூலம் கொண்டுவரப்படுமாயின் அது எமது அதிருப்திக்குரியதாகவே இருக்கும் என்றார்.
இந்நிலையில் எதிர்வரும் தினங்களில் மீண்டும் சிறுபான்மை சிறு அரசியல் கட்சிகள் கலந்துரையாடவிருப்பதாக தெரிய வருகின்றது.
முன்னதாக இறுதியாக நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது 20ஆவது திருத்தச்சட்ட மூலம் தொடர்பாக அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோரிடையே இரட்டை வாக்குச்சீட்டை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கடுமையான வாய்த்தர்க்கம் இடம்பெற்றிருந்தது.
அதனைத் தொடர்ந்து மு.கா தலைமை, பிரதி செயலாளர் ஆகியோரை மையமாக வைத்து ஜாதிக ஹெல உறுமய கடுந்தொனியில் கருத்துக்களை முன்வைத்ததுடன் இரட்டை வாக்குச்சீட்டை ஏற்கமுடியாது எனவும் குறிப்பிட்டிருந்தது.
மறுபுறத்தில் 20ஆவது திருத் தச்சட்டமூலம் தொடர்பாக ஜனாதிபதி தனது இறுதி முடிவை எடுப்பதற்காக கட்சிகளால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை ஆராய்வதற்காக குழுவொன்றை நியமித்திருந்தார். இந்நிலையில் வெகு விரைவில் குறித்த சட்ட மூலம் தொடர்பாக இறுதி முடிவை ஜனாதிபதி அறிவிப்பார் என அரச உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment