பாடகர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம் ஆனால்... இளங்குமரன் எம்.பி
தோல்வியடைந்த சில அரசியல்வாதிகளுக்கு, இன்றைய அரசியல் சூழலில் ஒரு இளைஞர் பாடகர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம்.ஆனால் எமக்கு அது மகிழ்ச்சியல்ல. மனவேதனையே என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
#
திறமைக்கு பாராட்டு
இன்று கைது செய்யப்பட்ட பின்னரே அந்த இளைஞர் கலைஞரைப் பற்றி பலரும் பேசுகின்றனர். இதுவரை அவரது திறமையையும் படைப்புகளையும் கண்டுகொள்ளாதவர்கள், இன்று அவரை பற்றி கருத்து தெரிவிக்க முன்வருகின்றனர்.
குறைந்தபட்சம் இப்போது அவரது திறமை வெளிச்சத்திற்கு வந்திருப்பது ஒரு வகையில் ஆறுதலாக இருக்கிறது. இசை என்பது மக்களின் உணர்வுகளையும் அனுபவங்களையும் வெளிப்படுத்தும் ஒரு கலை வடிவமாகும்.
கலைஞர்கள் தங்களது உணர்வுகளை இசை ஊடாக வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களில், அதனால் அவர்கள் பாதிக்கப்படாத வகையில் எதிர்காலத்தில் சட்டங்களில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு எனக்குள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பல திறமையான பாடகர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் உள்ளனர். எனினும், அவர்களது திறமைக்கேற்ற அங்கீகாரமும் பிரதிபலனும் பல சந்தர்ப்பங்களில் கிடைப்பதில்லை.
சிலரின் திறமைகள் திருடப்படுகின்றன; சிலரின் படைப்புகள் பிறரால் பயன்படுத்தப்பட்டு பொருளாதார பலன்கள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. ஆனால் உண்மையான திறமையாளர்கள் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன.
இன்று பொலிஸார் கைது செய்த பிறகே இந்தப் பாடகரை அனைவரும் திரும்பிப் பார்க்கின்றனர். ஆனால் அதற்கு முன்னர் அவரது பாடல்களை எத்தனை பேர் கவனமாகக் கேட்டார்கள், அவரது திறமையை எத்தனை பேர் மதித்தார்கள் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.
கைது செய்யப்பட்டவர் சட்டத்தின் அடிப்படையில் நியாயமான விசாரணையைப் பெற்று, சட்டத்தின் ஊடாகவே விடுதலையாக வேண்டும் என்பதே எமது நிலைப்பாடும் இலக்குமாகும் என்றார்.
Reviewed by Vijithan
on
June 07, 2026
Rating:


No comments:
Post a Comment