அண்மைய செய்திகள்

recent
-

மனோ கணேசன் தலைமையில் இன்று உருவாக்கப்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி!


இலங்கை அரசியல் பரப்பில் இன்று உதயமாகும் தமிழ் முற்போக்கு கூட்டணி, காலத்தின் பணிப்பை பூர்த்தி செய்து நம்நாட்டு அரசியல் பரப்பில் புதிய வரலாறு படைக்கும் என்று நான் திடமாக நம்புகின்றேன் என மனோ கணேசன் தெரிவித்தார்.

இன்று கொழும்பில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அங்குரார்ப்பண நிகழ்வுடன் நடைபெற்ற ஊடக மாநாட்டில் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, மலையக மக்கள் முன்னணி ஆகிய மூன்று கட்சி பிரதிநிதிகள் மத்தியில் கடந்த சில மாதங்களாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிவுற்றதையடுத்து இன்று கொழும்பில் சம்பந்தப்பட்ட மூன்று கட்சிகளின் தலைவர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம், வி. இராதாகிருஷ்ணன் ஆகியோர் தமது கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளின் மூலம் உருவாக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டனர்.

இதையடுத்து ஊடக மாநாட்டில் உரையாற்றிய மானோ கணேசன் கூறியதாவது,

நாம் பிரதிநிதித்துவம் செய்யும் மாவட்டங்கள் எமது கூட்டணி மத்திய மாகாணத்தின் நுவரெலியா, கண்டி, மாத்தளை, மேல்மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, ஊவா மாகாணத்தின் பதுளை, சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, கேகாலை, வடமேல் மாகாணத்தின் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களை அரசியல் ரீதியாக பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பாக செயற்படும். இந்த அனைத்து மாவட்டங்களிலும் நமது கூட்டணி கட்சிகளின் பிரதிநிதித்துவம் இல்லாத இடங்களில் நமது அரசியல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும்.

எமது மக்களின் ஜனத்தொகை

இலங்கை நாட்டிலே முப்பத்தியொரு இலட்சத்து, பதின்மூன்றாயிரம் (3,113,247) தமிழர்கள் வாழ்கிறார்கள். இதில் வடக்கு, கிழக்கில் பதினாறு இலட்சத்து பதினொன்றாயிரம் (1,611,036) தமிழர்கள் வாழ்கிறார்கள். வடக்கு, கிழக்கிற்கு வெளியில் பதினைந்து இலட்சத்து இரண்டாயிரம் (1,502,211) தமிழர்கள் வாழ்கிறார்கள். வடக்கு, கிழக்கிற்கு வெளியில் வாழும் இந்த பதினைந்து இலட்சம் தமிழர்களையே தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் நமது தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதிநிதித்துவம் செய்ய விளைகிறது.

எமது கூட்டணியின் பெயர் அடையாளம்

எமது இந்த கூட்டணி உருவாக்கம் தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த போது, இந்த கூட்டணி மலையகத்துக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு கூட்டணியாக பரவலாக ஊடகங்களில் குறிப்பிடப்பட்டது. எமது கூட்டணிக்குள்ளே மலையக மூச்சு இருக்கின்றது. மலையக உயிரோட்டம் இருக்கின்றது. மலையக தேசியம் இருக்கின்றது. ஆனால், எமது கூட்டணி மலையகத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டது அல்ல.

அமரர் நண்பர் பெரியசாமி சந்திரசேகரனின் கனவு

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகர் நண்பர் சந்திரசேகரனையே நாம் இங்கே பின்பற்றுகின்றோம் என நான் நினைக்கின்றேன். மலையகத்திற்கு அரசியல் அடையாளம் தேடிய அதேவேளை முழு நாட்டிலும் வாழும் தமிழ் மக்களுடன் தமிழ் தேசிய உறவாடலை அவர் கொண்டிருந்தார். பத்து வருடங்களுக்கு முன்னர் எமது கட்சி, மலையக மக்கள் முன்னணியுடன் கூட்டு சேரும் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்றன. அதை சந்திரசேகரனே முன்னின்று ஊக்குவித்தார்.

ஆனால், அன்று அந்த கட்சியில் ஒரு சிலரால் அந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. அதேபோல் தம்பி பழனி திகாம்பரமும் மலையக மக்கள் முன்னணியுடனேயே தனது புரட்சிகரமான அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.

