அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கல்வி வலயத்தில் உள்ள தமிழ் பாடசாலைகள் திட்டமிட்டு பின் தள்ளவைக்கும் செயற்பாடு ஆரம்பம்

மன்னார் கல்வி வலயத்திற்குற்பட்ட தமிழ் பாடசாலைகள் திட்டமிட்டு மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளரினால் பின்தள்ளவைக்கப்பட்டு வருவதாக பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர்.


 இந்த நிலையில் வருடா வருடம் தரம் 1இற்கு மாணவர்களை பாடசாலைகளில் அனுமதிக்கப்படுகின்ற போது அந்த மாணவர்களை தரம் 1 இற்கு பொறுப்பான ஆசிரியர்களே வரவேற்பது வழமை. இந்த நிலையில் இவ்வருடம் மன்னார் வங்காலை புனித ஆனால் ம.வி பாடசாலையில் தரம் 01 இற்கான  ஆசிரியர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை.

 கடந்த 18 ஆம் திகதி இடம் பெறவிருந்த தரம் 01 மாணவர்களை பாடசாலையில் அனுமதிக்கும் கால்கோல் விழா இதுவரை இடம் பெறவில்லை என பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர்.

 இது வரை வங்காலை புனித ஆனால் ம.வி பாடசாலையில் தரம்-01 இற்கு சேர்ப்பதற்காக 95 மாணவர்கள் பாடசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை மூன்று பிரிவுகளில் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.எனினும் மன்னார் வலயக்கல்வித்திணைக்களம் இது வரை ஆசிரியர்கள் எவரையும் நியமிக்கவில்லை.

 இது தொடர்பாக வங்காலை கிராம மக்கள் மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எம்.சியான் அவர்களுக்கு பல தடவை கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை எனவும்,ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பில் தொடர்ந்தும் அசமந்தப்போக்குடன் அவர் செயற்படுவதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

 உடனடியாக ஆசிரியர்கள் நியமிக்கப்படாத நிலையில் மன்னார் வலயக்கல்விப்பணிமனைக்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதே வேளை தமிழ் பாடசாலைகளான பேசாலை புனித-மரியாள் பாடசாலையில் இவ்வருடம் தரம் 1 இற்கு சுமார் 100 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள போதும் மூன்று பிரிவுகளுக்கும் இது வரை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இதே வேளை தாழ்வுபாடு புனித வளனார் ம.வி பாடசாலையில் நீண்டகாலமாக ஆரம்பப்பிரிவுகளுக்கான  ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 கடந்த காலங்களில் எவ்வித பிரச்சினைகளும் இல்லாத நிலையில் மன்னார் கல்வி வலயம் இயங்கி வந்த போதும் கடந்த ஒரு வருடகாலமாக மன்னார் கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலைகளில் பல்வேறு பிரச்சினைகள் இடம் பெற்று வருவதாகவும்,குறிப்பாக தமிழ் பாடசாலைகள் வலயக்கல்விப்பணிப்பாளரினால் திட்டமிட்டு பின்தள்ளவைக்கப்பட்டு வருவதாக பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர்.
மன்னார் கல்வி வலயத்தில் உள்ள தமிழ் பாடசாலைகள் திட்டமிட்டு பின் தள்ளவைக்கும் செயற்பாடு ஆரம்பம் Reviewed by Admin on January 26, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.