அண்மைய செய்திகள்

recent
-

யாழ். பல்கலைக்கழக மாணவர் விவகாரம்: போர்க்கால அடிப்படையில் செயற்படும் அரசு!

கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் எந்தவிதமான குற்றச்சாட்டுக்களோ விசாரணைகளோ இல்லாமல் வெலிகந்தை புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பப்பட்டிருப்பது ஆபத்தான ஒரு உண்மையை வெளிப்படுத்தியிருக்கின்றது. கைது செய்யப்படும் ஒருவரை எவ்வித கேள்விகளுக்கும் இடமின்றி காலவரையறையின்றித் தடுத்துவைக்க முடியும் என்பதுதான் அது.

போர் முடிவுக்கு வந்து மூன்றரை வருடங்கள் கடந்துவிட்டது. போர்க் காலத்தில் பயன்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டமும் நீக்கப்பட்டுவிட்டது. இருந்தாலும் இப்போதும் போர்க்கால அடிப்படையிலேயே அரசாங்கம் செயற்படுகின்றது என்பதை இந்தச் சம்பவம் உணர்த்தியிருக்கின்றது. இது நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக முரண்பாடுகளையும் சந்தேகங்களையும் மேலோங்கச் செய்வதாகவே அமைந்திருக்கும் என்பதை அரசாங்கம் புரிந்துகொண்டிருப்பதாகத் தெரியவில்லை.


இந்த நிலையில்தான், பல்கலைக்கழக மாணவர்களின் விவகாரம் இப்போது சர்வதேச கவனத்தையும் பெற்றிருக்கின்றது. "கைதான மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் அல்லது அவர்களுக்கு எதிரான குற்றங்களை நம்பகரமான முறையில் உறுதிசெய்ய வேண்டும்" என அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு செயற்படும் மனித உரிமைகள் காப்பகம் வலியுறுத்தியிருக்கின்றது. மனித உரிமைகள் காப்பகம் இவ்விடயத்தில் தலையிட்டு, கருத்து வெளியிட்டிருப்பதை உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் செயலாக இலங்கை அரசாங்கம் குற்றஞ்சாட்டலாம். ஆனால், இதற்கு ஆக்கபூர்வமான முறையில் பதிலளிக்கும் நிலையில் அரசாங்கம் இல்லை.


பல்கலைக்கழக மணவர்கள் விவகாரத்தை அரசாங்கம் கையாளும் விதம் மாணவர்கள் மத்தியில் அச்சத்தையும் நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தியே இந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். புனர்வாழ்வு என்ற பெயரில் தற்போது இவர்கள் வெலிகந்தை புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள். இந்தக் கைதுகள் மற்றும் இவர்கள் வெலிகந்தை முகாமுக்கு அனுப்பப்பட்டமையால் ஏற்பட்டுள்ள அச்ச நிலைமை காரணமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி தொடர்ந்தும் சீர்குலைந்த நிலையில் உள்ளது.

 இந்த அச்ச நிலையைத் தணிப்பதற்கு அரசாங்கம் ஏதாவது நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகத் தெரியவில்லை. பதிலாக பீதியை அதிகரிக்கும் வகையிலேயே அரசின் அறிவிப்புக்கள் அமைந்திருக்கின்றன.


"மாணவர்கள் விடுவிக்கப்பட்டால்தான் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க முடியும் என்றால் அது கனவிலும் நடைபெறாது" என யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துரசிங்க உறுதியாகத் தெரிவித்திருக்கின்றார். "கைதான மாணவர்கள் புனர்வாழ்வுக்காக அனுப்பப்பட்டுள்ளார்கள். புனர்வாழ்வுச் செயற்பாடுகள் முடிவடைந்த பின்னரே இவர்கள் விடுவிக்கப்படுவார்கள்" எனவும் அவர் திட்டவட்டமாகக் கூறியிருக்கின்றார். ஆக, மாணவர்கள் உடனடியாக விடுவிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை என்பதைத்தான் இது உணர்த்தியிருக்கின்றது.


மறுபுறத்தில் கைதான தமது சகாக்கள் விடுவிக்கப்படும் வரையில் விரிவுரைகளைப் பகிஷ்கரிப்பது என்ற முடிவில் மாணவர்களும் உறுதியாக இருப்பதாகத் தெரிகின்றது. ஆக, பல்கலைக்கழகம் சுமூகமான நிலைக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் உடனடியாகக் காணப்படவில்லை.

