அண்மைய செய்திகள்

recent
-

அனோஜன் தொடர்பான சவுதி நீதிமன்றின் தீர்மானத்தை வரவேற்ற ஜனாதிபதி!

 சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை நீக்குவதற்கு அந்நாட்டின் உயர் நீதிமன்றம் எடுத்த தீர்மானத்தை பெரிதும் பாராட்டுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

சவுதி உயர் நீதிமன்றம் எடுத்த இந்தத் தீர்மானத்தைப் பாராட்டி, ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ 'X' சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை மேற்கொண்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

 

இந்தத் தீர்மானம் அனோஜனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மற்றும் இது குறித்து அவதானத்துடன் இருந்த அனைத்து இலங்கை மக்களுக்கும் பெரும் ஆறுதலையும் நிவாரணத்தையும் அளிப்பதாக ஜனாதிபதி அதில் குறிப்பிட்டுள்ளார்.

 

நட்புறவு நாட்டின் சட்ட நடைமுறைகளுக்கு மதிப்பளித்து மேற்கொள்ளப்பட்ட பொறுமையான இராஜதந்திர தலையீடுகள் மற்றும் வெளிநாட்டில் உள்ள ஓர் இலங்கையருக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்த அனைத்துத் தரப்பினரின் தளராத முயற்சியினாலேயே இந்த நல்முடிவைப் பெற முடிந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய சவுதி அரேபிய அரசுக்கு சிறப்பு நன்றியைத் தெரிவிப்பதுடன், இந்தச் சட்டப் பணிகளுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட இரு நாடுகளின் இராஜதந்திரிகள், அரச அதிகாரிகள் மற்றும் சட்டக் குழுக்களுக்கும் இலங்கை அரசின் பாராட்டுக்கள் உரித்தாவதாக ஜனாதிபதி தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

அனோஜனுக்கு எதிரான ஏனைய சட்ட நடைமுறைகள் நிறைவடையும் வரை அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்க அரசு தயாராக உள்ளதாக ஜனாதிபதி  சுட்டிக்காட்டியுள்ளார்.

 

சிறந்த வாழ்வாதாரத்தைத் தேடி வெளிநாடு செல்லும் எந்தவொரு இலங்கையரும் தாம் தனித்துவிடப்பட்டுள்ளோம் என்ற உணர்வைப் பெறக்கூடாது என்றும் அந்தப் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது






அனோஜன் தொடர்பான சவுதி நீதிமன்றின் தீர்மானத்தை வரவேற்ற ஜனாதிபதி! Reviewed by Vijithan on October 14, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.