எனவே இன்று கூடி இருக்கும் மூன்று கட்சிகளும் ஒன்றுக்கொன்று புதியவை அல்ல. நாங்கள் சொந்தக்காரர்கள். எமது உறவுகள் இன்று, அமரர் சந்திரசேகரனின் நாமத்தால் மென்மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது.

நாம் பிரதிநிதித்துவம் சமூக பிரிவினர்

பல்வேறு சமூக பிரிவினரை கூட்டிணைக்கவே இந்த கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய மலைநாட்டில் வசிக்கும் மலையக தமிழ் மக்களை நாம் பிரதிநிதித்துவம் செய்கின்றோம். வடக்கு–கிழக்கை பூர்வீகமாக கொண்டு மேல்மாகாணத்திலும், தென்னிலங்கையின் ஏனைய பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்களை நாம் பிரதிநிதித்துவம் செய்கின்றோம்.

தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகள் பேசி, இந்து, கத்தோலிக்க, இஸ்லாம் மதங்களை பின்பற்றி இலங்கையின் மேற்கு கரை முழுக்க குடியேறி வாழும் இந்திய வம்சாவழி மக்களை நாம் பிரதிநிதித்துவம் செய்கின்றோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்புடனான நமது உறவு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் எமது சகோதர தமிழ் உடன்பிறப்புகளை அரசியால் ரீதியாக பிரதிநிதித்துவம் செய்யும் தலைமை அரசியல் அமைப்பாக, தமிழ் தேசிய கூட்டமைப்பை நாம் காண்கிறோம். இந்த மாகாணங்களில் குறிப்பாக கிளிநொச்சி மற்றும் வன்னி மாவட்டங்களில் வாழும் மலையகத்தை பூர்வீகமாக கொண்ட பெருந்தொகை மக்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பே பிரதிநிதித்துவம் செய்கின்றது.

நமது இரண்டு கூட்டு அமைப்புகளுக்கு இடையில், பிரிபடாத இலங்கைக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை அடைவது என்ற இலக்கு தொடர்பில் ஒரு புரிந்துணர்வு இயல்பாகவே ஏற்படுமென நாம் எதிர்பார்க்கின்றோம்.

ஆலோசனை சபை

நமது கூட்டணி சமூக முன்னோடிகளை அடக்கிய ஆலோசனை சபை ஒன்றை அமைக்கும். கட்சிகளின் நேரடி சார்பு அற்ற சிந்தனையாளர்கள் இந்த சபையில் அங்கம் வகிக்கும்படி அழைக்கப்படுவார்கள். இந்த சபை கூட்டணிக்கு வழிகாட்டும் சபையாக செயற்படும்.

நமது அரசியல் கோரிக்கைகள்

வடக்கு, கிழக்கிற்கு வெளியே வாழும் தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை, பிரிபடா இலங்கை என்ற ஒரே நாட்டு வரையறைக்குள் நின்று நாம் முன்வைப்போம். மலையக தோட்ட தொழிலாளர்களின் தொழிற்சங்க கோரிக்கைகளையே பொதுவாக நமது மக்களின் அரசியல் கோரிக்கைகளாக கருதும் சிந்தனை பொதுவாக நிலவுகிறது. இதை நாம் மாற்றுவோம். மலையக தோட்ட தொழிலாளர்களின் தொழிற்சங்க கோரிக்கைகளை எமது இந்த கூட்டணி அரசியல் பலத்துடன் நாம் உரிய தொழிற்சங்க தளத்தில் சந்திப்போம்.

அதேவேளை எமது மக்களின் அரசியல் கோரிக்கைகளை நாம், எமது கூட்டணியின் தலைமையின் பங்குபற்றலுடன் நமது பொது செயலாளர் அந்தனி லோரன்ஸ் தலைமையில் அமைக்கப்படும் குழு ஆய்வு செய்து ஆலோசனை சபையின் ஒத்துழைப்புடன் உரிய தேசிய, சர்வதேசிய அரங்குகளில் வெளிப்படுத்தும்.
மனோ கணேசன் தலைமையில் இன்று உருவாக்கப்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி! Reviewed by NEWMANNAR on June 03, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.