நவம்பர் இறுதிப்பகுதியில் போரில் மரணமடைந்தவர்களை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வைத் தொடர்ந்தே இந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தார்கள். முதலில் வவுனியாவிலுள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இவர்கள், பின்னர் வெலிகந்தை புனர்வாழ்வு முகாமுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள். விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் சுமார் 600 பேர் வரையில் வெலிகந்தை புனர்வாழ்வு முகாமில் வைக்கப்பட்டுள்ளார்கள். போரின் இறுதிதிப் பகுதியில் கைதான இவர்கள் கடந்த மூன்றரை வருட காலமாக புனர்வாழ்வுக்காக இங்கு தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. இதேமுகாமுக்குத்தான் இப்போது பல்கலைக்கழக மாணவர்களும் அனுப்பப்பட்டுள்ளார்கள்.


குறிப்பிட்ட பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டிருப்பதால், புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபாய ராஜபக்ஷ அறிவித்திருக்கின்றார். யாழ். பல்கலைக்கழக ஆசிரியர்களுடனான சந்திப்பு ஒன்றின் போதுதான் அவர் இதனைத் தெரிவித்தார். இது ஆபத்தான ஒரு உண்மையை உணர்த்துவதாக அமைந்திருக்கின்றது.


"எந்தவொரு தமிழனும் முறையான குற்றச்சாட்டுக்கள் எதுவும் இன்றி கைது செய்யப்பட்டு காலவரையறையின்றித் தடுத்துவைக்கப்படமுடியும் என்கின்ற ஆபத்தான உண்மையை இந்தச் சம்பவம் உணர்த்தியிருக்கின்றது" என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியாவுக்கான இயக்குநர் பிரட் அடம்ஸ் சுட்டிக்காட்டியிருப்பது கவனிக்கத்தக்கது. நாட்டில் மீளிணக்கப்பாட்டை உருவாக்குவதற்கு இதுபோன்ற சம்பவங்கள் ஒருபோதும் உதவப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிடடிருக்கின்றார்.


இந்த விவகாரம் தொடர்பில் அவர் தெரிவித்திருக்கும் மற்றொரு கருத்தும் கவனிக்கப்படவேண்டியதுமாகும். "அடிப்படை உரிமைகளின் அடிப்படையில் அமைதி வழியில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை குற்றச்செயல் என வரையறுக்காது இவற்றை அரசாங்கம் அடையாளங் கண்டுகொள்ள வேண்டிய தேவையுள்ளது. இந்த 4 மாணவர்களும் சட்டத்தை மீறியுள்ளனர் என்பதை ஆதாரப்படுத்தாதவிடத்து உடனடியாக இவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்" எனவும் பிரட் அடம்ஸ் வலியுறுத்தியிருக்கின்றார். அடம்ஸ் தெரிவித்திருக்கும் இந்த ஆலோசனை நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு உதவக்கூடியதாக இருக்கும்.


பல்கலைக்கழகம் என்பது வெறுமனே புத்தகப்பூச்சிகளை உருவாக்கும் ஒரு நிறுவனம் அல்ல. எதிர்காலத் தலைவர்களை உருவாக்கும் ஒரு இடம் அது. அங்கு சமூகம் சார்ந்த அரசியல் செயற்பாடுகள் இடம்பெறுவது புதுமையானதல்ல. தென்னிலங்கையில் மட்டுமன்றி சர்வதேசத்திலும் இவ்வாறன நிகழ்வுகளைக் காணலாம். இவற்றை ஒடுக்க முற்படுவது எதிர்மறையான விளைவுகளையே கொடுத்திருக்கின்றது.


இந்த நிலையில் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ள விடயங்கள் முக்கியமாவையாகும். அமைதி வழியிலான செயற்பாடுகளை பயங்கரவாதமாகக் காட்டிக்கொள்வது தவறானது. அதேவேளையில், குற்றச்சாட்டுக்கள் இல்லையெனில் மாணவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். புனர்வாழ்வு என்ற பெயரில் அவர்களைத் தடுத்துவைத்திருப்பது தவறான முன்னுதாரணமாகவே அமையும்!

- தினக்குரல் ஆசிரியர் தலையங்கம்: 23-12-2012-


யாழ். பல்கலைக்கழக மாணவர் விவகாரம்: போர்க்கால அடிப்படையில் செயற்படும் அரசு! Reviewed by NEWMANNAR on December 27, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.