அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்: சாணக்கியன் எம்.பி கோரிக்கை

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் அக்கிராசன உரை மீது நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். 

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 

“நாட்டில் சமத்துவம் என்பது மிகவும் முக்கியமானது. அதனை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனாலும், ஜனாதிபதி அண்மையில் ஆற்றிய அக்கிராசன உரையில் தமிழ் மக்களுக்கு மட்டும் உரித்தான சில பிரச்சினைகள் பற்றி பேசியிருக்கவில்லை.

வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் பிரதான கட்சி என்ற அங்கிகாரம் இலங்கை தமிழரசு கட்சிக்கு மீண்டும் கிடைத்துள்ள நிலையில், இந்த விடயங்களை நான் கவனத்திற்குகொண்டு வருகின்றறேன். 

அந்த வகையில் பல அரசியல் கைதிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஒரு அரசியல் நோக்கத்திற்காக ஆயுதம் ஏந்தி போராடிய இந்த தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர்கள் மீது தற்போது பல்வேறு வழங்கு பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்தவிடயம் தொடர்பில் அரசாங்கம் உடனடி கவனம் செலுத்த வேண்டும்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குவதாக கூறி ஆட்சிக்கு வந்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் தற்போது அந்தச் சட்டத்தை கையில் எடுத்துள்ளது. 

இந்நிலையில், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அரசாங்கம் கவனமெடுக்க வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோல் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்க வேண்டும். இந்த விடயத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவது மட்டுமின்றி, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். 

உண்மை கண்டறியப்படுவதுடன், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். 

காணி சம்பந்தமான பிரச்சினைகள் தமிழ் மக்களுக்கு அதிகம் இருக்கின்றன. இந்த விடயத்தில் சமத்துவம் என்ற அடிப்படையில் சிங்கள மக்களுக்கு இல்லாத பிரச்சினைகள் தமிழ் மக்களுக்கு இருக்கின்றன.

மேய்சல் தரையுடன் தொடர்புடைய மகாவலி அதிகார சபையுடைய பிரச்சினை வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் உள்ளன. இந்த பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நாங்கள் அறிய வேண்டும். 

அதேபோல் தொல்பொருள் திணைக்களத்தால் இந்நாட்டில் சிங்கள மக்களுக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் இல்லை. ஆனால் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக தொல்பொருள் திணைக்கள சட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக பிரச்சினையில் அரசாங்கம் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். இது நிர்வாக ரீதியான ஒரு பிரச்சினை. இது தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட ஒரு பிரச்சினை.

இந்நிலையில், அரசாங்கம் இதற்கொரு தீர்வை வழங்க வேண்டும். ஏனெனில் ஆளும் கட்சிக்கும் தமிழ் மக்களின் வாக்குகள் கிடைத்துள்ளன. ஆகையினால், அரசாங்கம் தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்.

மேலும், வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும். வடக்கில் உள்ள முக்கிய வீதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளன. அதனை நாங்கள் வரவேற்கின்றோம். 

ஆனாலும், இந்த விடயத்தின் இன்னும் மேலதிக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பாடசாலைகள், ஆலயங்கள் மற்றும் பொது மக்களின் காணிகளில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

அதனை அகற்ற அரசாங்கம் முன்மாதிரியான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.” என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தியிருந்தார்.




தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்: சாணக்கியன் எம்.பி கோரிக்கை Reviewed by Author on December 04, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.